துன்பத்திலிருந்து உத்வேகம் நோக்கிய என் பயணம்: லாரட் கக்குசா

0

தெற்கு கலிபோர்னியாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். எனது தந்தை விற்பனையாளர், ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த எனது தாய் குடும்பத் தலைவி. இது சாதரணமாகவே இருக்கிறது அல்லவா ?

என் தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர், அது மட்டுமல்லாமல் பெண் பித்தர். மனைவியை (சில சமயம் குழந்தைகளையும்) அடிப்பவர். என் அம்மா தன்னால் முடிந்த வரை எங்களை காப்பாற்றினார், ஒரு கட்டத்திற்கு மேல் உதவியை கோர வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். நான் நினைத்ததை விட என் அம்மா மிகுந்த மன உறுதி உள்ளவராக இருந்தார். இறுதியாக என் அப்பாவை விட்டு விலகியது மட்டுமல்லாமல், விவாகரத்தும் பெற்றார். அரசு உதவி பெற்றதுடன் ஒரே நேரத்தில் மூன்று வேலைகள் பார்க்கும் அளவுக்கு இருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் எனது அண்ணன்கள் வேலைக்கு செல்ல நேரிட்டது. காலக் போக்கில் ஓரளவு நிலைமை சரியாகி, ஒற்றை பெற்றோர் குடும்பமாக இருந்தோம்.

தாய்மையா? கல்வியா?

என் நடுநிலை பள்ளி பருவத்தில் நான் கர்ப்பமானேன். இத்தனைக்கும் இப்பருவத்தில் உடல் உறவு கூடாது என்று அறிவுருத்தப்பட்டேன், அவ்வாறு நடந்தாலும் தக்க பாதுகாப்பு அவசியம் என்றே கூறப்பட்டது, அப்படியென்றால் என்ன என்று அறியாதிருந்தேன்? ஆணுறை எங்கு கிடைக்கும் என்று தெரியாதது மட்டுமின்றி அதைப் பற்றி கேட்க கூட துணிச்சல் இல்லை. ஒரு நாள் என் தாயுடன் சண்டை உண்டாயிற்று, "உனக்கு என்ன ஆயிற்று, கற்பமாக இருக்கிறாயா?" என்று அவர் கேட்டார். ஒரு வேளை அவ்வாறு இருக்குமோ என்று தோன்றினாலும் "எனக்கு தெரியவில்லை" என்று கூறினேன். காலம் கடப்பதற்கு முன்னால் அறிந்து கொள்வது நல்லது என்று வலியுறுத்தினார்.

கல்வியை துறந்து அச்சமயத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க நான் விரும்பவில்லை, எனுக்குள் இருக்கும் வலிமையும் அப்பொழுது தான் புலப்பட்டது. பாதுகாப்பான முறையில் சிசுவை கலைக்க முற்பட்டேன், அதற்கான மருத்துவரையும் அணுகினேன், அவர் எனக்கு தைரியமூட்டினார். என் வயிற்றில் என் கையை வைத்து "பின்னொரு நாள் சரியான தருணத்தில் உனக்கு குழந்தை பெற நேரிடும், ஆனால் அதற்க்கான தருணம் இதுவல்ல" என்று அவர் கூறினார்.

பெண்களுக்கு எதிரான கொடுமை என்பது உலக நிகழ்வு

ஒரு நல்ல வேலையில் இருந்ததால் பாதுகப்பாக உணர்ந்தேன். ஆனால் ஒரு நாள் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த போது, என் கழுத்தில் கத்தி, நான் கற்பழிக்கப்பட்டேன். இந்த நிகழ்வு பாதித்தாலும் என்னை மேலும் உறுதியாக்கியது. இதுவே பெண்கள் சம்பந்தமான விஷயத்தில் நான் அக்கறை செலுத்த காரணமாக அமைந்திருக்கலாம்.

நான் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த சமயம் ஒரு அற்புதமான ஆணை சந்தித்தேன், இருவரும் துருக்கி மற்றும் இந்தியா பயணம் மேற்கொண்டோம், காதலித்து மணமுடித்தோம். பீஸ் கார்பஸ் (Peace Corps) என்ற நிறுவனத்தில் பணி புரிய தொடங்கினோம். ஒரு தீவில் அமைந்திருந்த தொலை கிராமத்தில் வாழ்ந்தோம், அங்கிருந்த மக்கள் போலவே வாழ பழகினோம். அங்கிருந்த பெண்கள் கடுமையான உழைப்பாளிகள், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, வாழ்க்கை அமைத்து கொடுப்பதன் மூலமாக அவர்கள் சமுதாயத்தை முன்னேற்ற நினைத்தார்கள். ப்ரீடா என்ற பெண் முப்பத்தியாறு வயதே நிரம்பியிருந்தாலும் அறுபது வயது பெண்மணி போன்ற தோற்றம். பதினான்கு வயதிலேயே திருமணம் முடித்து பதினைந்து முறை கற்பம் தரித்தாள், அதில் எட்டு குழந்தைகளே உயிர் பெற்றன.

இந்தியா கதை

இந்த துறையின் பணி நிமித்தமாக மும்பை வந்தேன். என் வேலை காரணமாக பல முறை இங்கு நிலவும் பாலின ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பெண்களை நடத்தும் விதம் ஆகியவற்றை கண்டுள்ளேன். மும்பை போன்ற பெரும் நகரத்தில் வேண்டுமானால் இது இல்லாமல் போகலாம், ஆனால் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் மிக அதிகம். இங்குள்ள பெண்கள் கல்வி கற்க ஆர்வமிருக்கலாம், அவர்கள் ஆசிரியராகவோ, பொறியாளராகவோ அல்லது மருத்துவராகவோ கனவு இருக்கலாம் ஆனால் இவையெல்லாம் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே. அவர்களால் தங்களின் மற்றும் அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் பங்களிக்க முடியுமா? 

பெண்கள் முன்னேற்றம்

பல பெண்களுக்கு இந்த கனவு நிறைவேற வாய்ப்பில்லை. பருவமடைந்தவுடன் திருமணம் புரிந்தோ அல்லது வீட்டிலேயே முடக்கப்பட்டு விடுகிறார்கள். மேற்படிப்புக்கு வழியில்லாமல் வெளியுலகம் அறியாமலே இருக்கிறார்கள். ஆண் துணையின்றி வெளியே வற அனுமதிப்பதும் இல்லை. அன்றாட வீட்டு வேலைகளிலேயே முடங்கி விடுகின்றனர். தாய்மை அடைந்தவுடன் பொறுப்புகளும் சேர்ந்து விடுகின்றன. தான் எப்படி வாழ வேண்டும், என்னவாக ஆக வேண்டும் என்ற அவரின் எந்த கனவும் எண்ணமும் ஈடேறுவதில்லை.

உலகம் முழுவதும் இதே கதை

இந்திய பெண்கள், ப்ரீடா அல்லது என் கதையாகட்டும் இதில் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. பணக்கார நாடோ அல்லது ஏழை நாடோ எங்கு பார்த்தாலும் இத்தகைய சூழலே உள்ளது. ஒரு பெண் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டோ அல்லது சுதந்திரமாக தீர்மானிக்க முடியாவிட்டாலோ அவள் எப்படி தன் பிள்ளைகள், சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிக்க முடியும். பெண்களுக்கு மட்டுமின்றி சில சமயம் ஆண்களுக்கும் நிலவும் இந்த அடக்குமுறை நாட்டில் மாற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தே காணப்படுகிறது. வளரிளம் பெண்களின் முன்னேற்றம் அவசியம் என்பதே முக்கியம்.

வளரிளம் பெண்களின் முன்னேற்றம் ஏன் முக்கியம்

முன்னேற்றத்தில் இவர்கள் நிராக்கரிக்கப்படுகிறார்கள். நூற்றில் ஒரு பெண் தான் இந்தியாவில் பனிரெண்டாம் வகுப்பு வரை செல்ல முடிகிறது. உலகிலேயே இந்தியாவில் தான் குழந்தை திருமணங்கள் அதிகம் காணப்படுகின்றன. பதினைந்து முதல் பத்தொன்பது வயது பெண்கள் மரணமடைய இளவயது கற்பமே காரணமாக அமைகின்றது. இது மாறுவது ஒன்றும் கடினமல்ல. ஒரு சதவிகிதம் அதிகமான பெண்களை கல்வி கற்க முயற்சியெடுப்பின், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.5 பில்லியன் டாலராக மாறும் வாய்ப்புள்ளது. இது சாத்தியப்படும் பட்சத்தில் நிறைய ஆசிரியர்கள், பொறியியல் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக முடியும்.

அக்டோபர் 11 அன்று கடைபிடிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் மற்றும் அரசு, தனியார் மற்றும் சமூக இயக்கங்கள் மூலம் நடைபெறும் விழிப்புணர்வு ஆகியவையால் இதன் மீதான புரிதலும் மற்றும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

நான் தற்பொழுது பணிபுரியும் தசரா என்ற இயக்கம் , தசரா பெண் கூட்டணி என்ற இயக்கத்தை USAID , UK family foundation , கியவாஹ் டிரஸ்ட் மற்றும் பிரமால் பௌண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் சான்ப்ரான்சிஸ்கோவில் இந்தியர்கள் தரும் உதவிகளை தசரா பிலந்த்ரோபி இயக்கம் மூலமாக பெற்று இங்குள்ள அரசு சாரா இயக்கங்களின் மூலமாக பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறோம்.

என் வாழ்க்கை பயணம் கற்றலுக்கும், உலகத்தை அறியவும், அழகான ஆண் குழந்தைக்கு தாயாகவும் என்னை ஆளாக்கியுள்ளது. நான் சந்தித்த ஒவ்வொரு பெண்ணும் எனக்கு உந்தும் சக்தி தான். எல்லோருக்கும் கனவுகள் இருக்கின்றன. அவர்களின் கனவுகளை நனவாக்குவதோடு, அவர்களுக்குள் இருக்கும் சக்தியை வெளிக்கொணர்ந்து அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்வதே என் ஆர்வம்.

ஆங்கிலத்தில்: லாரட் கக்குசா | தமிழில்: சந்தியா ராஜு

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் யாவும் இவரின் சொந்த கருத்தாகும். யுவர்ஸ்டோரி பிரதிபலிக்கும் கருத்தாக இது இடம்பெறவில்லை