காசை போட்டால் குடிநீர் வழங்கும் இயந்திரம்: 'அம்ருத்தாரா' திட்டம்

பொது இடத்தில் தரமான குடிநீர் வழங்குவதே அம்ருத்தாராவின் லட்சியம்.

1

மின் அமீன், பயணித்த ரயிலின் தளமெங்கும் பிளாஸ்டிக் தண்ணீர்ப் புட்டிகள் நசுங்கிக் கிடந்தன. அது ஒரு போர்க்களமாகக் காட்சியளித்தது. ரயில் சேரிடத்தை அடைந்தபோது அமீனுக்குள் பளிச்சிட்ட சிந்தனை, சுற்றுச் சூழலுக்கு இசைவான ஓர் முடிவை நோக்கி தள்ளியது. அந்த முடிவில் உதயமானது தான் "அம்ருத்தாரா" (Amrutdhara). நீங்கள் சுற்றுச் சூழலில் அக்கறை கொண்டவர் என்றாலும் தாகமெடுக்கிறபோது தவிர்க்க முடியாமல் புட்டி நீரைத் தானே நாட வேண்டியிருக்கிறது. அந்தச் சிக்கலான பிரச்சனைக்குத் தீர்வு கண்டது அம்ருத்தாரா.

குடிக்கத் தகுந்த நீர் பொதுவெளியில் கிடைத்தால் பிளாஸ்டிக் புட்டிகளைத் தவிர்க்கலாம் என்ற எண்ணம் தான் அம்ருத்தாராவைத் துவக்குவதற்கு உந்து சக்தியாக இருந்தது. புட்டியில் அடைக்காத நீரைக் பொது இடங்களில் காசுக்கு அளிக்கிறது அம்ருத்தாரா இயந்திரம்.

மின் அமீனும் அவரது இணை நிறுவனரான அக்ஷய் ரூங்தாவும் பரஸ்பரப் புரிதலோடு அம்ருத்தாராவை தொழில்ரீதியாக வடிவமைத்து, நிதியாதாரத்தைத் திரட்டி அதன் பின்புலமாக இருந்து வருகின்றனர். ஆனால் அதே சமயம் இவர்கள் இருவரும் மீளாற்றல் தொடர்பான திட்டங்களிலும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

புதுச்சேரி, ஆரோவில்லைச் சேர்ந்த இவர்கள், சுற்றுச் சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் புட்டிகளின் பயன்பாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் பொருட்டு சோதனை வெள்ளோட்டமாக 2013 இல் அம்ருத்தாராவை துவக்கினார்கள். ‘’முதலாண்டில் எளிய சோதனை முயற்சியாக பாண்டிச்சேரியில் இரண்டு இடங்களில் குடிநீரை சில்லரை விலைக்கு மக்களிடம் விற்கத் துவங்கினோம். அதன் நோக்கம் என்னவென்றால் விற்கப்படும் தண்ணீரைச் சில்லரையில் வாங்குவது பற்றிய மக்களின் கண்ணோட்டம் என்ன? அதன் சுத்தம், சுகாதாரம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதுதான்’’ என்கிறார் அக்ஷய்.

நிறைய உரையாடல்கள் நடத்தியும், குறுக்குக் கேள்விகள் கேட்டும், இணைய தளத்தின் மூலமாக, நேரடியாக எனப் பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், நாங்கள் புரிந்து கொண்டது, மக்களுக்குத் தாகம் எடுத்தால் அவர்கள் உடனடியாக நாடுவது கைக்கெட்டிய தொலைவில் கிடைக்கும் நீரைத்தான். ‘’அந்தவகையில் எங்களது அம்ருத்தாரா நீர் நிரப்பு மையங்கள் அணுகுவதற்கு வசதியான தொலைவில் இருந்ததால் அங்கே வாங்குவதே மக்களின் முதன்மை விருப்பமாக இருந்தது.’’ என்று அக்ஷய் மேலும் கூறுகிறார். ‘’அந்த காரணத்திற்காகவே நீர் வழங்கல் இயந்திரத்தைத் தனியிடத்தில் நிறுவதற்குப் பதிலாக மக்கள் வழக்கமாகச் செல்லும் தெருமுனைக் கடைகளில் நிறுவினோம்’’

தற்போதுள்ள முறைபடி, இயந்திரத்தில் பணம் போட்டால் தொகைக்கேற்ப நீர் வழங்கும் சாதனத்தைப் பொருத்தி இருக்கிறார்கள். ‘’இந்த முறையில் பிளாஸ்டிக்கில் நீரை அடைப்பதற்கான செலவு மிச்சமாவதால் புட்டி நீருக்கு அளிப்பதில் பாதி விலையிலேயே எங்களால் நீர் வழங்க முடிகிறது’’ .

நீரை எளிமையாக்குவது அவர்களின் ரத்தத்தில் ஊறிப் போன அம்சமாகி விட்டது. அம்ருத்தாரா - சிக்கனமான செலவில், புட்டியிலடைக்காத நீரை இலகுவாகவும் கிடைக்கச் செய்கிறது. அங்கங்கே உள்ள அக்கம்பக்கக் கடைகளின் வலைப்பின்னலுடன் தங்களை இணைத்துக் கொண்டதோடு தங்களது தொழில் நுட்பத்தையும் எளிமையானதாக மாற்றிக் கொண்டார்கள். ‘’காசு போட்டால் பொருள் தரும் இயந்திரம் நமக்குப் புதிதல்ல. அதேபோல் நீர் வழங்கலும் புதிதல்ல. இந்த இரண்டு முறைகளையும் இணைத்து அதை நீர் வழங்கும் இயந்திரமாக நிறுவியது தான் எங்களது தொழிலின் புதுமையாகும்’’ முன்புற திரை, நீர்க்குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் நீரின் தரத்தை அறிந்து கொள்ளலாம். தரம் பற்றிய விபரம் அதில் காட்டப்படும். பணம் செலுத்துவதற்கான துளையில் பணத்தைப் போட்டதும் நீர் கொட்டும். இயந்திரத்தில் உள்ள குமிழ்த் திருகல் வழியாகவோ அல்லது சுத்தீகரிப்பு குழாய் வழியாகவோ நீரைப் பிடித்துக் கொள்ளலாம்.

இயந்தரத்தின் முன் பக்கம்
இயந்தரத்தின் முன் பக்கம்

சில மாதங்களுக்கு முன்னர் அம்ருத்தாரா தனது சேவையைத் தொடங்கியது. அதற்கு முன்னர் சென்னையில் ஒரு கடையில் சோதனையோட்டம் நடத்தினோம். நல்ல லாபகரமாக இருப்பதாக, கருத்துக்கள் பெற்ற பிறகே துவக்கினோம். இருந்தாலும் இயந்திரத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் எழுவதாக கடைக்காரர் புகார் கூறியதால் இயந்திரத்தின் செயல் நுட்பத்தை சீர்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டது எங்கள் குழு. இயந்திரம் மேலும் நவீனப்படுத்தப்பட்டது, ஆனால் அதன் எளிமை மாறவில்லை.

நீர் விற்பனை மூலமாகக் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு போதுமான வருமானம் பெற முடியாது தான். ‘’ஆரம்ப நிலையில் இயந்திரங்களை விற்பதன் மூலமாகவும், வருடாந்திர தர ஒப்பந்தங்கள் மூலமாகவும் பணத்தைத் திரட்டினோம். மற்றபடி பிறருக்கு அளிக்கும் ஆலோசனைகள் மூலமாகவும் நாங்கள் சிறிதளவு பணம் சம்பாதிப்போம். நாங்கள் ஆரோவில்லில் இருப்பது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஏனென்றால் பொதுவாகவே எங்கள் சமூகம் உதவி மனப்பான்மையும், கூட்டுணர்வும் உடையது’’ என்றார் அக்ஷய். இப்போது திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. இந்தியாவின் அனைத்துப் பெரு நகரங்களுக்கும் இந்த சேவையைக் கொண்டு சேர்ப்பதே குழுவின் லட்சியம். விரைவில் பெங்களூருவிற்கு விரிவு செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அதுதான் புதிய திட்டத்தைத் துவக்குவதற்கு நிலவியல் ரீதியாகப் பொருத்தமான பெருநகரம்.

‘’எத்தனையோ சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் மிகவும் சிக்கலான விஷயம் என்னவென்றால் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு மற்றவர்கள் தரும் விமர்சனங்களும், காட்டுகிற அவநம்பிக்கைகளும் தான். ஆகையால் நாங்கள் பங்குதாரர்களைத் தேட வேண்டிவரும். அல்லது எங்களுக்கு நாங்களே முதலீடு செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் தன்னை முழுநேரமும் அம்ருத்தாராவிற்கு அர்ப்பணித்துக் கொள்வதற்காக ஹெல்சிங்கி முதுகலை பட்டத்தை பாதியில் விட்டு விட்டு வந்துள்ள அக்ஷய். இறுதியாக – ‘’நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, என்ன செய்கிறோம், எதற்காக இதைச் செய்கிறோம் என்பதைத்தான். அதை மட்டும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தால் போதும் நமக்கு நாமே மனதைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். நம் மீது படிந்துள்ள துயரங்களையும், கஷ்டங்களையும் உதறியெறிந்து விட்டு தொடர்ந்து முன்னோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கலாம். அது தான் எப்போதும் பயன் தரக்கூடியது’’