ஒரே தொடலில் உறுப்புக் கோளாறுகளை குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!

0

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழு, புதிய ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இது தோலினுள் உள்ள உயிரணுக்களை உறுப்புகளுக்கு தேவையான ஒரு அம்சமாக மாற்ற உதவும் துளையில்லா கருவி ஆகும். பாதிக்கப்பட்ட திசுக்கள், ரத்த குழாய்கள் மற்றும் நரம்புகளை சரிசெய்ய உதவும். 

Tissue Nanotransfection (TNT) என்று அழைக்கப்படும் இந்த கருவியை பயன்படுத்த லேப் வசதிகள் தேவைப்படாது. இது உடனடியாக, டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ-வை உயிருள்ள தோல் செல்களுக்குள் செலுத்தி அதன் செயல்பாட்டை மாற்றிவிடும். இது ஒரு மின்சார சார்ஜ் மூலம் நோயாளிகளுக்கு செய்யப்படும். இந்த சிகிச்சையில் வலி பெரிதாக இருக்காது என்றும் விரைவில் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைந்து, உறுப்புகளின் செயல்பாட்டையும் சீர் செய்யும். ஓஹையோ பல்கலைகழகத்தின் இயக்குனர் சந்தன் சென் இது பற்றி கூறுகையில்,

“இந்த நேனோ சிப் தொழில்நுட்பத்தால், ஒரே டச் மூலம் நம்முடைய தோல் செல்களை எந்த உறுப்பின் கூறுகளாகவும் மாற்றமுடியும். இந்த செயல்முறை சில வினாடிகள் மட்டுமே பிடிக்கும், மேலும் இது துளையில்லா முறையாகும். இந்த சிப் உங்கள் உடலில் இருக்கப்போவதில்லை, ஆனால் செல் மாற்றங்கள் தொடங்கிவிடும்,” என்றார்.

நேச்சர் நேனோடெக்னாலஜி என்ற ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, ஆராய்ச்சியாளர்கள் குழு எலி மற்றும் பன்றிகளிடம் சோதனை செய்து வெற்றியடைந்ததாக குறிப்பிட்டுள்ளது. மோசமான காயங்களுடன் இருந்த இடத்தில் உள்ள தோல் செல்களில் இக்கருவி கொண்டு செயல்பட்டு, ஒரு வாரத்தில் அங்குள்ள ரத்த குழாய்கள் சீராகி, அடிப்பட்ட கால் இரண்டாம் வாரத்தில் குணமடைந்து காப்பாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

ஆராய்ச்சியாளர்கள், மூளையில் அடிப்பட்டு செயலிழந்த எலியின் உடம்பில் இதே சிகிச்சையை செய்து செல்களை குணப்படுத்தியுள்ளனர். 

”இதை யோசித்து பார்த்தால் நம்பமுடியாதது போல் இருக்கும். ஆனால் இது சாத்தியமே. இது 98 சதவீதம் வெற்றிகரமாக வேலை செய்துள்ளது,” என்றார் சென். 

அடுத்த ஆண்டு முதல் மனிதர்களிடையே இந்த சிகிச்சை முறை சோதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

கட்டுரை உதவி : IANS

Related Stories

Stories by YS TEAM TAMIL