இது புதிய யதார்த்தம் பிரதமர் அவர்களே!

0

முன்னணி பொருளாதார வல்லுனரான அனடோலே காலேட்ஸ்கி(Anatole Kaletsky) சந்தையை சார்ந்ததாகவும் இல்லாத, அனைத்தும் அரசு சார்ந்ததாகவும் இல்லாத புதிய பொருளாதாரம் உருவாகிக்கொண்டிருப்பதாக 2010 ல் கணித்திருந்தார். 2008 ம் ஆண்டின் பொருளாதார தேக்க நிலையின் தாக்கத்தால் உலகம் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அவர் இந்தக் கணிப்பை வெளியிட்டார். பொருளாதார வளர்ச்சியில் மூன்று கட்டங்கள் முடிந்துவிட்டதாகவும் நான்கவாது கட்டம் துவங்கியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். 

அவர் இவ்வாறு எழுதுகிறார்,- "19 ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் 1930 வரை சுதந்திர சந்தை யுகமாக இருந்தது. வர்த்தகத்தில் அரசு குறுக்கிட அனுமதிக்கப்படவில்லை. பின்னர் மாபெரும் தேக்க நிலை மற்றும் சோவியத் யூனியன் மேற்கத்திய உலகின் மனப்போக்கை மாற்றி, சந்தையை அப்படியே விட்டுவிடக்கூடாது என்றும், அரசு மேலும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு, நலவாழ்வு அரசாக இருக்க வேண்டும் என்ற புதிய கருத்து உண்டானது”. 

இது தான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூஸ்வெல்ட் பின்பற்றிய புதிய ஒப்பந்த கோட்பாடாக இருந்தது. திடிரென பார்த்தால் அரசு எல்லாம் அறிந்த பெரியண்ணனாக மாறியது. ஆனால் 70 களின் கச்சா எண்ணெய் நெருக்கடி, வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை மீண்டும் சந்தை சார்ந்த முறையை முயன்று பார்க்க வைத்தன. புதிய பொருளாதார அடையாளத்தின் ரட்சகர்களாக ரொனால்டு ரீகன் மற்றும் மார்கரெட் தாட்சர் உருவானார்கள். அரசு சந்தை முன் மீண்டும் தன் ஆதிக்கத்தை இழந்தது. 

தனியார்மயம் புதிய வடிவில் மீண்டும் வந்தது. இரண்டாம் கட்ட பொருளாதார வளர்ச்சிப் போல அல்லாமல் இந்த முறை அரசு கண்டனத்திற்கு இலக்காகி, கட்டுப்பாடுகள் கேலி செய்யப்பட்டு, சந்தை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அரசு மற்றும் தேவாலயம் சேர்ந்திருக்க கூடாது என கூறப்பட்டது போல முழுமையான, ரிஸ்க் இல்லாத பொருளாதார வளர்ச்சிக்கு அரசு மற்றும் பொருளாதாரம் தனித்தனியே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் 2008 பொருளாதார நெருக்கடி இந்த வாதத்தில் உள்ள பலவீனத்தை உணர்த்தி, வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை புதிய வழி காணத் தூண்டியது.

புதிய கருத்து முழுமையாக உருப்பெறததால் தற்போதைய நெருக்கடி மேலும் தீவிரமானதாக அச்சுறுத்துகிறது .உலக வரலாற்றில் முதல் முறையாக இந்தியா முக்கிய பங்குதாரராக இருப்பதாலும்,பொருளாதார மறுமலர்ச்சி நம்மை அதிகம் சார்ந்திருப்பதாலும் இது இன்னும் அச்சுறுத்துவதாக இருக்கிறது. ஆனால் அரசின் மோதல் அணுகுமுறை காரணமாக பொருளாதார மறுமலர்ச்சி நிகழாமல் இருப்பது தான் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. திருவாளர் மோடி மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் பிரதமராக தேர்வானார். மாற்றத்தை கொண்டுவரக்கூடிய மனிதராக அவர் கருதப்பட்டார். மன்மோகன் சின் அரசின் கடைசி ஆண்டுகளில் மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்திற்கு இதனால் புதுவாழ்வு உண்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நிகழவில்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோளாக கருதப்படும் சென்செக்ஸ் சரிந்து கொண்டிருக்கிறது. 27,000 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் இப்போது 24,000 புள்ளிகளுக்கு கீழே சரிந்துள்ளது. இது நிதி அமைச்சருக்கு இழுக்கு. ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 70 க்கு சரிந்துள்ளது.அது மேலும் மேலும் பலவீனமாகி வருகிறது. "நவம்பர் மாத்த்தில் எட்டு முக்கிய துறைகளின் செயல்பாடு மோசமாகியுள்ளது. பத்தாண்டுகளில் மோசமாக அவற்றின் உற்பத்தி 1.3 % சரிந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மெல்ல வளர்ந்து வந்த உற்பத்தி நவமரில் 4.4 % சரிந்துள்ளது” என இந்து நாளிதழ் தெரிவிக்கிறது. "கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9.8 % மாக உயர்ந்த நிலையில் தொழிற்சாலை உற்பத்தி குறியீடு நவம்பரில் 3.2 % குறைந்தது. 2011 க்கு பிறகு மோசமான செயல்பாடு இது” என்றும் அது மேலும் குறிப்பிடுகிறது. "இந்த ஆண்டு இந்தியா 7 முதல் 7.5 சதவீதம் வளரும் என எதிர்பார்க்கப்பட்டாலும் வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி அதிக கடன் சுமை, வங்கித்துறையின் நெருக்கடி மற்றும் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பொய்த்துப்போன பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளது” என்று எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது.

கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்திருப்பது இந்தியாவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. மோடி பதவியேற்ற போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 133 டாலர் என இருந்த நிலையில் இப்போது பீப்பாய் 30 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. இது பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த உதவியிருக்கிறது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் மிகமோசமான பொருளாதார செயல்பாட்டை சந்தித்து வரும் சீன நெருக்கடி காரணமாக சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கம் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி மாத செயல்பாடு பத்தாண்டுகளில் மிக மோசமானதாக அமையும் வகையில் சீன சிக்கல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாங்க் ஆப் அமெரிக்கா மெரில் லின்ச் தகவல் படி, "ஜனவரியின் முதல் மூன்று வாரங்களில் சர்வதேச சந்தைகளில் 7.8 லட்சம் கோடி டாலர் இழப்பை உண்டாக்கியுள்ளது”. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் தேக்க நிலையை எதிர்கொள்ளும் வாய்ப்பு 15 சதவீத்த்தில் இருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். இது உலக பொருளாதாரத்திற்கு மோசமான அறிகுறியாகும்.

ஆனால் இந்த நெருக்கடியை வெற்றிகரமாக கடப்பதற்கான நம்பிக்கை அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. 1985 க்குப்பிறகு பெரும்பான்மை பலம் கொண்ட முதல் அரசு என்பதை மீறி, மோடி அரசால் ஆரம்ப மாதங்களில் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வர முடியவில்லை. மக்களவையில் உள்ள பலம் சட்டத்தை நிறைவேற்ற உள்ள தடைகளை எதிர்கொள்ள உதவும் என் அது தவறாக நினைத்துவிட்டது. அரசு மேலும் சமரச நோக்கு கொண்டிருந்தால், மூர்கமான அணுகுமுறை இல்லாமல் இருந்திருந்தால், சிக்கலுக்குக் காரணமாக அமைந்த ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றி இருக்கலாம். தில்லி மற்றும் பிஹாரில் பாஜாகவுக்கு ஏற்பட்ட தோல்வி பிரதமரை பலவீனமாக்கியுள்ளது. எதிர்கட்சிகள் இரத்தத்தின் சுவை கண்டுவிட்டன. மோடி அரசு இளைப்பாறுவதை அவை விரும்பவில்லை.

சந்தை தானாக எழுச்சி பெறாவிட்டால் அரசு தலையிட வேண்டும். தொழில்துறை தலைவர்கள் நம்பிக்கை பெறும் வகையிலான சூழலை உருவாக்கி, துணிச்சலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதற்குத் தகுந்த ஆதரவு தேவை. ஆனால் தற்போதைய நிலையில் அரசு இதை உணர்ந்ததாக தெரியவில்லை. புதிய பொருளாதார மாதிரி உண்டாக அரசு மற்றும் சந்தை இடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை. இந்த இரண்டும் எதிர் எதிர் திசையில் செயல்பட்ட காலம் மலையேறிவிட்டது. நாம் முழுமையான ஜனநாயகம் அல்ல, மேற்கத்திய நாடுகள் போல அல்லாமல் இன்னும் உருப்பெற்று வரும் பொருளாதாரம் என்பதை இந்தியா உணரவேண்டும். எனவே நம் உள்ள பணி மிகவும் கடினமானது. பொருளாதார சவாலை எதிர்கொள்ள இந்திய அரசு மேலும் பணிவானதாக இருந்து, சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுசரித்துச்செல்ல வேண்டும். ஜனநாயகத்தின் அனைத்து முக்கிய அமைப்புகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கு தங்களுக்கு இருப்பதை எதிர்கட்சிகள் உணரச்செய்ய வேண்டும். இவற்றி அரசு தோற்றுவிட்டது.

அரசை நடத்துபவர்களுக்கு காலேட்ஸ்கியிடம் இருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "அரசியல்வாதிகள் ஊழல் செய்பவர்களாக, வங்கியாளர்கள் பேராசை கொண்டவர்களாக, வர்த்தக துறையினர் செயல்திறனற்றவர்களாக, வாக்காளர்கள் முட்டாளகளாக இருப்பதால் மட்டும் அரசு மற்றும் சந்தை இரண்டும் தவறுகள் செய்யும் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் மட்டும் அல்லாமல், உலகம் மிகவும் சிக்கலானதாகவும், கணிக்க முடியாமலும் இருப்பதாலும், முடிவெடுக்கும் தன்மை சீராக இருக்க, பொது கொள்கை வகுப்பில் நடைமுறை யதார்த்தமே எப்போதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்”. 

திருவாளர் மோடி அவர்களே நீங்கள் மேலும் நடைமுறை யதார்த்த்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதோடு புதிய உலகில் பழைய சாதனங்கள் செயல்படாது என்பதையும் உணர வேண்டும்.

ஆக்கம்: அசுடோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)