உயரம் கவர்ச்சிக்குத் தடையில்லை... 

3 அடி 4 இன்ச் உயரத்தில் மாடலிங்கில் கலக்கும் துரு ப்ரெஸ்தா

0

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்

திண்ணியர் ஆகப் பெறின்’

இந்தக் குறளின் பொருள் யாருக்கு ஒத்துப் போகிறதோ இல்லையோ, நிச்சயம் துரு ப்ரெஸ்தாவுக்கு ஒத்துப் போகும்.

யார் இந்த துரு ப்ரெஸ்தா?

மாடலாக இருக்க வேண்டும் என்றாலே குறைந்தபட்சம் 5 1/2 அடிக்கும் அதிகமான உயரத்தில் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால், இதனை உடைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த துரு.

21 வயது மங்கையான துருவின் உயரம் 3 அடி 4 இன்ச் மட்டுமே. உடற்கட்டும் கொஞ்சம் பூசியது போன்றே உள்ளது. ஆனால், தன்னம்பிக்கை எனும் மன அழகால் தனது புற அழகைக் கூட்டி இன்று மற்ற மாடல்களுக்கு சவால் விடும் வகையில் புகழ் பெற்ற மாடலாக வளைய வருகிறார் துரு.

“என் தன்னம்பிக்கையின் நிறத்தை மாடலிங் மேலும் அதிகரித்துள்ளது. கேமராவிற்கு முன் நிற்கும் போது, நான் இன்னும் அதிகமாக செக்ஸியாக உணர்கிறேன். அப்போது வேறொரு துருவாகவே என்னை நான் உணர்கிறேன். உண்மையில் அப்போது என் உணர்வுகளைச் சொல்வதற்கு வார்த்தைகளேயில்லை. அதனாலேயே கேமராவின் முன் நிற்பது எனக்கு மிகவும் பிடிக்கிறது,” என்கிறார்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நெவாடாவில் பிறந்தவர் துரு ப்ரெஸ்தா. பிறவியிலேயே எலும்பு வளர்ச்சிக் குறைவு நோயால் பாதிக்கப்பட்ட அவரால், மற்றக் குழந்தைகளைப் போல் வயதிற்கு ஏற்ற உயரத்தை, உடல்கட்டைப் பெற இயலவில்லை. துருவின் குடும்பத்தில் அவர் மட்டுமே இத்தகைய குள்ளத்தன்மை நோயால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை தான் வாழ்க்கை

ஆரம்பத்தில் இவரது உயரம் மற்றும் உடல் தோற்றத்தைப் பார்த்து மற்றவர்களால் அதிக கேலிக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் அவற்றை தன் மூளையில் ஏற்றிக் கொள்ளாமல் தனது லட்சியம் மாடலாக வேண்டும் என கடுமையாக உழைத்திருக்கிறார்.

“உடல் கவர்ச்சிக்கு உயரம் ஒரு விஷயமில்லை. 6 அடி உயரம் உள்ள பெண்ணிற்கு உள்ள அதே கவர்ச்சி, 3 அடி உயரம் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கும் உண்டு. இதனை வெளி உலகத்திற்கு காட்டவே எனது மாடலிங் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுகிறேன்,” என்கிறார் துரு,

எந்த உயரமும், உடல்வாகும் ஆரம்பத்தில் துருவின் பலவீனங்களாகக் கருதப்பட்டதோ, இன்று அவையே அவற்றின் சிறப்பம்சமாக மாறி பலமாகியுள்ளது. தன் தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் ஒட்டு மொத்த மாடலிங் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள. பலவீனத்தையே பலமாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார்.

“பேஷன் உலகத்தில் இருக்கும் அனைவரும் தாங்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். எல்லோரும் நடக்கும் பாதையில் அனைவரும் நடக்க வழி வேண்டும். அவர்கள் சக்கர நாற்காலியில் இருந்தாலும் சரி, ஊன்றுக்கோளில் இருந்தாலும் சரி.”

வாழும் உதாரணம்

துருவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர்.

உயரம் மற்றும் உடல்கட்டுப் பிரச்சினையால் தங்களது கனவை, இலக்கை அடைய முடியாது என மனதால் சோர்ந்து போகிறவர்களுக்கு நிச்சயம் தனது வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் துரு.

தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என மனதில் நினைத்துவிட்டால், எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதே துரு ப்ரெஸ்தா நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கைப்பாடம்.

துருவின் மாடலிங் படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் முகவரியில் பார்க்கலாம்... https://www.instagram.com/g0lden.bebe/?utm_source=ig_embed&action=profilevisit

Related Stories

Stories by jayachitra