சுற்றுச்சூழல் மாசை தடுக்க வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்ய உதவும் புதிய கொள்கை விரைவில்!

0

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு ஏதுவாக வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த உதவும் வகையில் வாகன கழிவுகளை நிர்வகிப்பதற்கான பிரத்யேக கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய கப்பல், நெடுஞ்சாலை மற்றும் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

சென்னையில்  இந்திய தொழில் கூட்டமைப்பு சி.ஐ.ஐ மற்றும் இந்திய பிசினஸ் லைன் நிறுவனம் இணைந்து நடத்திய 2017-18 –க்கான பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கியமானக் காரணம் 15 வருடங்களுக்கு மேல் உள்ள வாகனங்களே காரணம் என்று கூறினார். இதனைக் கருத்தில் கொண்டே வாகனக் கழிவுகளைக் நிர்வகிப்பதற்கான பிரத்யேகக் கொள்கை வெளியிடப்படுவதாக அவர் கூறினார்.

இந்தக் கொள்கையை அடிப்படையாக கொண்டு சென்னையில் வாகன உற்பத்தி குழுமம் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் சரக்கு சேவை வரி சட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று தெரிவித்த அவர் இது சட்ட விதிகளை எளிமைப் படுத்துவதுடன் ஊழலை முற்றிலுமாக அகற்றி விடும் என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின் உள்கட்டமைப்பு மின் உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்குதல் வேளாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

நெடுஞ்சாலைத் துறையை பொறுத்தமட்டில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கப்பல் போக்குவரத்துத்துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

நெடுஞ்சாலைத் துறையில் தற்போது நாள் ஒன்றுக்கு 18 கி.மீ வரை சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் மார்ச் மாதம் இறுதிக்குள் இது நாள் ஒன்றுக்கு 30 கி.மீ வரை அதிகரிக்க தமது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக அரசு பொறுப்பேற்றப்பின் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை உட்பட 12 பெரிய துறைமுகங்கள் லாபம் ஈட்டியிருப்பதாகவும் கூறிய அமைச்சர் இது கடந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் கோடியை எட்டி இருப்பதாக தெரிவித்தார்.

2022-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வீடு இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் இந்த திட்டத்தின் கீழ் கடன்பெறுவோர்க்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் என்றும் கூறினார்.