பேரிடர் பொழுதில் செயல்பாடே முக்கியம்... ஒற்றுமையாக! 

0

'நேக்கி கர் அவ்ர் தர்யா மெய்ன் டால்’ என்றொரு இந்தி பழமொழி இருக்கிறது. நல்லது செய்து விட்டு நகர்ந்து விடு என்று பொருள் வரக்கூடிய பழமொழி. நீங்கள் செய்தவற்றை பற்றி பேசாமல், யாரிடமும் என்ன செய்தீர்கள் என்று சொல்லிக் காட்டாமல் இருக்கவேண்டும் என்பது இதன் மையக்கருத்து. இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களான நம்மில் பலருக்கு இது தெரிந்திருக்கக்கூடிய ஒன்று தான்.

உதவி செய்வது குறித்து அடக்கமாக இருக்க வேண்டும் என்று நம் பெற்றோர்கள் சொல்லி வளர்த்தார்கள். மாரஸ் சயின்ஸ் வகுப்புகள் நம்மோடே இருந்தன. நம்மை மிக நல்லவர்களாக, உணர்வுப்பூர்வமானவர்களாக, மனிதம் குறித்த விழிப்புணர்வு இருப்பவர்களாக - பெரும்பாலான நேரங்களில் நம்மை இந்த வணிக உலகிற்கு தகுதி இல்லாதவர்களாக அந்த பாடங்கள் வடிவமைத்தது. இவை எல்லாம், நம் மனதின் அடியாழத்தில் இன்னும் பதிந்து இருக்கின்றன என்பது உண்மை. 

வகுப்பில் முதல் மாணவராக வந்தால், மாடியில் நின்று அது குறித்து தம்பட்டம் அடிக்க கத்தவில்லை. தாய் தன் குழந்தைக்கு உணவளித்து விட்டு தான் பட்டினியாக இருப்பதாக சொல்லிக் காட்டுவதை போலவே, இப்படி சொல்வதும் மோசமானதாகவே கருதப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது போலவே தான், பிறருக்கு உதவுவது அல்லது ஒரு நல்ல நோக்கிற்கு ஆதரவளிப்பது குறித்து பேசுவதும்.

கேரளாவில் வெள்ளம் வந்த பிறகு, அங்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்து நிறைய சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. நல்லது செய்கிறீர்கள் என்றால், ஏன் அதைப்பற்றி பேச வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள். அல்லது, அதைப்பற்றி பேசியே ஆக வேண்டும் என்றால், வெளிச்சத்தில் இல்லாத போது பேசலாமே? நன்கொடை அளிக்கிறீர்கள் என்றால், அந்த தொகையை சொல்லியே ஆக வேண்டுமா?

ஆனால், இப்படி யோசித்து பார்ப்போம், நம்மில் எத்தனை பேர் நன்கொடை அளிக்க முன் வருகிறோம்?

இந்தியாவில், தொண்டு செய்வது என்பது மத நிறுவனங்களுக்கும், காரியங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் மட்டுமே பெரும்பாலும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில், அநேக நேரங்களில் நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் பெரிய அளவில் காட்டப்படும். அதாவது, பாரம்பரியமாகவே, நாம் நம்முடைய ஈகைச் செயலை பற்றி பேசாமல் ஒதுங்கிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. 

மேலும், இதையெல்லாம் மதிப்பீடு செய்ய நாம் யார்? அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும், இப்படி நன்கொடை அளிப்பது வழக்கமான, சாதாரணமான காரியம். வெற்றி பெறுபவர்கள், சமூகத்திற்கு திருப்பி அளிக்கிறார்கள். நன்கொடை அளிப்பதை பற்றி எல்லாம் பேசுவதாக இருந்தாலும், வேறு யாரிடமும் சொல்லாமல் செய்வார்கள். இந்தியாவிலும் இதையே செய்யும் நிறைய பேரை எனக்கு தெரியும்.

இந்த வாதத்திற்கு என்னுடைய பதில் இது தான். நீங்கள் உதவி செய்துவிட்டு அதைப்பற்றி பேசாமல் இருந்தால், அது நல்ல காரியம் தான். உதவி செய்ததை பற்றி பேச வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அது மற்றவர்கள் மீது ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என நினைக்கலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறதில்லையா? என்ன நினைக்கிறீர்கள்? குறிப்பாக பெருமளவு ஃபலோவர்ஸ் இருக்கும் நபர்களுக்கு இது பொருந்தும்.

தனிப்பட்ட முறையில், தங்களுடைய முயற்சிகள் குறித்து பேசும் தொழில்முனைவோரை நான் அறிவேன். மேலும், பல வருடங்களாக எனக்கு அறிமுகமான ஒருவர் தான் என்ன செய்கிறோம் என்பதை பற்றி பேசாமலேயே, எப்படி உதவிக் கொண்டிருக்கிறார் என்பதையும் நான் அறிவேன். அவர் ஒரு முறை பேசிவிட்டாலே, உதவி செய்வது என்பது எவ்வளவு தன்னிச்சையானது என்பதை நம்மால் பார்த்துவிட முடியும் இல்லையா? இவ்வகையில், தக்க நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என மற்றவர்களை தூண்டவும் இந்த பதிவுகள் உதவும்.

பேரிடர் பொழுதில், நீங்கள் என்ன உதவி செய்ய முடியும் என்பது மட்டுமே முக்கியம்; மற்றவை எல்லாமே வீணான விவாதங்கள் மட்டும் தான். நாம் மனதளவில் நேர்மையாக இருக்க வேண்டியது கட்டாயம் என்பதையும் மறக்காமல் இருப்போம்.

என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவோம். செயல்படுத்துவோம். நீங்கள் உங்கள் பங்கை இன்னும் செய்யவில்லை என்றால், என்னென்ன வழிகளில் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

ஆங்கிலத்தில் - ஷ்ரத்தா ஷர்மா | தமிழில் - ஸ்னேஹா