சைக்கிள் ஓட்டியபடி ரூபிக் கியூப்களின் புதிரை விடுவித்து சாதனை படைத்த சென்னை பள்ளி மாணவர்!

0

சைக்கிளை ஓட்டியவாறு ரூபிக் கியூப் புதிர்களை விடுவித்து உலக சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயாவில் 12ம் வகுப்பு தேர்வு பெற்றுள்ள பி.கே.ஆறுமுகம் என்ற மாணவர் இந்த சாதனையை இப்போது நிகழ்த்தி உள்ளார். சைக்கிளை ஓட்டியவாறு தரையில் கால் பதிக்காமல் இந்த ரூபிக் கியூப் புதிர்களை அவர் தொடர்ந்து விடுவித்தார். மிகவும் சவால் நிறைந்த இந்த சாகசத்தை அவர் 6 மணிநேரம் 7 நிமிடத்தில் நிகழ்த்தி 1010 முறை கியூப்களின் புதிர்களை விடுவித்தார்.

இதற்கு முன்பு இந்த சாதனையை ஸ்ரீவத்ஸ் ராஜ்குமார் என்பவர் ஏழுமணி நேரம் 20 நிமிடங்கள் சைக்கிளை ஓட்டியவாறு 751 முறை இந்த கியூப் புதிர்களை விடுவித்துள்ளார். இந்த சாதனை 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைக்க ஆறுமுகம் திட்டமிட்டு இதற்கான பயிற்சியை மேற்கொண்டார். 

தினமும் பலமணிநேரம் இந்த பயிற்சியில் அவர் ஈடுபட்டார். நேற்று காலை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளியில் உள்ள கூடை பந்து மைதானத்தில் இந்த சாதனை படைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கின்னஸ் சாதனையை ஏற்படுத்துகிறாரா என்று பார்க்க இரண்டு நடுவர்கள் அகுலா பவன் குமார் மற்றும் ஹரி அனிருத் ஆகியோர் வந்திருந்தனர். ஏராளமானோர் முன்னிலையில் இந்த சாதனை தொடங்கிவைக்கப்பட்டது. குழப்பிவைக்கப்பட்ட கியூப்களை வரிசையாக கொடுக்க சைக்கிளை ஓட்டியவாறு ஆறுமுகம் இந்த கியூப்களை சுழற்றி வண்ணங்களை ஒன்று சேர்த்தார்.

ஏற்கனவே 7 மணிநேரம் 20 நிமிடத்தில் நிகழ்த்தப்பட்டிருந்த சாதனையை ஆறுமுகம் 4 மணிநேரம் 28 நிமிடத்தில் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தினார். தொடர்ந்து அவர் காலை கீழே வைக்காமல் கியூப்களின் புதிர்களை விடுவித்துக் கொண்டே இருந்தார்.

ஆறுமுகத்தின் வகுப்புத் தோழர்கள் ஏற்கனவே குழப்பி வைக்கப்பட்ட கியூப்களை வரிசையாக எடுத்துக் கொடுக்க மளமளவென்று இந்த கியூப் புதிர்களை விடுவித்தார். அவரது பள்ளி தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த சாகசத்தை உற்சாகப்படுத்தினர்.

இறுதியில் 6 மணி நேரம் 7 நிமிடம் 44 வினாடிகளில் 1010 முறை கியூப்களின் புதிர்களை விடுவித்து புதிய சாதனையை ஏற்படுத்தினார். இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் விரைவில் இடம் பெறும்.

இந்த சாதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய்ப்பட்டு கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கப்படும். அவர்கள் இந்த சாதனையை ஆய்வு செய்து அதற்கான சான்றிதழ்களை அனுப்பி வைப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

Related Stories

Stories by YS TEAM TAMIL