முதியோர், நோயாளிகளுக்கான ‘கழிப்பறை கட்டில்’: மூன்றாவது மட்டுமே படித்த சரவணமுத்துவின் சூப்பர் கண்டுபிடிப்பு!

6

முதியவர்களோ, உடல்நலமில்லாதவர்களோ, அவர்களின் முக்கியப் பிரச்சினையே இயற்கை உபாதைகளை எப்படிக் கழிப்பது என்பது தான். பெற்ற பிள்ளையாகட்டும், வாழ்க்கைத் துணையாகட்டும், உறவினர்களாகட்டும் அல்லது மருத்துவ ஊழியராகட்டும் யார் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டாலும், இயற்கை உபாதைகளை மற்றவர்கள் துணையோடு கழிப்பது என்பது நரக வேதனை தான்.

ஆனால், இந்தத் துன்பம் இனி அவர்களுக்கு இல்லை. ஆம், மூன்றாவது மட்டுமே படித்த தென்காசியைச் சேர்ந்த வெல்டர் சரவணமுத்து கழிப்பறையோடு இணைந்த கட்டில் ஒன்றை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.

“பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தென்காசி தான். அப்பா சண்முகம், ஆட்டோ மெக்கானிக். அந்தக்காலத்தில் தென்காசியில் இருந்தது மூன்றே மூன்று மெக்கானிக்குகள் மட்டுமே. அவர்களும் அப்பாவும், அவரது சகோதரர்களும் தான். எங்களுடையது பெரிய குடும்பம். வீட்டில் ஐந்து குழந்தைகள். எனக்கு மேலே ஒரு அக்கா, அண்ணன், அடுத்ததாக இரண்டு தம்பிகள். குடும்ப சூழல் காரணமாக மூன்றாம் வகுப்போடு படிப்பிற்கு பைபை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எனவே, அப்பாவோடு சேர்ந்து மெக்கானிக் வேலை செய்ய ஆரம்பித்தேன். 

“பள்ளிப் படிப்பை கற்கவில்லை என்றாலும், வாழ்க்கைப்பாடம் கற்றுத்தந்த அனுபவத்தால் எப்போதும் புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது,” என்கிறார் சரவணமுத்து.

புதிய வகை வாகனங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்ததால், காலப்போக்கில் சண்முகத்தின் தொழில் சுணக்கம் கண்டது. போதிய படிப்பறிவு இல்லாததால், புதிய வகை கார், பைக் போன்ற வாகனங்களை ரிப்பேர் செய்ய சரவணமுத்துவுக்கும் தெரியவில்லை. விளைவு, தனக்கு மெக்கானிக் தொழில் புரிய தென்காசி உகந்ததல்ல என்ற முடிவுக்கு வந்தார். குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்தார்.

அங்கு சென்றதும் மெக்கானிக் வேலையோடு எலக்ட்ரிக்கல் மற்றும் வெல்டிங் வேலைகளையும் சரவணமுத்து கற்றுக் கொண்டார். அப்போது தொடங்கி தற்போது வரை கூலித் தொழிலாளியாகவே அவர் உள்ளார். காரணம் தன் வருவாயில் பெரும்பகுதியை புதிய கண்டுபிடிப்புகளுக்கு அவர் செலவிடுவது தான்.

“என் மனைவி கிருஷ்ணம்மாள், இரண்டு குழந்தைகள் என என் குடும்பத்தின் மொத்த பொருளாதாரத் தேவையையும் என் வருமானம் மூலமே ஈடுகட்ட வேண்டும். வெல்டிங், எலக்ட்ரிகல், மெக்கானிக் என ராப்பகலாக உழைத்தாலும், எனக்கு மாதம் ரூ.12 ஆயிரத்தை தாண்டி வருமானம் கிடைக்காது. ஆனால், இந்தப் பணத்தில் தான் என் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, புதிய கருவிகள் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்” என்கிறார் சரவணமுத்து.

தன் அறிவுக்கு எட்டியபடி சிறு சிறு புதிய கருவிகளைச் செய்து வருகிறார் சரவணமுத்து. முறைப்படி டிசைனிங் வரைந்து கொண்டெல்லாம் இவர் கருவிகளை வடிவமைப்பது இல்லை. மனதிற்கு தோன்றியபடி, தேவைக்குத் தக்க கருவிகள் செய்வாராம். பின்னர் அதில் என்ன தேவையோ, அந்த மாற்றங்களை செய்து கொள்வாராம்.

இவரைப் பற்றி கேள்விப்பட்ட அப்பகுதி பள்ளிக் கல்லூரி மாணவர்கள், தங்களது ப்ராஜெக்ட் உதவிக்காக சரவணமுத்துவை அதிகம் தேடி வர ஆரம்பித்தனர். அப்போது அவர்களது ஐடியாவிற்கு தகுந்தமாதிரி, புதிய பொருட்களைச் செய்து கொடுத்து தனது அறிவுப்பசியை தீர்த்துக் கொள்கிறார் சரவணமுத்து. இவரின் ப்ராஜெக்ட்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளதாம்.

இப்படியாக மற்றவர்களின் தேவைகளுக்கு கருவிகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த சரவணமுத்துவிற்கு, கடந்த 2012ம் ஆண்டு தன் மனைவிக்காக புதிய கட்டில் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. தேவைகள் தானே கண்டுபிடிப்புகளுக்கு காரணகர்த்தா ஆகின்றன. அப்படித்தான் சரவணமுத்து தன் மனைவிக்காக உருவாக்கிய கழிப்பறைக் கட்டில் இன்று அவரை உலகம் அறியச் செய்திருக்கிறது.

“2012ல் என் மனைவி யூட்ரெஸ் ஆபரேஷன் செஞ்சு 20 நாள்கள் படுக்கையிலேயே இருந்தார்கள். அப்போது என் மாமியார்தான் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். சிகிச்சையின் வலி ஒருபுறம் இருக்க, இயற்கை உபாதைகளைக் கழிக்க என் மனைவி பட்ட பாட்டை நேரில் பார்த்து வேதனைப்பட்டேன். அப்போது தான், வயதானவர்களும், உடல்நிலை சரியில்லாதவர்களும் படுத்தபடுக்கையாக இருக்குபோது இயற்கை உபாதைகளுக்காக எந்தளவு சங்கடத்தை அனுபவிப்பார்கள் என்பதை உணர்ந்தேன். எனவே, நம்மால் இயன்றளவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவானது. அதன் பலன் தான் இந்தக் கழிப்பறைக் கட்டில்,” என்கிறார் சரவண முத்து.

ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த பொருட்களை மட்டும் வைத்து ஒரு மாதிரி கட்டிலை சரவணமுத்து உருவாக்கியுள்ளார். ஆனால், இதற்கே அவருக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது. வேலைக்கு சென்று வந்த நேரம் போக, ஓய்வு நேரத்தில் பார்த்து, பார்த்து அந்தக் கட்டிலை அவர் உருவாக்கினார்.

சரவணமுத்துவின் இந்தப் புதிய மாடல் கட்டில் குறித்து வாய்வழி விளம்பரமாக கேள்விப்பட்டார் சென்னையைச் சேர்ந்த குருமூர்த்தி. அப்போது படுத்த படுக்கையாக இருந்த அவரது அம்மாவிற்கு அது போன்ற கட்டில் தேவையாக இருந்தது. எனவே, சரவணமுத்துவை அவர் தொடர்பு கொண்டார். ஆனால், புதியதாக விற்பனை செய்யும் அளவிற்கு கட்டில் செய்ய சரவணமுத்துவிடம் பொருளாதார வசதியில்லை. எனவே, தன் நிலையை குருமூர்த்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.

உடனடித் தேவையில் இருந்த குருமூர்த்தி, கழிப்பறைக் கட்டில் செய்யத் தேவையான பணம் முழுவதையும் முன்பணமாகத் தந்து, உடனடியாக வேலையைத் தொடங்கச் சொல்லினார். அதனைத் தொடர்ந்து கழிப்பறையுடன் கூடிய புதிய கட்டிலை, இன்னும் சில வசதிகள் சேர்த்து அவருக்கு சரவணமுத்து செய்து கொடுத்தார்.

சரவணமுத்து உருவாக்கியுள்ள இந்த கழிப்பறைக் கட்டிலின் சிறப்பம்சமே, இதை யாருடைய உதவியுமின்றி படுக்கையில் இருப்பவரே பயன்படுத்தலாம் என்பதுதான். தண்ணீர் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளதால், இயற்கை உபாதைகளைக் கழித்த பிறகு, இந்தக் கட்டிலில் படுத்த நிலையிலேயே சுத்தமும் செய்து கொள்ளலாம்.

சரவணமுத்து உருவாக்கியுள்ள இந்தக் கழிப்பறைக் கட்டில் பார்ப்பதற்கு சாதாரண மருத்துவமனைக் கட்டில் போல் தான் இருக்கும். ஆனால், அதனுடன் சிறிய ஸ்விட்ச் போர்டு இணைத்து, ரிமோட் கண்ட்ரோல் வசதி அதில் உள்ளது. அந்த ரிமோட் மூலம் ஒரு பட்டனை அழுத்தியதும், கட்டிலுக்கு நடுவில் கழிப்பறை வடிவ கதவு திறக்கிறது. வேலை முடிந்ததும் மற்றொரு பட்டனை அழுத்தியதும், மற்றொரு புறத்தில் இருந்து அதிக வேகத்தில் தண்ணீர் வெளியேறுகிறது. பின்னர் குளோஸ் பட்டனை அழுத்தியதும் கழிவுகள் நேரடியாக கழிப்பறைக்கே சென்று விடுகிறது.

இந்தக் கட்டில் மட்டும் என்றில்லாமல், மின்சாரம் இல்லாத சமயங்களில் எழுதுவதற்கு வசதியாக விளக்குடன் கூடிய பேனா, சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்காக காற்றை சுத்தம் செய்து ஃபில்டர் பண்ணி சுவாசிக்கக் கூடிய மாஸ்க், தேங்காய் உரிக்கும் கருவி என பல புதிய உபயோகமானக் கருவிகளைச் செய்துள்ளார் சரவண முத்து.

“இன்னும் நிறைய உபயோகமான கருவிகள் செய்ய வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் இருக்கிறது. ஆனால், அதற்குத் தேவையான பணவசதி தான் என்னிடம் இல்லை. புதிதாக கட்டில் செய்யக் கேட்டு ஆர்டர்கள் வருகின்றன. வங்கியில் கடன் உதவி கிடைத்தால், இதையே முழுநேரத் தொழிலாக செய்ய இயலும். எனக்கும் வருமானம் கிடைக்கும், 

எத்தனையோ பேருக்கு உபயோகமான கட்டிலும் கிடைக்கும். தற்போது ஒரு கட்டில் செய்ய ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. ஒவ்வொரு கட்டிலாகச் செய்வதால், செலவு அதிகமாகிறது. இதே கட்டில்களை உரிய தொழில்சாலை வசதிகளோடு ஒரே நேரத்தில் அதிகம் செய்தால், செலவு குறைவாகும். ஒரு கட்டில் செய்ய 40 ஆயிரம் மட்டுமே ஆகும். இதனால், குறைந்த விலையில் அதிகம் பேர் பயனடைவார்கள். இதற்கு அரசு தான் உதவ வேண்டும்” என்கிறார் சரவணமுத்து.

ஆரம்பத்தில் ‘உனக்கெதற்கு இந்த வீண் வேலை. கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தைக் கவனி’ எனப் பலரும் சரவணமுத்துவை கிண்டல் செய்துள்ளனர். ஆனால், சமூகத்திற்கு உதவிடும் வகையில் உபயோகமான கருவிகளைச் செய்வது என்ற தன் இலக்கில் அவர் தெளிவாகவே இருந்துள்ளார்.

அதன் பலனாக தற்போது சரவணமுத்துவுக்கு நண்பர்கள் பலரும் உதவுகின்றனர். போதிய படிப்பறிவு இல்லாததால் அவரை யாரும் ஏமாற்றி, அவரது கண்டுபிடிப்புகளை திருடிச் சென்றுவிடாத வகையில், புதிய கருவிகளை எங்கே, எப்படி பதிவு செய்து பேடண்ட் ரைட்ஸ் வாங்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் நண்பர்கள் சரவணமுத்துவிற்கு வழிகாட்டுகின்றனர்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். ஆம் சரவணமுத்துவின் இந்த கண்டுபிடிப்புகளுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார். அது அவருடைய மனைவி கிருஷ்ணம்மாள்.

“எனக்கு இப்போ 41 வயசாகுது. ஃபேஸ்புக், டிவிட்டர்னு எதுவும் பயன்படுத்தத் தெரியாது. எனவே, என்னைச் சுற்றியுள்ள, நான் பார்க்கும் பிரச்சினைகளுக்கு எப்படி என்னால் ஆன தீர்வை குடுப்பது என்பது தான் எப்போதுமே என் யோசனையாக இருக்கும். என் எல்லா முயற்சிக்கும் என் மனைவியின் நம்பிக்கை வார்த்தைகளே உத்வேகம் தரும். மிகவும் பொறுமைசாலியான என் மனைவி, தான் தரும் பணத்தில் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கும் திறமைசாலி. அவரது ஊக்குவிப்பு, ஒத்துழைப்பினால் மட்டுமே என்னால் புதிய கண்டுபிடிப்புகளை செய்ய முடிகிறது. என் முயற்சிகளுக்குப் பின்னால் இருப்பது குடும்பத்தின் சப்போர்ட் தான்” என சந்தோசமாகக் கூறுகிறார் சரவணமுத்து.

உங்களுக்கும் இது போன்ற கட்டிலின் தேவை இருந்தால் சரவணமுத்துவைத் தொடர்பு கொள்ளலாம். அவரது செல்போன் எண் 9585475039.