உலக தொழில்முனைவோர் தினம்; வர்த்தக முன்னோடிகளின் ஊக்கம் தரும் வாக்கியங்கள்!

0

உங்களால் மெல்லக்கூடியதை விட அதிகமாக விழுங்கக் கூடாது என்பது பொதுவாக சொல்லப்படும் அறிவுரை. ஆனால், விரைவில் எப்படி மெல்வது என கற்றுக்கொள்ளலாம் எனும் நம்பிக்கையில், தன்னால் மெல்லக்கூடியதைவிட அதிகமாக விழுங்குபவர்கள் என்று தொழில்முனைவோருக்கு விளக்கம் தருகிறார் அமெரிக்காவின் முன்னோடி தொழில்முனைவோர்களில் ஒருவரான ராய் ஆஷ்.

தொழில் முனைவோர்கள் வரம்புகளை ஏற்றுக்கொள்ளாமல், கண்களில் கனவுடன் முன்னேறிச்செல்லக்கூடியவர்களாக இருப்பதை ஆஷினின் இந்த மேற்கொள் கச்சிதமாக உணர்த்துகிறது. ஒரு வகையில் ஒவ்வொரு தொழில்முனைவோரும் ஏதேனும் ஒரு வகையில் தடைகளையும், சவால்களையும் வென்றவர்கள் தான். தோல்விகளை அவர்கள் முற்றுப்புள்ளியாக கருதுவதும் இல்லை: அதனால் துவண்டு விடுவதும் இல்லை.

எந்த ஒரு தேசத்தின் முன்னேற்றத்திலும் அதன் தொழில்முனைவோரின் பங்களிப்பு கணிசமாகவே இருக்கிறது. ஏனெனில் தொழில்முனைவோர் தங்களுக்காக மட்டும் அல்ல, தாங்கள் சார்ந்துள்ள சமூகத்திற்காகவும் சேர்த்துத் தான் கனவு காண்கின்றனர். உலக வல்லரசு என மார் தட்டிக்கொள்ளும் அமெரிக்க அடிப்படையில் ஒரு தொழில்முனைவோர் தேசம். சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவை தலைநிமிர வைத்ததில் தொழில்முனைவோருக்கு தனி பங்கு இருக்கிறது.

தொழில்முனைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 21ம் தேதி ’உலக தொழில்முனவோர் தினம்’ கொண்டாடப்படுகிறது. ஊக்கத்தின் அடையாளமாக கருதப்படும் இந்த தினத்தில், முன்னோடி தொழில்முனைவோர்கள் மேற்கோள்கள் மூலம் ஊக்கம் பெறுவோம்:

அம்பானி

எண்ணங்கள் யாருடைய ஏகபோகமும் இல்லை; பெரிதாக யோசியுங்கள், வேகமாக யோசியுங்கள், தொலைநோக்குடன் சிந்தியுங்கள்.

- திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனர்

ஜே.ஆர்.டி டாடா

“ ஒரு தேசம் மற்றும் அதன் மக்களுக்கு பலன் அளிக்காத, நியாயமான மற்றும் நேர்மையான முறையை பெறப்படாத, எந்த ஒரு வெற்றி அல்லது சாதனையும் அதன் பலன் தரும் அம்சங்களில் மதிப்பு மிக்கதே அல்ல”.

- டாடா குழும நிறுவனர் ஜே.ஆர்.டி.டாடா

கர்சன்பாய் பட்டேல்

“விளம்பரம் என்பது ஒரு பொருள் பற்றிய தகவலை மட்டுமே அளிக்கும். அதன் பிறகு அந்த பொருளை மட்டுமே வெற்றி சார்ந்துள்ளது.”

- கர்சன்பாய் பட்டேல், நிர்மா குழும நிறுவனர்

கிரண் மஜும்தார் ஷா

“தொழில்நுட்பத் தோல்வி... வர்த்தக தோல்வி... ஏன் ஆய்வு தோல்வி என பலவிதமான தோல்விகளை கண்டிருக்கிறேன். தொழில்முனைவு என்பது உண்மையில் தோல்விகளை எதிர்கொள்வது, தோல்விகளை நிர்வகிப்பது மற்றும் தோல்விகளுக்கு பின் மீண்டு வந்து வெற்றி பெறுவது என நினைக்கிறேன்.”

- கிரண் மஜும்தார் ஷா, பயோகான் நிறுவனர்

லட்சுமி மிட்டல்

‘வர்த்தகத்தில் உங்களுக்கு முதலில் தேவை, நீங்கள் செய்வதில் ஈடுபாடும், அர்பணிப்பு மற்றும் ஆர்வம்.”

- லட்சிமி மிட்டல், சர்வதேச எஃகு சக்ரவர்த்தி

வர்கிஸ் குரியன்

“தோல்வி என்பது வெற்றி பெறாமல் இருப்பது அல்ல. உங்கள் சிறந்த முயற்சியை வெளிப்படுத்தாமல் இருப்பதும், பொது நலனுக்காக சொற்பமாகவேனும் பங்களிப்பு செலுத்தாமல் இருப்பது தான் தோல்வி.”

- வர்கிஸ் குரியன், வென்மை புரட்சியின் நாயகன்

நாராயணமூர்த்தி

“உங்கள் வேலையை நேசியுங்கள், உங்கள் நிறுவனத்தை அல்ல, ஏனெனில் உங்கள் நிறுவனம் எப்போது உங்களை நேசிப்பதை நிறுத்தும் எனத் தெரியாது”.

- நாராயணமூர்த்தி, இன்போசிஸ் நிறுவனர்

அஸிம் பிரேம்ஜி

“வர்த்தகத்தின் மீதுள்ள மோகத்தால் நீங்கள் அதில் ஈடுபட முடியாது.”

- அஸிம் பிரேம்ஜி, விப்ரோ நிறுவனர்

ஷசாங்க்

‘ஆரம்ப விற்பனைக்காக யாரையும் பணியில் அமர்த்தாதீர்கள். உங்கள் முதல் நூறு வாடிக்கையாளர்களை நீங்களே தான் தேடி அடைய வேண்டும்.”

- ஷசாங்க், பிராக்டோ நிறுவனர்

ஸ்டீவ் ஜாப்ஸ்

“சில நேரங்களில் நீங்கள் புதுமை படைக்க முயற்சிக்கும் போது தவறுகள் செய்யலாம். அவற்றை சீக்கிரம் ஒப்புக்கொண்டு, உங்கள் மற்ற புதுமைகளை மேம்படுத்துவதே சிறந்த வழி.”

- ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் இணை நிறுவனர்

பில்கேட்ஸ்

“மென்பொருள் என்பது பொறியியல் மற்றும் கலைநுட்பத்தின் அருமையான கலைவையாகும்.”

-பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர்

எலன் மஸ்க்

“ஹென்ரி போர்டு விலை குறைந்த கார்களை உருவாக்கிய போது, மக்கள் குதிரைகளில் என்ன பிரச்சனை என்று கேட்டனர். ஆனால் அவர் கார்கள் மீது நம்பிக்கை வைத்து ரிஸ்க் எடுத்து வெற்றி பெற்றார்.”

- எலன் மஸ்க், டெஸ்லா நிறுவனர்

ஜாக் மா

”நீங்கள் நம்பிக்கை இழக்காதவரை உங்களுக்கு வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். நம்பிக்கையை இழப்பதுதான் மிகப்பெரிய தோல்வி.” 

- ஜாக் மா, அலிபாபா நிறுவனர்