2 ஆண்டுகளில் டி-ஷர்ட் விற்பனையில் 20 கோடி ரூபாய் ஈட்டிய சென்னை NIFT-ல் படித்த இளைஞர்கள்!

8

பிஹாரைச் சேர்ந்த ப்ரவீன் கேஆர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்துஜா கே இருவரும் மாணவர்களாக இருந்தபோதே அவர்களுக்குள் தொழில்முனைவு ஆர்வம் ஏற்பட்டது. சென்னை NIFT கல்வி நிறுவனத்தில் பின்னலாடை வடிவமைப்பு துறையில் இளங்கலை பட்டப்படிப்பின் ஏழாவது செமஸ்டரில் இருந்தபோது சுயதொழிலில் ஈடுபடவேண்டும் என்று இருவரும் விரும்பினர்.

அது 2015-ம் ஆண்டு. மின் வணிகம் சந்தையில் செயல்படத் துவங்கிய காலக்கட்டம். சந்தையின் போக்குகளுக்கு ஏற்றவாறு செயல்படத் தீர்மானத்த இருவரும் பத்து லட்ச ரூபாய் முதலீட்டுடன் செப்டம்பர் மாதம் ‘யங் ட்ரெண்ட்ஸ்’ (Young Trendz) என்கிற ஆன்லைன் ஆடை ப்ராண்டை துவங்கினர். அடுத்த இரண்டு மாதங்களில் ஃப்ளிப்கார்ட், அமேசான், வூனிக், பேடிஎம் போன்ற ஆன்லைன் தளங்கள் வாயிலாக விற்பனை செய்யத் துவங்கினர். சொந்த மின் வணிக வலைதளத்தை அறிமுகப்படுத்தினர்.

சிந்துஜா மற்றும் பிரவீன்
சிந்துஜா மற்றும் பிரவீன்

வேகமாக வளர்ச்சியடைந்தனர். செமஸ்டர் முடிவதற்கு முன்பே கல்லூரி நிகழ்வுகளில் பங்கேற்று இலவசங்களை வழங்கினர். தனிப்பட்ட தேவைகளுக்கேற்ற டி-ஷர்ட்களை ’யங் ட்ரெண்ட்ஸ்’ ப்ராண்டின் கீழ் வழங்கினர்.

”முதலில் எங்களது வலைதளம் வாயிலாக ஒரு நாளைக்கு 10 ஆர்டர்கள் கிடைத்தது. எட்டாவது செமஸ்டரின்போது நாடு முழுவதும் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கல்லூரிகளுடன் இணைந்து தனிப்பட்ட தேவைகளுக்கேற்ற டி-ஷர்ட்களை வடிவமைத்தோம்,” என்று நினைவுகூர்ந்தார் சிந்துஜா.

”ஸ்டார்ட் அப் வளர்ச்சியடைந்தது. ஒரு நாளைக்கு 1,000 ஆர்டர்கள் வரத்துவங்கியது. ஜிஎம்வி 20 கோடி ரூபாய் விசி நிதியின்றி ஈட்டப்பட்டது.”

சென்னை முதல் திருப்பூர் வரை

’யங் ட்ரெண்ட்ஸ்’ வளர்ச்சியடைகையில் தயாரிப்பை உருவாக்கி தடையற்ற வகையில் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளித்தனர். இது இந்தியாவின் பின்னலாடை மற்றும் உற்பத்தி மையமான திருப்பூரில் மட்டுமே சாத்தியப்படும்.

நிறுவனர்கள் தங்களது கல்லூரி ப்ராஜெக்டிற்காக திருப்பூர் சென்றுள்ளதால் அங்கு தரமான பொருட்களை வாங்கவும் தயாரிக்கவும் முடியும் என்பதை நன்கறிவார்கள். எனவே செயல்பாடுகளை இங்கு மாற்றுவதே சிறந்தது என்று நம்பினர்.

ஆனால் ப்ரவீன், சிந்துஜா இருவருக்குமே தமிழ் பேசத்தெரியாது. இதனால் ஆரம்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. எனினும் தயாரிப்பை உருவாக்கும் பணி மற்றும் மூலப்பொருட்களை பெறும் நடவடிக்கை போன்றவற்றைப் பொருத்தவரை திருப்பூருக்கு மாற்றலானது பலனளித்தது.

”தயாரிப்பை உருவாக்க ஆடைத் துறையில் சிறந்த திறன் கொண்ட சரியான நபர்கள் திருப்பூரில் கிடைத்தனர். ஆன்லைன் வலைதளம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக திறமையான தகவல் தொழில்நுட்ப ப்ரொஃபஷனல்கள் கோயம்பத்தூரிலிருந்து கிடைத்தனர்,” என்றார் ப்ரவீன்.

தயாரிப்புகளை சந்தைப்படுத்துவோரின் கூரியர் பார்ட்னரே பொருட்களை எடுத்துச் சென்றுவிடுவதால் கட்டமைப்புப் பிரச்சனைகள் இல்லை.

அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைதல்

யங் ட்ரெண்ட்ஸ் என்கிற பெயரில் யங் என்பது இளைஞர்களையும் ட்ரெண்ட்ஸ் என்பது நவநாகரீக டிசைன்கள் என்பதையும் குறிக்கிறது. இதனால்தான் இந்த ப்ராண்டின் டேக்லைன் : ’இளமையுடன் இருங்கள், நவநாகரீகமாக வாழுங்கள்’ என்று உருவாக்கப்பட்டது. இந்த ப்ராண்ட் 18-28 வயது வரையிலுள்ள இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இவர்களது தயாரிப்புகள் இளைஞர்களைக் கவரும் வகையில் அவர்களுக்கேற்றவாறு வேடிக்கையான க்ராஃபிக்ஸ்களைக் கொண்டுள்ளது.

சிந்துஜா கூறுகையில்,

“நாங்கள் சமூக ஊடகங்களின் வாயிலாக சந்தைப் போக்குகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். போட்டி மிகவும் கடினமாகவே உள்ளது. ஆன்லைன் சந்தைப்பகுதியில் மக்களின் பார்வையை கவரும் பகுதியில் எங்களது தயாரிப்பு சர்வதேச மற்றும் உள்ளூர் ப்ராண்டுகளை உள்ளடக்கிய சுமார் 1.5 லட்சம் தயாரிப்புகளுடன் போட்டியிடுகிறது.”

இவர்களது குழுவில் 30 நபர்கள் உள்ளனர். தெலுங்கானா, கர்நாடகா, ஹரியானா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் யங் ட்ரெண்ட்ஸ் கிடங்கு உள்ளது. மேற்கு வங்காளத்தில் விரைவில் கிடங்கை திறக்க உள்ளனர்.

இந்தியா முழுவதுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் விதத்தில் இந்த கிடங்குகள் அமைந்துள்ளது என்றார் சிந்துஜா. டெல்லி, வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவிலான தேவை உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே 90 சதவீதம் கொண்டு சேர்க்கப்படுகிறது.

சீனா மற்றும் கொரிய சந்தைகளில் பிரபலமாக காணப்படும் ஜோடிகளுக்கான ஆடையை யங் ட்ரெண்ட்ஸ் ப்ராண்ட்தான் இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.

2016-ம் ஆண்டு காதலர் தினம் கொண்டாடப்படும் சமயத்தில் குறைவான அளவில் சோதனை முயற்சியாக இந்த வகை ஆடையை அறிமுகப்படுத்தினர். சிறப்பான வரவேற்பு கிடைத்தது. பல வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்து ஆர்டர் வந்தது. இவ்வாறு ஜோடி ஆடைகளின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது ஒட்டுமொத்த விற்பனையில் இவை 20 சதவீதம் பங்களிக்கிறது.

கிராஃபிக்ஸ், சர்வதேச ட்ரெண்ட்ஸை அமல்படுத்துதல், விரைவான டெலிவரி போன்றவை இவர்களை வேறுபடுத்திக் காட்டுவதாக தெரிவித்தார் சிந்துஜா. தற்போது யங் ட்ரெண்ட்ஸ் மூன்று வடிவமைப்பாளர்களைக் கொண்டுள்ளது. ஃபோட்டோஷூட் மற்றும் விளம்பரப் பிரச்சார ஷூட் பணிகள் வெளியாட்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இளமையுடன்கூடிய வளர்ச்சி

யங் ட்ரெண்ட்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான தரமான தயாரிப்புகளை மலிவான விலையாக 250 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை வழங்குகிறது. அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும் விதத்தில் 3,500-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை மின் வணிக சந்தைப்பகுதியில் பதிவேற்றியுள்ளது. இதன் மூலம் 70 சதவீத வருவாய் ஈட்டப்படுகிறது. ஆடைத் தொகுப்புகள் மாதத்திற்கு இரு முறை புதுப்பிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களை பின்பற்றுவோருக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து இக்குழுவினர் தொடர்ந்து தெரியப்படுத்தி வருகின்றனர். ப்ரவீன் கூறுகையில், 

“சமீபத்தில் ஃப்ளிப்கார்டின் இந்த வருட பிக் பில்லியன் டே விற்பனையில் முன்னணி ப்ராண்ட்களில் ஒன்றாக எங்களை கௌரவித்துள்ளது. பண்டிகைக்கால விற்பனையில் நல்ல வரவேற்பு கிடைத்து ஐந்து நாட்களில் 25,000 யூனிட்களை விற்பனை செய்தோம்.”

2018-ம் ஆண்டு யங் ட்ரெண்ட்ஸ் ஆஃப்லைன் ஸ்டோர்களை அமைக்கவும் தற்போதைய ஆடைத் தொகுப்புடன் பல புதிய பிரிவுகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் நிதி உயர்த்தாமல் தொடர்ந்து சுயநிதியில் இயங்கவே விரும்புகின்றனர். 2018-ம் ஆண்டு மேலும் லாபகரமான செயல்படுவோம் என்று இணை நிறுவனர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

”வழக்கமான பணிக்குச் செல்வதுடன் ஒப்பிடுகையில் சுயமாக தொழிலைத் துவங்குகையில் அதிக பொறுப்பை ஏற்கவேண்டியிருக்கும். முழுமையை எட்ட தொடர்ந்து போராடவேண்டும். வேடிக்கையான எதிர்பாராத விஷயங்களுக்கு ஏற்ப செயல்படும் திறன் அவசியம்,” என்றார் சிந்துஜா.

இரு பார்ட்னர்களும் தொழில் பின்னணியின்றி செயல்படுவதால் 12-ம் வகுப்பு அக்கவுண்ட்ஸ் புத்தகத்தை படிப்பது, புதிய மொழியை கற்பது, வரி குறித்து புரிந்துகொள்வது என பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இவர்களது கடின உழைப்பு பலனளித்தது. இந்த வருடம் விற்பனை அளவு 20 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும்.

ஒட்டுமொத்த மின் வணிகத்தில் ஃபேஷன் மற்றும் ஆடை பிரிவு பெரும்பங்களிக்கிறது. எனவே யங் ட்ரெண்ட்ஸ் சிறப்பான எதிர்காலத்திற்கு ஆயத்தமாகியுள்ளது தெளிவாகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஆதிரா ஏ நாயர்