வரலாற்று சிறப்புமிக்க நள்ளிரவு கூட்டத்தில் ஜி.எஸ்.டி-யை வரவேற்ற இந்தியா!

0

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நள்ளிரவு கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) நடைமுறைக்கு வந்தது. குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் உரை நிகழ்த்திய பின் குடியரசுத் தலைவரும் பிரதமரும் பொத்தானை அழுத்தியபின் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய திருப்புமுனையாக இந்த நாள் அமைகிறது என்றார்.

இந்த மைய மண்டபம் அரசியல் நிர்ணயசபையின் முதல் கூட்டம், இந்தியாவில் சுதந்திரம், இந்திய அரசியல் சாசனம் ஏற்கபட்டது உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை சந்தித்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். ஜி.எஸ்.டி என்பது ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.

கடுமையான உழைப்பின் மூலம் எந்த தடையையும் கடந்து கடினமான இலட்சியத்தை எய்த முடியும் என்று சாணக்கியன் கூறியிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதையும் அரசியல் ரீதியாக சர்தார் வல்லபாய் படேல் ஒருங்கிணைத்ததை போல பொருளாதார ரீதியாக ஜி.எஸ்.டி ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார். வருமான வரிதான் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடுமையானது என்று பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் எய்ன்ஸ்டின் கூறியதை சுட்டிக்காட்டி ’ஒரே நாடு ஒரே வரி’ என்பதை ஜி.எஸ்.டி உறுதி செய்யும் என்று கூறினார். 

காலவிரயத்தையும் செலவையும் பெருமளவு தவிர்க்க ஜிஎஸ்டி வகை செய்யும் என்றும் அவர் கூறினார். ஒரே வரி முறை என்பதால் மாநிலங்களின் எல்லைகளை கடக்கும் போது ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட்டு எரிபொருள் சேமிப்புக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும் என்றும் கூறினார். எளிமையான நவீனகால நிர்வாகத்திற்கும் ஒளிவுமறைவற்ற தன்மைக்கும் ஊழல் ஒழிப்பிற்கும் ஜி.எஸ்.டி வழிவகுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு நன்மைபயக்கக் கூடிய ஒரு நல்ல எளிய வரி ஜிஎஸ்டி என்றும் கூறினார். பரஸ்பர பங்களிப்பின் மூலம் சமுதாயத்திற்கு பலனளிக்கக்கூடிய பொதுவான லட்சியம், பொதுவான உறுதி பற்றி ரிக் வேதம் கூறும் போதனையையும் பிரதமர் நினைவூட்டினார்.

ஜிஎஸ்டி-யை தொடங்கி வைத்து பேசிய குடியரசு தலைவர் பிராணாப் முகர்ஜி, அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அரசியல் அமைப்புச்சட்டத்தின் 279ஏ பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜிஎஸ்டி கவுன்சில் நிறுவப்பட்டது. ஜிஎஸ்டியைப் பொறுத்தவரையில், மாதிரி சட்டங்கள், வரி விகிதங்கள், விதிவிலக்குகள் போன்றவை குறித்த அனைத்துவிதமான பரிந்துரைகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கும் பொறுப்பு கொண்ட இந்த கவுன்சில் நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே முற்றிலும் புதுமையான ஒன்றாகும். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு அமைப்பான இந்த அமைப்பு மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ எந்தவொன்றும் மற்றொன்றின் உதவியில்லாமல் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத தன்மை கொண்டதொரு அமைப்பாகும். இந்தக் கவுன்சில் முடிவுகளை எடுப்பதற்கான வாக்குகளைப் பதிவு செய்வதற்கென விரிவான கட்டமைப்பை அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்படுத்தியிருந்த போதிலும் இதுவரையில் நடைபெற்ற 19 கூட்டங்களிலும் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுமே ஒருமித்த வகையில் எடுக்கப்பட்டவையே என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும் என்றார். மேலும் பேசிய அவர்,

ஜிஎஸ்டி நமது ஏற்றுமதியை மேலும் போட்டித் தன்மை கொண்டதாக மாற்றும் என்பதோடு, உள்நாட்டுத் தொழில்கள் இறக்குமதிகளுடன் போட்டியிடுவதற்கான சம தளத்தை வழங்குவதாகவும் அமைகிறது. 

செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்தும் நாணயமான, விதிகளை மதிக்கின்ற விற்பனையாளர்களுடன் மட்டுமே வியாபாரத்தை நடத்த வேண்டும் என்ற வலுவான ஊக்கத்தை வாங்குபவர்களிடையே ஜிஎஸ்டி உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.