நினைவு பொருட்கள் விற்பனையில் இருந்து வாழ்வியல் பிராண்டாக வளர்ந்த சம்பக்'

0

பெங்களூரு இந்திரா நகரில் உள்ள சம்பக் ஸ்டோரில் முதலில் கண்ணில் படுவது பளிச் வண்ணங்கள் மற்றும் கலைப்பொருட்கள் தான். 2010 மார்ச்சில் இந்தியா தொடர்பான உற்சாகமான மற்றும் பிரகாசமான பயண நினைவுப்பொருட்களுக்காக விவேக் பிரபாகர் மற்றும் சுப்ரா சத்தாவால் துவக்கப்பட்ட சம்பக் (Chumbak ) இன்று பெங்களூரு, மும்பை மற்றும் தில்லியில் கால்பதித்துள்ள வாழ்வியல் பிராண்டாகி இருக்கிறது. பெங்களூரு மற்றும் தில்லியில் பிரதான ஸ்டோர்களை கொண்டுள்ளதுடன் 35 நகரங்களில் சிறிய மையங்களை கொண்டுள்ளது.

சம்பக் பிறந்த விதம் பற்றி இணை நிறுவனர் விவேக் இப்படி விவரிக்கிறார்; "பளிங்கு தாஜ்மகால் மாதிரிகள் மற்றும் கைவினைப்பொருட்களால் அலுப்பு உண்டானது. இவை மட்டுமே வாய்ப்புகளாக இருந்தன.மேலும் நவீனமான, அதே நேரத்தில் இந்தியாவை பிரதிபலிக்கும் மேலும் நல்ல வாய்ப்புகள் சுற்றுலா பயணிகளுக்கு தேவை என் நினைத்தோம், இப்படி தான் சம்பக் பிறந்தது”.

வளர்ச்சிப்பாதை

சேமிப்பின் மூலமாக திரட்டிய 40 லட்சம் ரூபாயுடன் துவங்கி, ஐந்தாண்டுகளில் சம்பக் தனது பொருட்கள் ரகங்களை எழுதுபொருட்கள், கைப்பைகள், பர்ஸ்கள், சாவிக் கொத்துகள், ஆடைகள் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் என விரிவாக்கம் செய்துள்ளது. இந்தியாவை தங்கள் கைகளில் அணிந்திருக்க விரும்பும் இளம் இந்தியர்களே தங்கள் மிகப்பெரிய அபிமானிகளாக இருப்பதை உணர்ந்ததாக விவேக் சொல்கிறார். வாடிக்கையாளார்கள் மேலும் விரும்பியதை புரிந்து கொண்டு சம்பக், பயண நினைவுப்பொருட்களில் இருந்து புதிய இந்தியாவை பிரதிபலிக்கும் பிராண்டாக உயர்ந்தது.

ஆரம்பத்தில் பொருட்கள் பல பிராண்ட் மையங்களில் காட்சிக்கு வைக்கப்படிருந்தன. ஆனால் இதன் தயாரிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்புவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வேண்டுகோள் வரத்துவங்கின. இதன் பயனாகவே நாடு முழுவதும் 10 சிறிய மையங்கள் துவக்கப்பட்டன. "பொடிக் பிராண்ட் என்பதில் இருந்து நாடு முழுவதும் பரிசுப்பொருட்கள் மற்றும் அரிய பொருட்களுக்கான இடமாக அறியப்பட்டோம்” என்கிறார் விவேக்.

நிறுவனர்கள் விவேக் பிரபாகர் மற்றும் சுப்ரா சத்தா
நிறுவனர்கள் விவேக் பிரபாகர் மற்றும் சுப்ரா சத்தா

இந்த காலகட்டத்தில் வடிவமைப்பும் ஆரம்ப கால இந்தியாவில் இருந்து நவீன இந்தியா சார்ந்ததாக உருவாகத் துவங்கியிருந்தது. இது முற்றிலும் வேறு விதமான வடிவமைப்பு வெளிப்பாட்டிற்கு வழி வகுத்தது என்கிறார் விவேக். இது மேலும் முதிர்ச்சியான வடிவமைப்பு மொழிக்கு வித்திட்டு புதிய வகை பொருட்களாக மாறியது.

20 சதுர அடியில் இருந்து 2,500 சதுர அடிக்கு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சம்பக் இந்திரா நகரில் தனது பிரதான விற்பனை மையத்தை துவக்கியது. இதனுடன் வீட்டு அலங்கார பொருட்களும் அறிமுகமாயின. "சம்பக்கின் வண்ணம், வடிவமைப்பு ஈர்ப்பை தக்க வைத்துக்கொண்ட விளக்குகள், சுவர் ஓவியங்கள், டைனிங் பொருட்கள் என எங்கள் வாடிக்கையாளர்களுக்காக புதிய தோற்றத்தை கொண்டு வந்தோம்” என்கிறார் விவேக்.

ஆனால் எந்த வெற்றிக்கதையிலும் சவால்கள் இல்லாமல் இருக்காதே. எல்லா பொருட்களையும் கொண்டு வரும் வகையில் சிறிய மையங்களை வடிவமைப்பது சிக்கலாக இருந்தது. சரியான வடிவமைப்பு, கடையின் அளவு மற்றும் இடத்தை தேர்வு செய்வது கடினமாக இருந்தது என்கிறார் விவேக். "முதல் முறையாக எங்கள் பிராண்ட் தனி விற்பனை மையத்தில் முன்னிறுத்தப்பட இருந்தது”.

பிரதான விற்பனை மையத்திலும் இதே சவாலை இன்னும் பெரிய அளவில் எதிர்கொண்டனர். முற்றிலும் ஒரு புதிய வகையை உருவாக்கி, அதற்கான பொருட்களை தயாரித்து, மார்கெட்டிங் மொழியையும் உருவாக்க வேண்டியிருந்தது. சிக்கலான நேரம் என்றாலும் சுவாரஸ்யமாக இருந்தது என்கிறார் விவேக். இதிலிருந்து மேலும் துடிப்புடனும் ஆற்றலுடனும் வெளியே வந்ததாக விவேக் நம்புகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சம்பக், 30 நபர் குழுவில் இருந்து 150 பேர் கொண்ட குழுவாக வளர்ந்திருக்கிறது. "எங்கள் தொழில்நுட்ப குழுவை மேம்படுத்தியுள்ளோம்.இதன் பயனாக கடந்த சில மாதங்களாக புதிய இணையதளம் மூலம் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்திருக்கிறது” என்கிறார் விவேக். ஆன்லைன் பிரிவையும் சேர்த்து சம்பக் 300 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.

இந்திரா நகர் விற்பனை மையம்
இந்திரா நகர் விற்பனை மையம்

சந்தையின் போக்கு பற்றி விவரிக்கும் விவேக், துவக்கத்தில் இந்தியாவை மையமாக கொண்ட பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்கிறார். இப்போது வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வடிவமைப்பு போக்குகளை அறிமுகம் செய்து கொள்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்.

”எங்கள் வாடிக்கையாளர்கள் நாங்கள் விற்பனை செய்யும் வடிவமைப்பின் தன்மையை புரிந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் பிராண்டுடன் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளும் விதமும் மாறியிருப்பதை கவனிக்க முடிகிறது” என்கிறார் அவர். பிராண்டுடனான தொடர்பிற்கு சமூக ஊடகம் முக்கிய வழியாக இருந்தாலும் இப்போது இந்த தன்மை அதிகரித்திருக்கிறது என்று கூறுகிறார். இன்ஸ்டாகிராம் சேவை இவற்றில் ஒன்று என்கிறார்.

வருங்கால திட்டங்களைப்பொறுத்தவரை நாடு முழுவதும் மேலும் மையங்களை துவக்கி வளர்ச்சியை விரும்புவதாக கூறுகிறார். ஆன்லைன் இருப்பு மற்றும் சந்தையில் மேலும் ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விற்பனை மைத்தைன் உட்புறம்
விற்பனை மைத்தைன் உட்புறம்

"ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் தவிர சிறந்த இணைய அனுபவத்தை தரக்கூடிய சம்பக் இணைய விற்பனை மையத்திலும் கவனம் செலுத்த இருக்கிறது” என்கிறார் விவேக். வடிவமைப்பை கற்பிப்பது மற்றும் உருவாக்குவதிலும் சோதனைகள் செய்து பார்க்க உள்ளது.

விவேக் குறிப்பிட்டது போல இந்திய வாடிக்கையாளர்கள் காலத்திற்கு ஏற்ப மாறியுள்ளனர். உலகின் பல்வேறு வடிவமைப்பு பாணிகளை அவர்கள் அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். இந்த துறையில் இந்தியா சர்கஸ்(IndiaCircus) மற்றும் ஹாப்பிலிஅன்மேரிட் (Happily Unmarried) போன்ற நிறுவனங்கள் வளர்ச்சிக்கும் இது உதவியுள்ளது.

இணையதள முகவரி: Chumbak