அரசுத் திட்டங்களை மக்களிடம் எளிதாகக் கொண்டு செல்ல நண்பர்கள் நிறுவிய Govinfo.me 

0

என்னதான் நாம் டிஜிட்டல் உலகை நோக்கி சென்று கொண்டு இருந்தாலும் பாமர மக்களால் அரசு கொள்கைகள், மக்கள் நலத் திட்டம் போன்ற மக்களுக்கு தேவையான திட்டத்தை தெரிந்து கொள்ள பெரும் பாடாக இருக்கிறது. அரசு அலுவலகத்திற்கு சென்று ஒரு தகவலை பெறுவது என்பது பெரும் போராட்டம் தான். ஆனால் இப்பொழுது அரசு திட்டங்கள், விதிகள், கொள்கைகள், வேலை வாய்ப்புகள் போன்ற பல அரசு தகவல்களை GovInfo.me வலைத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தகவல்களை நமக்கு தருவதோடு மட்டுமல்லாமல் பாமரர்கள் பயன் படுத்தும் வகையில் எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தையிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் வரை, ஓய்வு பெற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அரசு அனைவருக்கும் உதவ பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், இப்படி எல்லாம் திட்டம் இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு தான் நம் சூழ்நிலை உள்ளது. அதனால் சுலபமாக மக்களுக்கு அரசு தகவல்களை சேர்க்கவே மகாரஷ்ட்ராவை சேர்ந்த அபிஷேக் தோட் GovInfo.me என்ற வளையதளத்தை உருவாக்கியுள்ளார்.

GovInfo.me உருவான கதை

டிசம்பர் 2015 அபிஷேக்கிற்கு பெண் குழந்தை பிறந்தபோதே “சுகானிய சம்ரிதி யோஜனா” என்ற ஒரு அரசு திட்டம் இருப்பதை தெரிந்துக்கொண்டார். அதாவது அது ஒரு பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவினங்களை சந்திக்க பிறப்பிக்கப்பட்ட சிறிய வைப்பு திட்டம். இதைப் பற்றி தெரிந்த அபிஷேக்கிற்கு எப்படி அந்த திட்டத்தில் இணைவது என்ற தகவல் இல்லை. அப்பொழுதே தன்னை போல் பல குடிமக்களும் அரசு திட்டங்களை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் அல்லது தெரிந்து பயன்படுத்த முடியாமல் இருப்பார்கள் எண்று யோசித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகே மக்களுக்கும் அரசுக்கும் இருக்கும் தொடர்பு இடைவெளியை சரி செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

விஷால் யாதவ், ராம் சவாய், அக்க்ஷய் மஹாலே, அர்பிட் ஜஜு மற்றும் மயூர் மகாஜன் ஆகிய தன் நண்பர்களுடன் இணைந்து தன் சொந்த முயற்சியில் தான் அரசு தகவல்களை பெற GovInfo.me வளையதளத்தை உருவாக்கினார். முதலில் பொதுமக்கள் களத்தில் கிடைக்கும் பிரபலமான மற்றும் பிரபலமற்ற - அரசாங்க திட்டங்களைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். மக்கள் எல்லாவற்றையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாங்கம் கூறி இருந்தாலும், ஆன்லைனில் கிடைக்கும் பல இணைப்புகள் செயல்படவில்லை என்பதை அறிந்தனர்.

அதோடு, எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசாங்க வசதி இல்லாமல் பொருத்தமான உதவிகள் மற்றும் திட்டங்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது, அவற்றின் விவரங்களைக் கண்டறிவதும் கடினமே.

இருப்பினும், தகவல்கள் சேகரித்து ஏப்ரல் 2016-ல் இந்த வளையதளத்தை வெளியிட்டனர். ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பற்றிய படிப்படியான வழிகாட்டி மற்றும் பிற விவரங்களுடன் திட்டங்களை எளியமுறையில் மக்களுக்கு புரியும் வகையில் ஆவணப்படுத்தினர்.

இப்போது GovInfo.me அரசாங்கத் தகவல்களின் ஆன்லைன் களஞ்சியமாக உள்ளது, இதில் திட்டங்கள், விதிகள், கொள்கைகள், வேலைகள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் அரசு தொடர்பான செய்திகள் (மத்திய மற்றும் மாநில இரண்டும்) ஆகியவை பட்டியல் இடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மஹாராஷ்டர மாநில திட்டங்கள் மட்டுமே govinfo.meல் இருந்தது. இந்த வலைத்தளம் திட்டம் என்ன என்பதை விளக்குகிறது, தேவைப்படும் ஆவணங்கள், எப்படி, எங்கு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்களையும் தருகிறது, மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உதவியையும் வழங்குகிறது.

"GovInfo.me மூலம் ஒரு புற்று நோயாளி மகாராஷ்ட்ரா அரசிடம் இருந்து மாதாந்திர உதவி தொகை பெற்று சிகிச்சை பெற்றார். இதுவே என்னை மிகவும் நெகிழவைத்த சம்பவம் என நினைவு கூறுகிறார் அபிஷேக்.

தற்பொழுது govinfo.meல் 1200 மேலான மத்திய அரசு திட்டமும் 29 மாநில அரசு திட்டத்தின் விவரம் உள்ளது. வாய் வழி சொல்லால் மட்டுமே இந்த வலைதளத்தை ஒரு மாதத்தில் 1 லட்சத்திற்கு மேலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வேலை வாய்ப்புகள் அல்லது கல்வி ஊக்கத்தொகை தேடும் மாணவர்கள், நிதி தேவை அல்லது மற்ற இதர தேவைகளுக்காக இந்த தளத்தை பயன் படுத்துகின்றனர். ஏதேனும் திட்டத்தை பற்றிய தகவல் இல்லை என்றால் மக்கள் இந்த இணையத்தில் அதற்கான கோரிக்கையை எழுப்பலாம். அபிஷேக் மற்றும் அவரது குழு முடிந்தவரை உதவுவார்கள்.

“இந்த வலைதளம் மூலம் இந்தியர்களை அரசுடன் நெருக்கமாக்க எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். இதன் மூலம் மக்கள் தகவல்களை பெற திட்டங்களை பயன் படுத்த எந்த வித தடங்களும் இருக்காது,” என்கிறார் அபிஷேக்

வணிகமாக மாற்றுதல்

அபிஷேக் இந்த வலைதளத்தை நிறுவனமாக மாற்ற முயற்சிக்கிறார். எதிர்காலத்தில் அனைத்து மாநிலத்தின் திட்டத்தையும் எல்லா இந்திய மொழிகளிலும் இணைக்க உள்ளனர். அது பாமரர்களை அடைய இன்னும் எளிமையான வழியாகும்.