பிறவி இருதய நோய் உடைய கிராமப்புறக் குழந்தைகளுக்கு உதவ பணியைத் துறந்து சேவையில் இறங்கிய மதுரை டாக்டர் தம்பதிகள்! 

3

இந்தியாவில் சிறப்பான ஹெல்த்கேர் மற்றும் மருத்துவ சேவை கிடைப்பது விலை உயர்ந்ததாகவே உள்ளது. அரசு மருத்துவமனைகள் ஆதரவளித்து மலிவான விலையில் சிகிச்சைகள் அளித்து வந்தாலும் ஒவ்வொரு வருடமும் CHD எனப்படும் பிறவி இருதய நோயினால் 78,000 குழந்தைகள் இறக்கின்றனர்.

இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளபோதும் இந்த நோய் குறித்து பலர் அறியவில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் அறுவைச் சிகிச்சைக்கு அதிகம் செலவழிக்க நேர்வதாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தினருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் சென்றடைவதில்லை. இதனால் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

இப்படிப்பட்ட பல இறப்புகளைப் கண்ட குழந்தைகள் இருதய அறுவைச்சிகிச்சை நிபுணரான டாக்டர் கோபி நல்லையன், குழந்தைகள் உயிரிழப்பைத் தவிர்க்க ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார். அவரது மனைவி டாக்டர் ஹேமப்ரியா நடேசன் உதவியுடன் பிறவி இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் பணம் மற்றும் மருத்துவ உதவியளிக்க ’லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷனை’ (Little Moppet Heart Foundation) அமைத்தார். 

டாட்டர் கோபி மற்றும் டாக்டர் ஹேமா
டாட்டர் கோபி மற்றும் டாக்டர் ஹேமா

பிறவி இருதய நோய் தாக்கத்தை மாற்றும் முயற்சி

அமெரிக்க நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசன் – நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் வெளியிட்டுள்ள பல்வேறு ஆய்வுகளின்படி இந்தியாவில் நூற்றில் இரண்டு குழந்தைகளுக்கு பிறவி இருதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிறந்த குழந்தையின் இருதய அமைப்பில் இருக்கும் இந்தக் குறைபாடு பரவலாக பலருக்கு ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சை செலவு 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரையாகும். மேலும் விழிப்புணர்வு இல்லாத காரணத்துடன் அரசு சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சையளிக்க முடியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.

”பிறவி இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படவேண்டியது முக்கியமாகும். ஏனெனில் அவர்களது குடும்பத்திலுள்ளவர்கள் தினக்கூலிகள் என்பதால் அவர்களது வருமானத்தைக் கொண்டு ஒரு வேளை உணவுத் தேவையை பூர்த்திசெய்து கொள்வதற்கே அதிக சிரமப்படுவார்கள்,”

என்கிறார் 36 வயதான டாக்டர் கோபி. பெரும்பாலான கிராமப்புற சுகாதார மையங்களில் வெளிநோயாளிகள் பிரிவிற்கும் சிறு அறுவை சிகிச்சைகளுக்கும் போதிய வசதிகள் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட இருதய நோய் போன்ற சிக்கலான நோய்க்கான சிகிச்சைக்கு மாவட்ட அளவிலுள்ள சுகாதார மையங்களுக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப்படுவார்கள். எனினும் பெரும்பாலான மூன்றாம் நிலை மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார மையங்கள் கூட இந்நோயை கையாள முடிவதில்லை என்கிறார் நாடெங்கும் 500-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட டாக்டர் கோபி.

போதிய உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கிடையே அலையவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை தாமதமாகி குழந்தைகள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் மருத்துவ நிபுணர்களையும் இலவச சிகிச்சை கிடைக்கும் இடத்தையும் தேடுவதற்காக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது வேலைநாட்களை செலவிட முடிவதில்லை. இதனால் குழந்தைகளை காப்பாற்ற வழியின்றி அவர்களது இறப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

இது குறித்து டாக்டர் கோபி மேலும் விவரித்தார். விரைவில் உயிரிழக்கும் நிலையிலிருந்த ஆறு வயது சிறுமி ஒருவரை சந்தித்தபோது, அந்தச் சிறுமி ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோதே அவருக்குப் பிறவி இருதய நோய் இருந்ததைக் கண்டறிந்தனர். இருந்தபோதும் அவரது பெற்றோர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அறிய சென்னை சென்றனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ள செலுத்தப்படவேண்டிய கட்டணம் குறித்து அறிந்ததும் அவர்கள் அதிர்ந்து போனார்கள். அந்தச் சிறுமியை அவர்கள் டாக்டர் கோபியிடம் அழைத்து வந்தபோது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நிலையைக் கடந்துவிட்டார். உயிர் பிழைக்கவைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் மிகமிகக்குறைவாகவே இருந்தது.

இரண்டு சிறு குழந்தைகளுக்கு அப்பாவான டாக்டர் கோபி இதே போன்ற நிலை பலருக்கு ஏற்பட்டிருப்பதைக் கண்டார். அவரது மனைவி டாக்டர் ஹேமாவுடன் இணைந்து ’லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்’ என்கிற அரசு சாரா அமைப்பைத் தொடங்கினர்.

”நல்ல சம்பளத்துடன் கூடிய ஒரு பணியைத் துறந்துவிட்டு ஒரு அரசு சாரா அமைப்பை துவங்குவது அவ்வளவு எளிதான முடிவு அல்ல. இருப்பினும் பிரகாசமான, அழகான சிறு குழந்தைகளின் வாழ்க்கையை, பிறவி இருதய நோய் முடக்குவதை பார்த்துக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு செயலில் ஈடுபட முடிவெடுத்தேன்,” என்றார்.

மனிதநேயத்துடன் செயல்படும் ஃபவுண்டேஷன்

2016-ல் நிறுவப்பட்ட லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஐந்து முகாம்களை அமைத்துள்ளது. டாக்டர் கோபி வெற்றிகரமாக 15 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். பிறவி இருதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான மருத்துவ உதவியும் அறுவை சிகிச்சையும் அளிப்பதே அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

தமிழகம் முழுவதுமுள்ள குழந்தைகளுக்கு பிறவி இருதய நோய் உள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஸ்க்ரீனிங் செய்வதற்காக இந்த அமைப்பு முகாம்களை அமைத்தது. இலவச சிகிச்சை அளிப்பதுடன் இந்த தம்பதிகள் குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆலோசனையும் வழங்கினர். அறுவை சிகிச்சைக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு குறித்தும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளச் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பரவலாக காணப்படும் நோயின் தன்மை குறித்து விழிப்புணர்வு முகாம்கள் வாயிலாக இளம் பெற்றோருக்கும் கருவுற்றிருக்கும் பெண்களுக்கும் இவர்கள் எடுத்துரைக்கின்றனர். 

”பிறவி இதய நோய் குணப்படுத்தக்கூடியது என்றும் விரைவாக கண்டறியப்படுவதும் சிகிச்சையளிப்பதும் முக்கியம் என்கிற தகவலை மக்களிடையே பரப்ப விரும்பினோம்.” என்கிறார் மை லிட்டில் மொபெட் நிறுவனரான 34 வயது டாக்டர் ஹேமா.

இளம் தலைமுறையினரின் வருங்காலத்திற்காக அரசாங்கமும் பொதுமக்களும் இணைந்து செயல்படவேண்டும்

ஏழையாக இருந்தாலும் செல்வந்தராக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் விலைமதிப்பற்றது என்று நம்புகிறது இந்த அமைப்பு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் நெடுநாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்பு, சிகிச்சைக்காக செலவழிக்க இயலாத காரணத்தால் மறுக்கப்படக்கூடாது.

மதுரையில் இருந்து இயங்கும் ’தி லிட்டில் மொபெட் ஹார்ட் ஃபவுண்டேஷன்’, அரசு பள்ளி சுகாதார ஸ்க்ரீனிங் முறை வாயிலாக கிட்டத்தட்ட 4,200 மாணவர்களை இதுவரை ஸ்கிரீன் செய்துள்ளது. ஐந்து மாதங்களுக்குள்ளாகவே 800-க்கும் மேற்பட்ட தனிநபர்களைச் சென்றடைந்துள்ளது. எனினும் நோயைக் கண்டறிவது என்பது வெறும் ஆரம்பம் மட்டும்தான். அரசாங்க மருத்துவ மையங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் அவர்களாகவே சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரைக்கப் படுகின்றனர் என்று விவரித்தார் டாக்டர் கோபி.

இந்தியா முழுவதுமுள்ள குடும்பங்களுக்கு குறிப்பாக வளர்ச்சியடையாத ஹெல்த்கேர் முறை காணப்படும் மாநிலங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இந்த தம்பதி உதவ விரும்புகின்றனர். எனினும் நிதி மற்றும் கிராமப்புற பகுதியில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் பற்றாக்குறை ஆகியவை மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தி லிட்டில் மொபெட் ஃபவுண்டேஷன் முகாம்களை நடத்துவதுடன் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சையை ஒவ்வொரு கட்டத்திலும் கிடைக்க பெற்றோருக்கு உதவும் வகையில் ஒரு வலுவான பரிந்துரை அமைப்பை ஏற்படுத்துவதும் எங்களது நோக்கமாகும்,” 

என்ற இல்லக்கோடு பயணிப்பதாக கோபி, ஹேமா டாக்டர் தம்பதிகள் தெரிவிக்கின்றனர்.  

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா