பொழுதுபோக்கை வணிகமாக்கிய முரளி கண்ணதாசன் - இந்தியாவின் முதல் ஸ்பான்சர்ட் RC பந்தய ஓட்டுனர்!

2

ரிமோட் கண்ட்ரோல் ஹெலிகாப்ட்டர், கார் ஆகியவற்றை சிறு பிள்ளைகள் பரிசு பொருளாக பெறுவது வாடிக்கை தான். கார்களின் மீதுள்ள காதலால் பொழுது போக்காக ஆரம்பித்த ரிமோட் கண்ட்ரோல் கார் ரேசிங் முழு நேர வர்த்தகமாக ஆகியது மட்டுமல்லாமல் இந்த திறனை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பது பிரமிப்பையே உண்டாக்குகிறது.

ஜாய் ரைசிங் ஹாபி என்ற பெயரில் இந்த துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் முரளி கண்ணதாசனிடம் தமிழ் யுவர்ஸ்டோரி பிரத்யேக நேர்காணல் கண்டது. 

கார் மீதான காதல்

"கார் மீது கொள்ளை பிரியம். ஆயிரக்கணக்கான ஹாட் வீல்ஸ் வைத்துள்ளேன், இவற்றை வரிசைபடுத்தி சோதனை முயற்சியில் விளையாடும் பழக்கம் இருந்தது" என்று கூறும் முரளி தற்செயலாக ரிமோட் கண்ட்ரோல் கார் விளையாட்டில் ஈடுபட்டதாக கூறுகிறார். 

சுமார் மூன்றடி உயரம் இருந்த அவரது ரிமோட் கண்ட்ரோல் கார் ஒரு மோட்டார் வாகனம் ஏறியதால் நொறுங்கி போனது. இரண்டு வருடங்களாக அதை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டதாக கூறும் முரளி, அது வெறும் பொம்மை என்பதை உணரவே சிறிது காலம் ஆனதாக கூறுகிறார். "அதை வீசி எரியாமல் பத்திரப்படுத்தி வந்தேன், இது உடைந்து போனது மிகவும் வருத்தம் அளித்தது" என்கிறார்.

இந்த சமயம் தான் அவரது நண்பர் கோவளம் அருகே RC கார் ஓட்ட டிராக் அமைத்தார். பல்வேறு ரிமோட் கார்களை வாடகை முறையில் எடுத்து ஓட்ட ஆரம்பித்ததாக கூறும் முரளி "இது வெகு நேரம் நீடிக்கவில்லை. இதற்கான செயல்பாட்டுச் செலவு அதிகமாக இருந்ததால் விரைவில் மூடப்பட்டது".

இவரது ஆர்வத்தைக் கண்ட அவர் மனைவி இதற்கான RC கார் ஒன்றை பரிசளித்தார். இதை பற்றி மேலும் கூறுகையில்,  

"காமர்ஸ் படிப்பை மேற்கொண்டதால் இதன் நுட்பங்களை பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. அதே சமயம் இதை கையாள்வதில் உள்ள சிக்கல்களை அறிந்து கொள்ள ஆர்வம் இருந்ததால் இதை பற்றி படித்தும் ஆராய்ந்தும் கற்றுக் கொண்டேன்."

2009 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தேசிய RC கார் பந்தயத்தில் பங்கு பெற்றார். "இங்கு தான் உண்மையை உணர்ந்தேன். இந்த பந்தயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தேன், இன்னும் நிறைய பயிற்சி மற்றும் புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்த தருணமது" என்று கூறும் முரளி 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய பந்தயத்தில் இரண்டாம் இடத்தை பெற்றார்.

 

"பந்தயத்தில் பங்கு பெறுபவர்களிடம் விலை உயர்ந்த கார்கள் இருக்கும், ஆனால் என்னுடைய குறிக்கோள் ட்ராக்கில் சிறந்த ஓட்டுனராக இருக்க வேண்டும் என்பதே. சாம்பியன்ஷிப்பின் போதுதான் மேம்பட்ட கார் பாகங்கள் தேவை என உணர்ந்தேன். இவை அனைத்துமே இறக்குமதி செய்ய வேண்டும். இதுவே JRH (Joy Rising Hobby) தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியது. இதற்கான செயலில் ஈடுபட ஆரம்பித்தேன்."

சந்தித்த சவால்கள்

இறக்குமதி செய்யத் தேவையான அனுமதி சான்றிதழ் முதல் அதற்கான முதலீடு வரை எல்லாமே பெரும் சவாலாகவே அமைந்தது என்கிறார் முரளி. நண்பருடன் சேர்ந்து ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தது, சில விதிமுறைகள் உட்படாதது மட்டுமல்லாமல் அப்பாவும் நான் தனித்தே முயல வேண்டும் என்றே எண்ணினார்.

"முதுகலை பட்டம், சில வருட வேலை அனுபவம் கொண்டு இந்த புதுத் துறையில் இறங்க வங்கிகளை அணுகிய பொழுது தான் நம்மின் சுய மதிப்பு என்ன என்று புரியத் தொடங்கியது" என்கிறார் முரளி. 

சூழ்நிலைகளை கண்டு முரளியின் தந்தை உதவி புரிய முன் வந்தார். "அப்பாவிடம் கடனாக பெற்ற நான்கு லட்சம் கொண்டு 2011 ஆம் ஆண்டு 'JRH' தொடங்கினேன். முதல் இறக்குமதியாக பத்து கார்களை கொண்டு வந்தேன்" என்று கூறும் முரளி இதன் பிறகும் நிறைய சவால்களை சந்தித்தாக கூறுகிறார். "ஏற்கெனவே இந்த தொழிலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு என் வரவு உற்சாகத்தை ஏற்படுத்தவில்லை. ஆறு மாத காலம் இறக்குமதி செய்த எந்த காரையும் விற்க முடியாமல் போனது" என்கிறார் முரளி. 

"காற்று ஒரு திசையில் வீசும் பொழுது அதை எதிர்த்து செல்வதில் தான் வாழ்கையின் சுவாரசியம்" என்று தன் தந்தை கூறுவதை நினைவு கூர்ந்த முரளி, இந்த சூழலை சமாளிக்கவும் இந்த பொழுதுபோக்கில் அதிக பேரை ஈடுபடுத்தும் எண்ணத்திலும் இலவச பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தார்.

முதலில் தொழில்நுட்ப வல்லமை இல்லாத அவர் இதைப் பற்றி பேசும் போது பலர் ஆச்சர்யப்பட்டனர். தற்பொழுது இந்த பொழுதுபோக்கில் பொழுதுபோக்கு ஆர்வலர்களை விட தொழில்நுட்பம் படித்தவர்கள் அதிகம் பேர் உள்ளதே தனக்கு கிடைத்த அங்கீகாரம் எனக் கூறுகிறார்.

மேலும் இந்த பொழுது போக்கை தொழிற்பன்பட்ட நோக்குடன் எடுத்துச் செல்ல, அஜோ ஜோசப் உடன் இணைந்து, IRCRA என்ற அமைப்பை  உருவாக்கியுள்ளனர்.

இவரின் நுட்பத்திறன் மற்றும் ஆர்வத்தின் காரணமாக 'ஹாங் நோர்' எனும் RC பிரபல ப்ராண்ட் இவரை ஸ்பான்சர் செய்ய முன் வந்தது. இந்த அங்கீகாரம் பெற்ற ஒரே இந்தியர் முரளி கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு பிடித்தமான உணர்வு பூர்வமான எந்த ஒரு விஷயத்தையும் விட்டுக் கொடுக்கவே கூடாது, பின்னாளில் இதுவே பெரும் சுமையான எண்ணத்தை தோற்றுவிக்கும் என்று கூறும் முரளி தற்பொழுது இந்தத் துறையில் முன்னோடியாக திகழ்கிறார்.

மேலும் வெற்றியை நோக்கி

தற்பொழுது வருடத்தில் நாற்பது கார்களை இறக்குமதி செய்யும் முரளி GT என்ற புதிய வகையை இந்தியாவில் அறிமுக படுத்தியும் உள்ளார். பொதுவாக சர்வதேச அளவில் பந்தயத்தில் இடம் பெரும் எந்த காரும் நம் நாட்டிற்கு வர ஐந்து ஆண்டுகளாவது ஆகும். GT வகை சிங்கப்பூரில் அறிமுகப் படுத்திய ஆரே மாதத்தில் இதை இங்கே அறிமுகப் படுத்தியுள்ளார் முரளி. இதன் முதல் மாதிரி பந்தயம் கோயம்புத்தூர் நகரத்தில் நரேன் கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை கார்களுக்கான முதல் பந்தயத்தை இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தும் எண்ணம் இருப்பதாகவும் நம்மிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் முரளி. 

இந்த பொழுது போக்கை பற்றி மேலும் அறிந்து கொள்ளIRCRA

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'மீம்'களுக்கு பின்னால் 'மீட்பர்'கள்: 'கோவளம்' மூர்த்தியும் அலைச்சறுக்கு நாயகர்களும்!