காற்று மாசுபடுவதை கண்டறிய, மாணவர்கள் உருவாக்கிய ட்ரோன்கள்!

0

சமகாலத்தில் ட்ரோனை(drone) போல சர்ச்சைக்குள்ளான கண்டுபிடிப்பு வேறெதுவுமில்லை. ரிமோட் மூலம் இயங்கும் இந்த ஆளில்லா குட்டி விமானங்கள் பெரும்பாலும் உளவு பார்க்கவே பயன்படுவதால் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகிறதோ என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. மத்திய கிழக்கில் இருக்கும் மக்களோ இந்த வகை ட்ரோன்களை பார்த்தாலே நடுங்குகிறார்கள். காரணம், ராணுவத் தேவைக்காகவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் உண்மையில், மற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை போன்று ட்ரோனின் நன்மை தீமைகளும் நாம் பயன்படுத்தும் முறையில்தான் இருக்கிறது. நல்லவழியில் பயன்படுத்தினால் ட்ரோனை போல நம் வாழ்வுமுறையை எளிதாக்கும் திறன் படைத்த சாதனம் தற்போதைக்கு வேறில்லை. இதை உணர்ந்தோ என்னவோ டெல்லியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காற்றில் இருக்கும் மாசு அளவை கணிக்கும் முறையை கண்டறிந்திருக்கிறார்கள்.

ட்ரோன்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை சுத்தமாக்கும் ஒரே நோக்கத்தோடு களமிறங்கியிருக்கிறார்கள் சஞ்சித் மிஸ்ரா, பிரணவ் கல்ரா, திரியாம்பிகே ஜோஷி ஆகிய மூன்று பதின்பருவ இளைஞர்களும். காற்றிலிருக்கும் ரசாயனங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கண்டறிந்து அதன்மூலம் எவ்வளவு தூரம் காற்று மாசுபட்டிருக்கிறது என்பதை அறிவதே இந்த தொழில்நுட்பம்.

சஞ்சித்துக்கும் திரியாம்பிகேவுக்கும் 16 வயதுதான் ஆகிறது. பிரணவுக்கு இவர்களை விட ஒரு வயது கம்மி. மூவரும் பத்தாவது படித்து வருகிறார்கள். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நம் அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புகளையும் விழிப்புணர்வையும் இந்த தொழில்நுட்பம் வளர்த்தெடுக்கும் என இவர்கள் மூவரும் நம்புகிறார்கள்.

நானும் திரியாம்பிகேவும் பள்ளித்தோழர்கள் என்கிறார் சஞ்சித். அவர்கள் ஒன்பதாவது படிக்கும்போது பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொண்டார்களாம். அந்த இடத்தில்தான் பிரணவ் அறிமுகமாகியிருக்கிறார். தொழில்நுட்பத்திலும், பொறியியலிலும் இருந்த பொதுவான ஆர்வம் இவர்களை நெருங்கிய நண்பர்களாக்கியிருக்கிறது. தங்களின் ஓய்வு நேரத்தில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படியெல்லாம் மக்களின் வாழ்க்கைமுறையை எளிமையாக்கலாம் என இவர்கள் யோசித்துக்கொண்டே இருப்பார்களாம்.

இந்த சமயத்தில்தான் சஞ்சித்திற்கு ட்ரோன் தொழில்நுட்பம் மேல் காதல் பிறந்திருக்கிறது. சஞ்சித் மூலம் பிரணவிற்கும் இந்த தொழில்நுட்பம் மேல் ஆர்வம் ஏற்பட, நாம் ஏன் ட்ரோன்களை பயன்படுத்தி காற்றிலிருக்கும் மாசு அளவை கண்டறியக் கூடாது என கேட்டிருக்கிறார். உலகின் அதிக மாசுபடுத்தப்பட்ட நகரங்களில் ஒன்றான டெல்லியில் வசிக்கும் இந்த மூவருக்கும் இந்த யோசனை சரியென பட அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். 2015 ஜுலையில் இவர்களின் முதல் மாதிரி உருவாகியிருக்கிறது.

“எங்களின் இந்த தொழில்நுட்பம் காற்றிலிருக்கும் மாசு அளவை துல்லியமாக கணக்கிடுகிறது. ஆனால் அவை அறிவியல் மொழியில் இருப்பதால் சாமானியர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. ஒரு தேர்ந்த சுற்றுச்சூழல் அறிவியலாளரால் மட்டுமே இந்த முடிவுகளை கணக்கிட்டு பார்க்க முடியும். எனவே, சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் முடிவுகளைத் தெரிவிக்க தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் திரியாம்பிகே.

கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ட்ரோன் பயன்பாடு இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ட்ரோன்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் நம்மால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும் என அரசிடம் எடுத்துச் சொல்வதன் மூலம் இந்த நிலையை மாற்றலாம் என்கிறார்கள் இவர்கள். எதிர்காலம், விஞ்ஞானத்தை முறையான வழிகளில் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது, அதிலிருந்து ஓடி ஒளிவதில் இல்லை என்பது இவர்களின் கருத்து.

பள்ளி செல்லும் இவர்கள் இந்த தொழில்நுட்பத்திற்கான பொருளாதார தேவைகளை மிகுந்த சிரமத்திற்கிடையேதான் சமாளிக்கிறார்கள். புதிதாக கேட்ஜெட்களை உருவாக்கும் முயற்சியிலிருப்பவர்களுக்கு தேவையான வசதிகளையும் கருவிகளையும் தரும் ‘மேக்கர்ஸ்பேஸ்’(Makerspace) என்ற அமைப்பு இவர்களுக்கு நிறையவே உதவி செய்திருக்கிறது. இதற்காக அந்த அமைப்பிற்கு நெகிழ்ச்சியாய் நன்றி தெரிவிக்கிறார்கள் இந்த மூவரும்.

“கண்கள் நியை கனவுகளோடும், மூளை நிறைய ஐடியாக்களோடும் இருக்கும் எண்ணற்ற மாணவர்களை எங்களுக்குத் தெரியும். ஆனால், அந்த ஐடியாக்களை எப்படி செயல்படுத்துவது என அவர்களுக்கு தெரிவதில்லை. மேக்கர்ஸ்பேஸ் போன்ற அமைப்புகள் அதிகளவில் உருவானால் அந்த மாணவர்களின் கனவு நனவாகும்” என்கிறார் சஞ்சித்.

தொடக்கத்தில் இந்த ஆய்வுக்கான செலவுகளை ஒரு தன்னார்வ நிறுவனத்தோடு பகிர்ந்து கொள்ள இவர்கள் முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட, நிதியில்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்தார்கள். உடனே ‘பீனிக்ஸ் ட்ரோன்ஸ் லைவ்’(Phoenix Drones Live) என்ற நிறுவனத்தை தொடங்கிவிட்டார்கள். இப்போது இதில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக காத்திருக்கிறார்கள். 


மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சைனைகளை ட்ரோன் தொழில்நுட்பத்தின் வழியே முடிவிற்கு கொண்டுவர ஏராளமான திட்டங்களை வைத்திருக்கிறது இந்தக் குழு. மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் இடங்களில் ட்ரோன்களை பயன்படுத்தி பார்க்கிங் வசதிகளை கண்டறியும் ஒரு செயலியை உருவாக்கும் திட்டமும் இவர்களிடம் இருக்கிறது. இதுதவிர, பாதுகாப்புத்துறை, விளம்பரத்துறை, கடலோர காவல் ஆகியவற்றுக்காக ட்ரோன்களை வடிவமைக்கும் திட்டமும் வைத்திருக்கிறார்கள்.

இணையதள முகவரி: PhoenixDroneLive