பாரம்பரிய துணிகள், கலைகள் கொண்டு பாங்கான உடைகள் தயாரிக்கும் மாலினி முத்தப்பா

1

பெங்களூருவில் இருக்கும் மாலினியின் தொழிற்கூடத்தை எட்டிப் பார்த்தோமானால், மத்தியப் பிரதேசத்தின் மஹேஷ்வர் முதல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்து துணிவகை வரை இந்தியாவின் எல்லாப் பகுதி துணிவகைகளும் காணக் கிடைக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னால் மாலினி க்ருஸ்னா என்ற பெயரில் தன் நிறுவனத்தைத் தொடங்கினார். பெண்களை சிறப்பாக உணரவைக்கும் ஆடைகளை அவர் தயாரித்து வருகிறார்.

இருபது வருடங்களாக இந்த ஆடையமைப்புத் துறையில் பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார் மாலினி. அபெர்கோம்பீ & ஃபிட்ச் மற்றும் கேப் போன்ற நிறுவனங்களில் உயர்பதவி வகித்த அவர் இறுதியாக லெவி ஸ்ட்ராஸ் நிறுவனத்தில் தெற்காசியாவின் பொருள்தருவித்தல் துறைத் தலைவராக இருந்திருக்கிறார். “ஒவ்வொரு நிறுவனத்திலும் நான் வகித்த பதவி தனித்தன்மையானது மேலும் நான் கற்றுக்கொள்ள வாய்ப்புகளைக் கொடுத்தது” என்கிறார்.

சிறுவயது முதலே தனியாக நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. அது நம் மண்ணின் ஆடை உருவாக்கும் தொழிலாளர்கள், கலைஞர்களுடன் வேலை செய்ய வேண்டுமென்ற ஆர்வத்திலிருந்து கிளைத்திருக்கிறது. “பாரம்பரியமுறை சாயமேற்றல், அச்சிடுதல், நெய்தல் போன்றவற்றை பயன்படுத்தி பெண்களுக்கான உடைகளைத் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தன் சகோதரி ஷோபனாவுடன் சேர்ந்து 'க்ருஸ்னா'வை ஆரம்பித்திருக்கிறார்.

ஆடை வடிவமைப்பின் மேலான விருப்பு, மாலினிக்கு சிறுவயது அனுபவங்களிலிருந்து கிடைத்திருக்கிறது. அவரின் அப்பா ராணுவப் பொறியாளராக இருந்ததால் அடிக்கடி இருப்பிடம் மாற வேண்டிய நிலை நிலவியது.

என் குழந்தைப்பருவம் முழுக்க இராணுவ ஜீப்களின் பின்னால் ஏறிக்கொண்டு காஷ்மீர், அஸ்ஸாம், புனே போன்ற கண்கவர் இடங்களுக்கு நகர்தலிலேயே கழிந்தது. என் அம்மா எல்லா இராணுவ கொண்டாட்டங்களுக்கும் சிறப்பாக உடையணிவார். அவரைப் பார்த்து வளர்ந்தபின் அவரைப் போல் அழகாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நிறங்கள் மற்றும் அழகாக உடுத்துதல் மீதான என் காதல் அவரிடம் இருந்து வந்ததுதான். அவர் தன்னம்பிக்கை மிகுந்த ஒரு அழகான பெண். ஆடையணிதல் மீதான என் ஆசை அப்போது ஆரம்பித்தது.

தன் ஆடைத் தேர்வுகளைப் பற்றிச் சொல்கையில் “நேர்த்தியாக உடுத்தியிருக்கிறோம் என்று உணர வைக்கும் சிற்சில மாற்றங்கள் உடைய பாரம்பரிய உடைகள்தான் என் தேர்வு” என்கிறார். சிறுகுழந்தையாக வேறுவேறு வடிவங்களில், அமைப்புகளில் ஆடையமைத்து சோதனை செய்து பார்த்திருக்கிறார். சேலைகளை வெட்டி தனக்கும் சகோதரிக்கும் பாவடைகள் உருவாக்கி இருக்கிறார். சீருடைகள் அணிந்த காலம் முடிந்து கல்லூரிக்குப் போகையில் சந்தையில் இருக்கும் எந்த ஆடையும் அவரைக் கவரவில்லை. பாம்பே டையிங்க் துணி வாங்கி தனக்கான ஆடைகளைத் தானே தைத்திருக்கிறார்.

ஒரு கடையில் வாங்கிய, பூப்போட்ட திரைச்சீலைத் துணியில் தைத்த கால்சட்டைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பின்னர் நண்பர்களும் தெரிந்தவர்களும் அவர்களுக்கும் அதுபோல செய்து தரச் சொன்னார்கள். என் ஓய்வு நேரத்தில் அதைச் செய்து எனக்கு செலவுக்குத் தேவையான பணத்தை சம்பாதித்தேன். வெகு விரைவிலேயே நான் பயன்படுத்தும் நிறங்கள், நான் துணிகளை வெட்டிய விதம், அதை முடித்துக் கொடுக்கும் நேர்த்தி இது எல்லாமே அந்த ஆடையை அழகாக்கியதோடு அணிபவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று கண்டு கொண்டேன்.

21 வயதில், தானே வடிவமைத்த ஆடைகளைக் கொண்டு ஒரு கண்காட்சியை அமைத்திருக்கிறார். ஃபேஷன் என்பதைப்பற்றி கேட்கையில் “அது மிகத் தவறாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு சொல்” எல்லாமே ஃபேஷன் தான். என்னைப் பொறுத்தவரையில் தனிமனிதனாக நம்மைப் பற்றி சொல்ல வேண்டியதைச் சொல்கிற எல்லாமே ஃபேஷன் தான். இன்றைய தேதியில் இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டுள்ளார்கள். இப்போதெல்லாம் அவர்களே முடிவெடுக்கிறார்கள். ஃபேஷன் என்பது நீங்கள் அணிவதைக் கொண்டு உங்களை விளக்குவதுதான்” என்கிறார்.

ஆறுபேர் கொண்ட தன் குழுவில் மாலினி பொருள்தருவித்தல் மற்றும் வடிவமைத்தல் இரண்டையும் கவனித்துக் கொள்கிறார். “என் சகோதரி முகநூல் தொடர்புகளை கவனித்து இதை ஓடவைக்கிறார். இவர்களைத் தவிர நான் ஒரு முக்கிய துணி வெட்டுபவரையும் மூன்று துணி தைப்பவர்களையும் பணியில் அமர்த்தியிருக்கிறேன்”.

தாங்கள் உருவாக்கும் ஆடைகள் ஏன் நேர்த்தியாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறதெனக் கூறுகிறார். “க்ருஸ்னாவில் எல்லாருக்கும் உடைகள் இருக்கிறது. கச்சிதம் என்று சொல்ல முடியாத சாதாரண உடல்வாகு உடையவர்களுக்கான ஆடைகள் அவை. ஒவ்வொரு துணிக்குப் பின்னும் ஒரு கதை, ஒரு துவக்கம் இருக்கிறது. வேறு வேறு கலைஞர்கள், நெசவாளர்களிடமிருந்து பெறப்பட்டு உலகளாவிய மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் தயாரிக்கப் படுகிறது. நாங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு அமைப்பில், பாங்கில் சிறு மாற்றங்கள் செய்து பொருந்த வைக்கிறோம்.” ஒரு துணியில் பல பாரம்பரிய வேலைப்பாடுகளைக் கொண்டுவந்து அந்த ஆடையில் பண்பாட்டைத் தக்கவைக்கிறார்.

ஒரு விசைத்தறியில் நெய்து லேசரால் அச்சிடப்பட்ட துணி என்னைக் கவர்வதில்லை. குஜராத்தில் கருநீல அஜ்ரக் வகை, மகாராஷ்டிரத்தின் கண் வகை, ஆந்திரா மற்றும் ஒரிஸாவின் இக்கட் வகை உணர்வுகளைத் தூண்டும். இவற்றின் கலவைகளை நான் துணிகளில் பயன்படுத்துகிறேன். காஞ்சிபுரத்தின் பருத்தி சேலை அல்லது குர்தாவை பெல்லாரியின் லம்பானிகளிடம் கொண்டுசென்று பூத்தையல் வேலைப்பாடு செய்கிறோம். நாங்கள் தேர்ந்தெடுக்கும் நிறங்கள் அதற்கு தனி அடையாளத்தைத் தருகின்றன. அஜ்ரக் துணியைக்கொண்டு ஒரு ஒற்றை ஆடையை தயாரித்தோம். அந்த ஆடையின் பொருத்தம் கச்சிதமாகவும் மிக அழகாகவும் இருக்கிறது.

இந்தத் துறையில் கிடைத்த அனுபவமும், பெரிய நிறுவனங்களிடம் பார்த்த வேலையும் அவருக்கான தரத்தை மிக உயரே நிறுத்தியிருக்கிறது. துல்லியத்திற்கும், சுத்தமான வேவைப்பாட்டிற்கும் அதிக கவனம் தேவைப்படுகிறது. தன்னால் தரம் சோதிக்கப்படாத ஒரு ஆடையை கூட நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியில் அனுப்புவதில்லை என மிகத் தெளிவாக இருக்கிறார்.

இதில் மிகப்பெரிய சவாலாக இருந்தது துணி வெட்டுபவரையும் தைப்பவரையும் எங்கள் தரத்திற்கு உயர்த்துவதுதான். ஆனால் இப்போது அவர்கள் தங்களுக்கென ஒரு தரத்தை வைத்துக்கொண்டுள்ளார்கள் அதனால் அவர்களை இப்போது கண்காணிக்கத் தேவையில்லை.

செய்வதை விரும்புவதுதான் அவரை மேலும் மேலும் இதைச் செய்ய வைக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் ஊக்கம் மற்றும் வடிவமைத்தலின் மேல் உள்ள காதல், இவைகள்தான் இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற தீயை அவருக்குள் மூட்டுகிறது

ஆங்கிலத்தில்: தன்வி துபே | தமிழில்: சௌம்யா சங்கரன்