நிழல் சமூகம் vs நிஜ சமூகம்  

Artificial Society அதாவது செயற்கையாக இணையத்தில் உள்ள சமூகம் மற்றும் நிஜ சமூகத்தின் இடையே நிலவும் உண்மையான நிலை என்ன?

0

இன்று நாம் தகவல் தொழில்நுட்ப உலகில் வாழ்கின்றோம் என்று சொல்லுவது பழமையாக மாறிவிட்டது. இணையதள உலகம், சமூகவலைத்தள உலகம் என்று தான் கூற வேண்டும். குறைவான கட்டணம், இலவச சேவை (Free Data), செல்போன்களின் விலை குறைவு போன்ற பல காரணங்கள் தான் இன்று பலவேறு மாற்றங்கள் ஏற்படக் காரணமாக உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி, இது ஒரு மாபெரும் இணையதள புரட்சிக்குக்  காரணம் என்றால் மிகையாகாது.

சமூகவலைதளங்கள், இணையத்தளம் என்பதைத் தாண்டி அதுவும் ஒரு சமூகம் என்ற நிலைமைக்கு வந்து விட்டது. நிலைமைக்கு வந்துவிட்டது என்பதை விட, அப்படி உருவாக்கிவிட்டார்கள் என்பது தான் உண்மை. ஒரு செயற்கையான சமூகத்தை (Artificial society)ஐ சமூக வலைத்தளங்கள் உருவாக்கிவிட்டது. இந்த Artificial society இல் எல்லாவிதமான விஷயங்களும் நடைபெறுகின்றது. புது புது தொழிலை தொடங்குகின்றனர், புது உறவுகள் பிறக்கின்றது, புதுவிதமான விளம்பர யுக்திகள் பிறக்கின்றது. நிஜத்தில் நடக்க வேண்டிய எல்லாவற்றும் Artificial society இல் நடைபெறுகின்றது. இவை யாவும் செயற்கை என்று மறந்து, இது தான் உண்மை என்று எல்லாரையும் நம்ப வைத்தது தான் இதன் வெற்றி.

இந்த செயற்கையான சமூகத்தில் மக்கள் எவ்வாறு இருக்கின்றார்கள் என்று பார்த்தால், பலரும் செயற்கையாக தான் உள்ளார்கள். நிஜத்தில் இருக்கும் முகத்தை பல பேர் இந்த செயற்கை உலகத்தில் காட்டுவதில்லை. பல நேரங்களில் அது இயற்கை முகத்திற்கும் செயலுக்கும் எதிர்மாறாக உள்ளது. இந்த செயற்கை, இயற்கையாக மாறும் போது தான் பல நேரங்களில் பிரச்சனை தொடங்குகின்றது. குறிப்பாக செயற்கை உறவுகள், பல நேரம் இயற்கையில் தோல்வியாக தழுவுகின்றது.

உறவுகள் தாண்டி பல நேரங்களில், இந்த artificial society இல் எல்லா விதமான சண்டைகள், கருத்து மோதல்கள் நடைபெறுகின்றது. ஒரு சில நேரம், போர் மூளும் அளவிற்கு வாக்குவாதங்கள் நடைபெறுகின்றது. சில நேரங்களில் போரும் நடை பெறுகின்றது. ஆனால் யாருக்கும் எந்த விதமான சேதம் இல்லை. கெட்டதிலும் ஒரு நன்மை என்றால், உண்மையான சமூகம் அமைதியாக உள்ளது. ஒருவர் சமூக வலைத்தளத்தை பார்த்து விட்டு, நிஜ உலகை பார்த்தால் புரியும் 'நிஜ உலகம்' எவ்வாறு அமைதியாக உள்ளது என்று. கத்தி இன்றி ரத்தம் இன்றி இணையதள சண்டைகள் நடைபெறுவது மகழ்ச்சியாக இருந்தாலும், நிஜத்தில் போராடும் குணத்தை இந்த artifical society பறித்து விட்டது என்பது வருத்தம்.

இதில் சாதகம் பாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கை உண்மை. இயற்கை ஒரு நிஜம். இவை யாவும் பொய், நிழல். நிழலை நம்புவது அறியாமை. இந்த அறியாமை என்னும் நிழல் இருந்து நாம் வெளியே வர வேண்டும். மீண்டும் அனைவரும் இயற்கையை நம்ப வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்த உலகில் மனித உறவுகள் மேம்படும். அதை நோக்கிய பயணம் வேண்டும். சிந்தியுங்கள். மீண்டும் இயற்கையை நோக்கி நகருவோம்...

கட்டுரையாளர்: பிரவீன் குமார், ஒரு மென்பொறியாளர். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துக்கள். யுவர்ஸ்டோரி அதற்கு பொறுப்பேற்காது.