ஓட்டுவது நீங்கள் மிதக்க வைப்பது நாங்கள்: ’Fego Float’ இருக்கை மெத்தைகள்!   

ஃபீல் குட் இன்னொவேஷன்ஸ் தினசரி பயணிக்கும் போது நாம சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இந்த இருக்கை மெத்தை மூலமாக தீர்வு கொடுத்துள்ளனர்.

0

இந்திய சாலைகளில் வண்டியில் பயணிப்பது ஒரு கலை. எந்த இடத்தில குழி இருக்கும்? எந்த இடத்தில் மேடு இருக்கும்? வேகத்தடையின் உயரம் இமைய மலை அளவா அல்லது அதனினும் அதிகமா இவ்வாறு 1000 கேள்விகள் மனதினில் வைத்துக்கொண்டு வண்டியை செலுத்தியாக வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அனைவரையும் சமமாக பாவிப்பது சாலைகள் மட்டுமே. அனைவரின் முதுகும் கழண்டுவிடுகிறது. 

கழுத்தில் நரம்பு பாதிப்படைவது, எலும்பு உராய்வது, கரு கலைவது, முதுகு வலி என ஒவ்வொரு நாளும் சாலைகள் காரணமாக மக்கள் அவதியுறுவது அதிகரித்துதான் வருகிறது.

இவற்றை மனதில் வைத்து, இவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, ’ஃபீல் குட் இன்னோவேஷன்ஸ்’ என்ற வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் முனைவு  ’Fego Float’ பீகோ பிளோட்’-டை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது காற்றடைத்த மெத்தை போன்ற விரிப்பாகும். இதன் மூலம் நமது பயணம் அனுபவம் இனிதாக அமையும் என்கின்றனர்.

சமூக தாக்கம்

'பீல் குட் இன்னொவேஷன்ஸ்' என்ஐடி சூரத்தில் படித்த 3 மாணவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. விஸ்வநாத் மலடி (29), மாதவ் ரெட்டி கொல்லி (28) மற்றும் சந்தோஷ் சமலா (31) மூவரும் படித்து முடித்தவுடன் தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசையின் விளைவு இந்த தொழில் முனைவாகும். 

100 வணிக மாதிரிகளுக்கும் மேலாக அலசிப்பார்த்து, சமூக தாக்கம், புதுமைகளை புகுத்துதல், மற்றும் பொருளுக்கான சந்தை முதலியவற்றை கருத்தில் கொண்டு, ’ஃபீகோ பிளோட்’ உருவாக்கப்பட்டுள்ளது. 

"சமுதாயத்தில் உங்கள் பொருள் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்ற எண்ணமே உங்களுக்கு ஒரு உந்துதலாக அமையும். மேலும் உங்களது வணிக மாதிரியும் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை கொடுக்க உதவும்.” 

புதுமைகளை புகுத்துதல் என்பது எங்களது அணி எப்போதும் சோர்வடையாது ஓடிக்கொண்டே இருக்க பயன்படுகின்றது. கடைசியாக 6 முதல் 7 ஆண்டுகள் உங்கள் வாழ்வில் நீங்கள் அற்பணித்ததற்கு மிகப்பெரிய வருமானம் கிடைக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் மிகப்பெரிய சந்தையை தேடுகிறோம். எங்களின் ஃபீகோ பிளோட் அனைத்தையும் பூர்த்தி செய்தது, என்கிறார் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விஸ்வநாத்.

காயத்திற்கு (உடல்) காற்றடைத்த மெத்தை:

செப்டம்பர் 2014-ல் ஃபீகோ பிளோட்டுக்கான யோசனை, வடிவமைப்பில் புதிதான விஷயங்கள் பற்றிய ஒரு ஓபன் சோர்ஸ் கருத்தரங்கின் போது உதித்துள்ளது. அதன் பின்பு மூன்று ஆண்டுகள் ஆய்விற்கும், பொருள் மேம்பாட்டிற்கும் செலவிடப்பட்டு, பொருளில் இறுதி வடிவம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அணி ஹைதராபாத் ஜுப்லீ ஹில்ஸ் பகுதியில் பணியாற்றி வருகிறது.

Fego Float’ பெயர்க்காரணம் :

தொழில் முனையின் பெயரான ஃபீல் குட் இன்னொவேஷன்ஸ்சை சுருக்கி ஃபீகோ எனவும் ஃபிளோட் என்பது அவர்கள் பொருளின் செயலை மற்றும் தொழில் நுட்பத்தை குறிப்பதாகவும் சூட்டியுள்ளனர்.

இதில் உள்ள புதுமையான காற்றடைக்கும் தொழில்நுட்பம், இதனை ஒரு மெத்தை போன்று இயங்க உதவுகின்றது. கழட்டி மாட்டும் வசதியுள்ள இந்த இருக்கையில் குமிழிகள் உள்ளன. இவை ஒன்றோடொன்று இணைந்து இருப்பதால், வண்டியை ஓட்டுபவருக்கும், வண்டிக்கும் இடையில் ஒரு மெல்லிய காற்று படலம் உருவாகின்றது. இதன் மூலம் 46% அதிர்வுகள் தவிர்க்கப்படுகிறது.

ஃபீகோ தினசரி பயணத்தில் எவ்வாறு ஒரு மாற்றத்தை கொடுக்க இயலும் என விஷ்வநாத் கூறியது, 

" ஒருவர் இதன் மேல் அமரும் பொழுது, காற்று குமிழிகள் அவரின் எடைக்கு ஏற்ப தானாக பகிரப்பட்டு, அவரது முழு எடையும் சமமாக இருக்கை மீது இருப்பது போல் பார்த்துக்கொள்கிறது. அடுத்து வண்டி ஒரு குழியில் இறங்கினால், அல்லது வேகத்தடை மீது ஏறினால், அப்போது உருவாகும் அதிர்வுகள் முதுகு தண்டு வடத்திற்கு செல்லாதவாறு இந்த காற்று குமிழிகள் அதனை தடுக்கின்றன. இதில் உள்ள மிதக்கும் தொழில்நுட்பம், வண்டியை ஓட்டுபவரை நமது சாலைகளில் இருந்து காப்பாற்றி மிதக்க விடுகின்றன."

இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் எதுவாக இருந்தாலும், எடையை சரிசமமாக இருக்கையின் மீது பகிர்வதால், நீண்ட வண்டிகளின் நெரிசலில் சிக்கி இருந்தாலோ, அல்லது தொலைதூர பயணங்களின் போதும், முதுகு தண்டுவடத்திற்கு ஃபீகோ பாதுகாப்பு அளிக்கின்றது. சோர்வு மற்றும் களைப்பை நீக்கி, நீங்கள் பயணிக்கும் தூரத்தை இருமடங்காக்குகிறது. 

“இந்திய சாலைகளின் நிலைகளை கருத்தில் கொண்டால், இது கண்டிப்பாக ஒவ்வொருவரும் உபயோகிக்க வேண்டியதாகும். ஓட்டுபவராக இருந்தாலும், இல்லை பின்னல் அமர்பவராக இருந்தாலும் அவர்களின் சுகமான பயணத்திற்கு ஃபீகோ பொறுப்பு."

முதல் படி :

சரியான அணியை தேர்வு செய்து, முனைவிற்கான நிதியை திரட்டுவது என்பது முதலில் சவாலாக இருந்தது. ஆனால் விரைவாக அரசிடம் இருந்து மானியம் கிடைக்க அது நம்பிக்கையை மேலும் வளர்த்தது, என்கிறார் விஸ்வநாத். முதலீட்டாளர்கள் தந்த முதல் சுற்று நிதியோடு, க்ரௌட்பன்டிங் மூலம் மேலும் நிதி திரட்ட இந்த அணி முடிவு செய்ய, "பியூயல் எ ட்ரீம்" என்ற தளத்தின் மூலம் டிசம்பர் 1, 2017ல் ஃபீகோ பிளோட் துவங்கப்பட்டது.

"மிகவும் சிந்தித்து இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். மக்களிடம் "க்ரௌட் பன்டிங்" மூலம் நிதிதிரட்டியதால், எங்களின் கூட்டாளிகள் போல அவர்கள் இயங்கினர், எங்கள் திட்டத்திற்கு இது மேலும் வலு சேர்த்தது. நிதி நிலைமையை நிர்வாகிக்கவும், தேவைக்கு ஏற்ப பொருளை கொடுக்கவும் உதவினர். அதைவிடவும், நிறுவனத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல நிதியளித்த அனைவரும் உதவினர். எனவே துவக்கம் சரியாக அமைந்தது எங்களுக்கு," என்கிறார் விஸ்வநாத்.

தி பியூயல் எ ட்ரீம்’ அணியும், எங்கள் நிறுவனத்தின் துவக்கத்தின் முன்பும், துவக்க கட்டத்திலும் உதவினர். சரியாக திட்டமிடல், விலையை நிர்ணயித்தல், பொருளை சந்தைப்படுத்துதல், மற்றும் மக்களிடம் கொண்டு சேர்த்தல் என அவர்கள் பங்கு இருந்தது. க்ரௌட் பன்டிங் நமது ஊகங்களை உறுதிப்படுத்தவும், எங்களை போன்ற தொழில் முனைவுகள் சந்தையில் கால் பதிக்கவும் ஒரு தளம் அமைத்து தருவது மட்டுமின்றி அதற்கு மேலும் உதவிகளை செய்கின்றது.

சரியான துவக்கம் :

துவங்கி 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இது வரை 1600 ஃபீகோ பிளோட்க-ள் 200-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து 1400 நிதியளித்தவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு 1299 என்ற விலையிலும், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1599 என்ற விலையிலும் தற்போது ஃபீகோ பிளோட் கிடைக்கின்றது. ஒரு பைக் மற்றும் காருக்கு சேர்த்து வாங்கினால் ரூ.2799 என்ற விலையில் கொடுக்கின்றனர். விலை காரணமாக ஒன்றும் மேற்பட்ட பிளோட்களை மக்கள் வாங்கியுள்ளனர். மேலும் பொருளுக்கு வரும் விமர்சனமும் நல்ல முறையில் உள்ளது. 

”மெத்தை வாங்கியவர்கள் உருவாக்கிய 10-ற்கும் மேற்பட்ட காணொளிகள் மூலம் இந்த பொருளின் மீது அவர்கள் வைத்துள்ள அன்பு வெளிப்படுகின்றது. மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்கள் பொருளை பற்றி பதிவிட்டுள்ளனர்," என்கிறார் விஸ்வநாத்.

மேலும் 2 லட்சம் என்ற இலக்கோடு துவங்கப்பட்டு, இன்று ஃபீகோ பிளோட்டின் கூட்டுநிதி 20 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் 1000 மடங்கு நிதியுதவி வந்துள்ளது. எங்கள் பொருளை கேட்டு இந்தியா முழுவதிலும் இருந்தும் வேண்டுகோள்கள் வந்துள்ளன. மேலும் சிறிய மற்றும் பெரிய ஊர்களில் இருக்கும் இருசக்கர வாகன குழுக்கள் எங்கள் பொருளை வாங்கத் துவங்கியுள்ளனர்.

இதோடு இவர்கள் சாதனை முடியவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய ’க்ரௌட் பன்டட்’ பொருளாக தற்போது ஃபீகோ பிளோட் மாற இருக்கின்றது. அடுத்த 3 வருடங்களில் 100 கோடி வருமானம் உள்ள நிறுவனமாக மாற இவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

"தற்போது பிக்பாஸ்கெட் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தையில் உள்ளோம். அவர்கள் பணியாளர்களின் சோர்வை குறைப்பதற்கான ஆய்வில் உள்ளோம். அதோடு அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் செலவையும் குறைக்க வாய்ப்பு உள்ளது," என்கிறார் விஸ்வநாத். கிரௌட் ஃபன்டிங் முடிந்தவுடன் அமேசான் தளத்தில் இதனை கொண்டு வரும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர் இந்த அணியினர்.

சமுதாயத்தில் ஒரு தாக்கம், புதுமைகளை புகுத்துதல், மிகப்பெரிய சந்தை, இவற்றை குறிவைத்து மேலும் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை உருவாக்க இக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு நமது பயணத்தினை மேலும் சிறப்பாக்குவது இவர்களுது நோக்கம்.

ஆங்கில கட்டுரையாளர்: சானியா ராஜா