சாலைக் குழியில் சிக்கி விபத்து ஏற்பட்டு மகனை இழந்த தந்தை மேற்கொண்ட சீரமைப்புப் பணிகள்!

0

2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி ஒரு மோசமான செய்தியுடன் கண் விழித்தார் தாதாராவ் பில்ஹோர். இவரது 16 வயது மகன் மும்பையின் ஜோகேஸ்வரி – விக்ரோலி லிங்க் ரோட்டில் இருந்த குழியினால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். ஒரே மகனின் இழப்பால் கலங்கிப்போன தாதாராவ் சாலைகளில் உள்ள ஒவ்வொரு குழிகளையும் சீரமைக்கும் பொறுப்பை தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டார். 

லிங்க் சாலையில் மழைநீரால் மறைக்கப்பட்டிருந்த ஒரு ஆழமான குழியில் தாதாராவின் மகன் பிரகாஷின் வாகனம் விழுந்ததால் அவர் உயிரிழந்தார். பிரிஹன் மும்பை நகராட்சி நிர்வாகத்திடம் (பிஎம்சி) பல தடவை முறையிட்டும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேவர் ப்ளாக், கட்டுமானத்திற்கான மணல் மற்றும் இதர தேவையான உபகரணங்களை எடுத்துக்கொண்டு தானே களமிறங்கினார் தாதாராவ். பிரகாஷின் நண்பர்களும் சாலையில் இவரது பணியைக் கண்ட வழிப்போக்கர்களும் தாதாராவுடன் இணைந்துகொண்டனர்.

ஏஎன்ஐ உடனான உரையாடலில் அவர் குறிப்பிடுகையில்,

“என்னுடைய மகன் பிரகாஷுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது. இந்தியாவில் சாலைகள் குழிகள் இல்லாமல் காணப்படும் வரை நான் தொடர்ந்து பணியாற்றுவேன். நம் நாட்டில் மக்கள்தொகை அதிகளவில் உள்ளது. குறைந்தது ஒரு லட்சம் பேர் குழிகளை சீரமைக்கும் பணியைத் துவங்கினாலும் இந்தியா குழிகள் இல்லாத பகுதியாக மாறிவிடும். நான் சோர்வடைந்து விட்டேன். இருப்பினும் என்னுடைய பணியை நிறுத்திக்கொள்ள மாட்டேன்,” என்றார். 

47 வயதான இவர் Spothole என்கிற மொபைல் செயலியையும் உருவாக்கியுள்ளார். குழிகளைக் கண்டறிவதற்கும் இந்த சிக்கலுக்கு தீர்வுகாண்பதற்கும் மற்றவர்களின் உதவியைப் பெற இந்த செயலி வழிவகுக்கும். பெரும்பாலான நேரங்களில் மண், குப்பைகள், கட்டுமான தளங்களில் இருந்து சேகரிக்கப்படும் பேவர் ப்ளாக்குகள் ஆகியவற்றை பயன்படுத்துவதாக தெரிவித்தார். ’தி ஏசியன் ஏஜ்’ இடம் செயலி குறித்து அவர் குறிப்பிடுகையில்,

”ஸ்மார்ட்ஃபோனில் ஏற்கெனவே இருக்கும் மொபைல் கேமிரா, ஜிபிஎஸ், இணைய இணைப்பு ஆகிய மூன்று அடிப்படை வசதிகளை இந்தச் செயலி பயன்படுத்திக்கொள்கிறது. மக்கள் கூட்டாக பொறுப்பேற்று தீர்வு காண்பதில் பங்களிக்க இந்த செயலி உதவுகிறது. குழிகளை சீரமைப்பதற்கான முதல் படியே குழிகளைக் கண்டறிவதுதான். பிரிஹன்மும்பை நகராட்சி நிர்வாகத்திடம் குழியை அடையாளம்காட்ட ஸ்பாட்ஹோல்ஸ் உதவுகிறது. பின்னர் பிஎம்சி பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க இது உதவும்,” என்றார்.

கடந்த ஒரு மாதத்தில் மும்பையில் பெய்த கன மழையைத் தொடர்ந்து இங்கு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 2017-ம் ஆண்டு நாடு முழுவதும் 3,600 பேர் சாலையில் உள்ள குழிகளால் உயிரிழந்துள்ளனர். இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது உத்திரப்பிரதேசம். இங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 987 என ’டைம்ஸ் ஆஃப் இண்டியா’ அறிக்கை தெரிவிக்கிறது. 

ஒவ்வொரு நாளும் பத்து பேர் சாலையில் உள்ள குழிகள் காரணமாக உயிரிழப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. அக்கறையின்மையுடன் கூடிய இந்த சூழலில் ஒரு தனிநபர் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு தாதாராவ் பில்ஹோரின் முயற்சி ஒரு எடுத்துக்காட்டாகும்.

கட்டுரை : THINK CHANGE INDIA