கதிஜாவுக்கு முழு முகம் கிடைத்திட உதவிக்கரம் நீட்டுவீர்!

2

ஒருபுறம் வெறுப்பூட்டும் செயல் அரங்கேறும் நேரத்தில், மறுபுறம் அன்பையும் இரக்கத்தையும் மனிதர்களிடையே பரப்பும் பெருமித நிகழ்வுகளும் நடக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு 'தி லாஜிக்கல் இந்தியன்' ஃபேஸ்புக் பக்கத்தில், கதிஜா என்ற முழு முகமற்ற பெண் ஒருவரின் புகைப்படம் பதிவேற்றப்பட்டிருந்தது. அதில் ஏகப்பட்ட கருத்துகள் கொட்டப்பட்டிருந்தன. சிட்னியில் வசித்து வரும் நசீப் அலுவாலியா, தற்போது இந்தியா வந்திருந்த நிலையில், அவரது கண்களிலும் அந்த ஃபேஸ்புக் பதிவு பட்டது. ஆயினும், மற்றவர்களைப் போல் அல்லாமல், அந்த போஸ்டின் தாக்கம் அவர் மனதில் மீண்டும் மீண்டும் நிழலாடியது. அன்று மாலை மீண்டும் அந்தப் பதிவை பார்த்தார். அதில் இடம்பெற்றுள்ள கருத்துகளையும் படித்தார். எல்லாரும் கருத்துகளைச் சொல்லிச் செல்கிறார்களே தவிர, ஒருவர் கூட நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்பதைப் பார்த்து ஏமாற்றம் அடைகிறார். உடனடியாக, ஜே வர்மாவுடன் இணைந்து ஒரு ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி செயலில் இறங்குகிறார். கொல்கத்தாவில் கதிஜா குடும்பத்தைக் கண்டறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருக்கும் உள்ளூர் தொழிலதிபர்தான் ஜே வர்மா.

முழுமையான முகமும் கண்களும் இல்லாமல் பிறந்த கதிஜாவுக்கு இப்போது வயது 21. நீண்டகால பெருங்கட்டிகளுக்குக் காரணமாகும் நியூரோஃபிப்ரோமாடோசிஸ் (Neurofibromatosis) எனும் பாதிப்புதான் இவருக்கும் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. கதிஜா பிறந்தபோது அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. பெற்றோரால் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஆறு மாத காலம் அனுமதிக்கப்பட்டார். பல பரிசோதனைகளும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில், அவருக்கு எந்தத் தீர்வும் இல்லை என்று மருத்துவர்கள் முடிவுக்கு வந்து கைவிரித்தனர். நாட்களும் வயதும் செல்லச் செல்ல, அதிகப்படியான தோல் வளர்ச்சியால் அவரது நிலையும் மோசமானது.

தற்போது, கதிஜாதான் தனது குடும்பத்துக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முதன்மையானவர். தன் தந்தையுடன் சேர்ந்து பிச்சை எடுப்பதுதான் அவரது அன்றாட வேலை. தன் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையை தொலைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்தகட்ட சிகிச்சைகள் குறித்த பேச்சு எழுவதையே தவிர்த்து வந்தார் அந்தத் தந்தை. அவர் பழ வியாபாரியாக மாதம் ரூ.7000 சம்பாதிக்கிறார். அது அவரது குடும்பத்துக்கு போதுமானதாக இல்லை என்பது நிதர்சனம்.

கதிஜா குறித்த அந்தப் பதிவில் நசீபின் கருத்தைப் படித்த பிறகு, அவருடன் ஜே நட்புடன் தொடர்புகொண்டார். "கொல்கத்தாவில் இந்தப் பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது பலமுறை பார்த்திருக்கிறேன். நசீபின் உணர்வுபூர்வ கருத்தைப் படித்த பிறகு, அவரைத் தொடர்புகொண்டேன். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அவரது வீட்டை அடைவதற்கு ஏழெட்டு நாட்கள் ஆனது. ஒன்றரை கோடி மக்கள் வாழும் நகரத்தில் ஒரு பிச்சைக்காரரைக் கண்டுபிடிப்பது சாதாரண காரியமல்ல. போலீஸ் கமிஷனரிடம்கூட மனு கொடுத்தோம்" என்கிறார் ஜே.

ஒருவழியாக அந்தப் பெண்ணின் குடிசை வீட்டை ஜே கண்டுபிடித்தார். அவர்களது பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது. கதிஜாவுக்கு சிகிச்சை அளிக்க முழுமையாக உதவி செய்வதாக ஜே உறுதியளித்தார். ஓராண்டு முழுவதும் தேவையான நிதியுதவியை வழங்கவும் அவர் முன்வந்தார்.

ஜே-வும் நசீபும் இணைந்து 'சோல் ஏஞ்சல்ஸ்' (Soul Angels) என்ற பெயரில் கதிஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நிதி திரட்டத் தொடங்கினர். மங்களூருவைச் சேர்ந்த டாக்டர். முஸ்தபா காதீரை தொடர்புகொண்டனர். கதிஜாவுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க அவர் முன்வந்தார். எனினும், அறுவை சிகிச்சைக்கும் முன்பும் பின்பும் ஆகக்கூடிய மருத்துவ செலவு என்பது மிக அதிகம். அந்தத் தொகையை கதிஜாவின் குடும்பத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் செலுத்த இயலாது என்பது தெளிவு. எனவே, அந்தத் தொகையை நன்கொடைகள் மூலம் இருவரும் திரட்ட முடிவு செய்து ஆன்லைன் களத்தில் இறங்கினர். கெட்டோ மூலம் நிதி திரட்டத் தொடங்கினர். ரூ.10 லட்சம் என்பது இலக்கு என்ற நிலையில், ரூ.6 லட்சத்தைத் தொட்டிருக்கிறது நல்லோர் அளித்த கொடைகள். நீங்களும் இங்கே உதவுவதன் மூலம் கதிஜாவுக்கு உதவிக்கரம் நீட்டலாம். அடுத்த வாரத்தில் கதிஜாவையும் அவரது குடும்பத்தையும் டாக்டர் முஸ்தபாவும் நசீபும் சந்திக்கின்றனர். மங்களூருவில் அடுத்த 6 மாதங்களில் மூன்று கட்டங்களாக அறுவை சிகிச்சை நடக்கிறது.

இந்த உதவிக் குழுவை உருவாக்கியதன் மூலம் ஜே-வும் நசீபும் கதிஜாவின் வாழ்க்கையில் தேவதைகளாகவே தோன்றுகின்றனர். ஆனால், எந்த அதகளமுமின்றி அடக்கமாகவே உதவிகளைச் செய்ய விரும்புகிறார் ஜே. "நாங்கள் இருவருமே இணையத்தில் ஒரே நேரத்தில் ஃபேஸ்புக் போஸ்ட் ஒன்றை படிக்க நேர்ந்தது சாதாரண நிகழ்வே" என்கிறார், ஓர் அசாதாரண உதவிக்கரம் நீள வித்திட்டவர்களில் ஒருவர்.

கதிஜாவிற்கு உதவி செய்ய: Soul Angels

ஆக்கம்: ஆதித்ய பூஷன் திவிவேதி | தமிழில்: கீட்சவன்