இந்திய விமானப் படையில் இணையும் டீ விற்பனையாளரின் மகள்!

2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது இந்திய விமானப் படை வீரர்கள் மேற்கொண்ட மீட்புப்பணிகளைக் கண்ட பிறகு 24 வயது ஆஞ்சல் கங்வாலுக்கு விமானப் படையில் சேரவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது.

0

24 வயதான ஆஞ்சல் கங்வால் மத்தியப்பிரதேசத்தில் டீ விற்பனை செய்பவரின் மகள். இவரது கனவு நனவாகியுள்ளது. இந்திய விமானப்படையில் பறக்கும் படைத்தளத்திற்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 22 மாணவர்களில் இவரும் ஒருவர். அத்துடன் மதிப்புமிக்க இந்திய விமானப்படைக்கு மத்தியப்பிரதேசத்தில் இருந்து தேர்வான முதல் மாணவி ஆஞ்சல் கங்வால். 

திடநம்பிக்கை உடைய ஆஞ்சல் விமானப் படையில் சேரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது பள்ளிப்பருவத்திலேயே விமானப்படையில் சேரவேண்டும் என்கிற தீர்மானத்தில் இருந்தார். 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது இந்திய விமானப் படை வீரர்கள் மேற்கொண்ட மீட்புப்பணிகளைக் கண்டார். ஆஞ்சல் ஹிந்துஸ்தான் டைம்ஸ்-க்கு தெரிவிக்கையில்,

”நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விமானப்படையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்ட விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நான் விமானப்படையில் சேர தீர்மானித்தேன். ஆனால் அந்த சமயத்தில் என்னுடைய குடும்பச் சூழல் அதற்கு உகந்ததாக இல்லை,” என்றார்.

நீமுச் பகுதியில் உள்ள மெட்ரோ உயர்நிலைப்பள்ளியில் படித்த ஆஞ்சல், பள்ளி கேப்டனாக இருந்தார். அனைவரும் மெச்சத்தக்க மாணவியாக இருந்தார். இவருக்கு உஜ்ஜயினின் விக்ரம் பல்கலைக்கழகத்தில் சேர உதவித்தொகை கிடைத்தது. தனது சாதனை குறித்து அவர் குறிப்பிடுகையில்,

”சாதிக்கவேண்டும் என்கிற வேட்கை என்னுள் இருப்பதை நான் நன்கறிவேன்,” என்றார்.

ஆஞ்சல் படிப்பு முடிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வெழுதி வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று பயிற்சி மேற்கொண்டார். ஆனால் காவல் துறையில் பணிபுரிந்தால் தனது கனவை நோக்கி பயணிக்க தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்தார்.

எனவே சரியான வாய்ப்புக்காக காத்திருந்தார். Air Force Common Admission Test தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதல்ல. நேர்காணலில் ஐந்து முறை தோல்வியடைந்தபோதும் ஆறாவது முயற்சியில் வெற்றி பெற்றார். விமானப் படை தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு இந்திய விமானப்படை தேர்வுகளை ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டவர் எழுதினர்.

ஆஞ்சலின் அப்பா சுரேஷ் கங்வால் மத்தியப்பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் டீ விற்பனை செய்கிறார். குடும்பத்தின் நிதி நிலை குழந்தைகளின் கல்வியை பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டதாக சுரேஷ் தெரிவித்தார்.

ஆஞ்சலின் கடின உழைப்பும் மன உறுதியும் அவரது கனவை அடைய உதவியது. அவரது வெற்றியை அனைவரும் கவனித்தனர். அனைத்து பகுதிகளில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. அவர் வெற்றி பெற்றதற்காக மத்தியப்பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹன் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தின் துண்டிகல் பகுதியில் உள்ள விமானப் படை அகாடமியில் ஜூன் மாதம் 30ம் தேதி முதல் ஓராண்டிற்கு பயிற்சி பெறுகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA