புதுநிறுவனங்களின் நிதி மற்றும் கணக்குவழக்குகளுக்கு உதவும் 'அரிஸ்டாடில்'

0

புதிய நிறுவனம் ஒன்று தங்கள் தொழில்சார்ந்த முக்கியமான அம்சங்களை தவிர மற்றவற்றில் பெரிதாக நேரம் செலவிட முடியாது. அதேப்போல அவர்களிடம் இருக்கும் குறைந்த பணத்தில் சிலவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். எனவே நிதி சார்ந்த மற்றும் அக்கவுண்ட்ஸ் தொடர்பானவற்றை வெளி ஆட்களிடம் கொடுத்துவிடுவார்கள். அது சார்ந்த வல்லுநர்களை தங்கள் நிறுவனத்திலேயே முழு நேரமாக அமர்த்திக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார பின்னணி இல்லாதது ஒரு காரணம். மற்றும் சின்ன சின்ன வேலைக்கெல்லாம் பெரும் பணம் செலவிடுவது நிறுவனத்தின் பொருளாதார நிலைக்கு சரிவராது.

எனவே நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக உருவானது தான் 'அரிஸ்டாடில்' (Aristotle) கன்சல்டன்சி 2010ம் ஆண்டு உருவானது. கணக்குகள், நிதி மற்றும் நிதி ஆலோசனை போன்றவற்றை இந்த நிறுவனங்கள் கையாள்கிறது. டெல்லி மற்றும் புறநகர் டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற இடங்களில் இந்நிறுவனம் இயங்குகிறது. கணக்கு வழக்குகள் அவுட்சோர்சிங், விர்சுவல் சீஎஃப்ஓ, பேரோல் சர்வீஸ், ஆலோசனை வழங்குதல் மற்றும் பெருநிறுவனங்களுக்கு தேவையான நிதி ஆலோசனைகள் வழங்குதல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். தொழில்முனைவோர், சிறுநிறுவனங்கள், பங்கு முதலீட்டாளர்கள் போன்றவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

இவர்களின் கதை

தீபக் தமிஜா கொல்கத்தாவில் உள்ள ஐஐஎம்மில் படித்தவர். வென்ச்சர் ஈஸ்ட் டெனெட் ஃபண்ட் II என்ற நிறுவனத்தில் முதலீட்டு நிர்வாகியாக இருந்தபோது பல புதுநிறுவங்களின் நிறுவனங்களோடு பேசி பழகியிருக்கிறார். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் நிறுவனங்களுக்கு கணக்கு வழக்கு பார்க்க நிதி நிர்வாகத்திற்கென சரியான ஆட்களை தேடிக்கொண்டிருந்ததை கவனித்தார். தீபக் ஹைதராபாத்தில் உள்ள ஐஎஸ்பியில் வென்ச்சர் கேபிடல் டெவலப்மண்ட் படிப்பை முடித்திருக்கிறார் என்பது சிறப்பசம்.

கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ளும் பல நிறுவனங்கள் புதுநிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சேவைகளை வழங்கும் விதத்தில் இல்லை. தீபக் இதை கவனித்தார். இந்த இடைவெளியை போக்க விரும்பினார். அப்படி உருவானது தான் அரிஸ்டாடில் கன்சல்டன்சி.

தீபக், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஒரு குழுவை நிர்வகித்த அனுபவம் உடையவர். டெய்ம்லர் க்ரிஸ்லர் நிறுவனத்திற்காக பணியாற்றியவர். "பல்வேறு புதுநிறுவனங்களின் நிறுவனர்களோடு பேசியதில் இருந்து எனக்கு ஒன்று புரிந்தது. அவர்கள் நிதி தொடர்பான அடிப்படைகளை கையாள்வதில் பல சிக்கலை சந்திக்கிறார்கள். அதே சமயம் அவர்களால் இதற்காக பெரும் பணத்தை செலவிட முடியாது. குறிப்பாக ஆரம்ப நாட்களில் செலவிடமுடியாது” என்கிறார்.

சஞ்சீவ் லம்பா என்பவர் அரிஸ்டாடில் கன்சல்டன்சியின் இணை நிறுவனராக இருக்கிறார். இவர் தான் நிதி மற்றும் கணக்குவழக்குகளை கையாளும் குழுவின் தலைவராக இருக்கிறார்.

இந்நிறுவனம் 3 லட்ச ரூபாயில் துவங்கப்பட்டது. இந்த பணம் டெல்லியில் நிறுவனம் அமைக்கவும் ஆட்களை வேலைக்கு எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் கையில் இருந்ததை வைத்தே சமாளிக்க பார்த்திருக்கிறார்கள். வெளியில் பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.

“நிறுவனங்கள் தங்களின் கணக்குவழக்குகளையோ நிதி தொடர்பான தகவல்களையோ அவ்வளவு எளிதாக யாரிடமும் கொடுத்துவிட மாட்டார்கள். நம்பகத்தன்மை என்பது இங்கே மிகமுக்கியம். வழக்கமான முறைகளில் கணக்குவழக்குகளை பார்க்கும்போது பல்வேறு சிக்கலை சந்திக்கிறார்கள். எனவே கணக்குகளை சுத்தம் பண்ணுவதோடு மட்டுமல்லாமல் உள்ளார்ந்த வேலைகளை துரிதப்படுத்துவதும் எங்கள் நோக்கமாக இருக்கிறது” என்றார் தீபக்.

21 நாட்களில் சரிசெய்வது

புது நிறுவனங்களுக்குத் தேவை அனுபவம் மிக்க ஆட்கள் மற்றும் சரியான வழிகாட்டுதல். ஆனால் இந்த சேவை சுலபமாகக் கிடைக்கவே கிடைக்காது, ஒருவேளை கிடைத்தாலும் அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும். எனவே பெரும்பாலான புதுநிறுவனர்கள் இதுபோன்ற சேவைகளுக்கு தங்களின் அதிக நேரத்தை வீணடிக்கிறார்கள்.

”அரிஸ்டாடில் எல்லாவற்றையும் ஒரே டேபிளில் வைத்து சரி செய்து கொடுக்கிறது. "21 நாட்களில் சரிசெய்வது” என்ற எங்கள் திட்டத்தில் வாடிக்கையாளரின் இடத்திற்கே எங்கள் குழு சென்று அவரது முழு தொழிலையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப சேவை வழங்குகிறோம்” என்றார் தீபக்.

கட்டணம்

அரிஸ்டாடில் பலவகையான பேக்கேஜுகளில் சேவை வழங்குகிறது. விர்சுவல் சீஎஃப்ஓ என்ற பெயரில் நிறுவனங்களின் நிதி மற்றும் கணக்குவழக்கு சார்ந்த எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள்.

முழுநேரமாக ஒரு சிஎஃப்ஓவை வேலைக்கு எடுப்பது என்பது சிறுநிறுவனங்களுக்கு கட்டுப்படி ஆகாது. அவர்கள் எதிர்பார்ப்பது முழுநேர ஆள் அல்ல. வேலை தரமாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தீபக் தெரிவிக்கிறார். இன்று அதுபோன்ற வேலைக்கு எந்த தேவையும் இல்லை. தரத்திற்கு தான் முன்னுரிமை என்கிறார். நிறுவனங்களின் தேவைகளை புரிந்துகொண்டு அவர்களின் வேகத்திற்கு ஏற்ப செயலாற்றக்கூடிய ஒரு கணக்கு வல்லுனரையே எதிர்பார்க்கிறார்கள்.

அரிஸ்டாடில் பகிர்ந்தளிக்கக்கூடிய மாடல் அடிப்படையில் செயல்படுகிறது. இதன்மூலம் ஒரு நிறுவனம் தன் மொத்த செலவில் 25-30 சதவீத செயல்பாட்டு செலவுகளை மிச்சம் பிடிக்க முடியும். மாதத்திற்கு 40 ஆயிரம் முதல் 15 லட்சம் வரை தொழிலின் அளவை பொறுத்து வசூலிக்கிறார்கள்.

“பெருநிறுவனங்கள் மட்டுமே திறமையான நிதி ஆலோசகர்களால் பலனடையாமல் எல்லோரும் பலன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் அரிஸ்டாடில். தற்போதைய சந்தையில் நிதி மற்றும் கணக்குவழக்கு சார்ந்த சேவைகள் பெருநிறுவனங்களுக்கானதாக மட்டும் இருக்கிறது. அல்லது வெறும் கணக்கு வழக்கு சார்ந்த ஒன்றாக இருக்கிறது. இவை இரண்டையும் பூர்த்தி செய்யும் விதமான சேவையே எங்களுடையது” என்கிறார் தீபக்.

வாடிக்கையாளர் கையகப்படுத்துதல்

ஆரம்பத்தில் ராயல்பேங்க் ஆஃப் ஸ்காட்லாண்ட் மற்றும் இந்தியா ஹாஸ்பிடாலிடி கார்பரேஷன் ஆகிய இரு நிறுவனத்திற்கு சேவை வழங்கினார்கள். தற்போது டெல்லி-என்சிஆர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றிருக்கிறார்கள். ஜபாங், ஃபேப்ஃபர்னிஸ், ஃபுட்பாண்டா, டொலக்ஸோ (இண்டியாமார்ட்), கோஜாவாஸ், ப்ரிண்ட்வென்யூ மற்றும் ஸ்ராக்ஸ் போன்றோர் இவர்களின் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் இரண்டு நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக பெற்றிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு அரிஸ்டாடில் நிறுவனத்தில் நூறு பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 20 சதவீதத்தினர் சீ.ஏ முடித்தவர்கள். பேரோல் மற்றும் செக்ரட்ரியல் பணிகளுக்காக தங்கள் நிறுவனத்திலேயே ஒரு குழு வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கே சென்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த குழு இயங்குகிறது.

”நாங்கள் வேலை சார்ந்து பணம் வசூலிக்காமல் பணியாளர் சார்ந்து வசூலிக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான கட்டணத்தில் அதை வழங்குகிறோம். "ஸ்டார்டப் பூஸ்டர்” என்ற சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இது நிதியுதவி பெறாத புதுநிறுவனங்களுக்கானது. இதன் நோக்கம் எங்கள் சேவை புதுநிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது என்பதால் அவர்கள் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த முடிகிறது” என்கிறார் தீபக்.

வளர்ச்சித் திட்டம்

கடந்த மூன்று காலாண்டுகளில் தங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கி இருப்பதாக தீபக் தெரிவிக்கிறார். கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் 4 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் இது 6 கோடியாக இருக்கும் என தெரிவிக்கிறார்.

இணையதள முகவரி: Aristotle Consultancy

ஆங்கிலத்தில் : Aparajita Choudhury | தமிழில் : Swara Vaithee