‘ICAI சிறந்த வெளிநாட்டு சாப்ட்டர்’ விருதினை வென்றுள்ள ICAI சான் ஃப்ரான்சிஸ்கோ!

0

இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI-SF) சான் ஃப்ரான்சிஸ்கோ சாப்ட்டர், 2017-ம் ஆண்டுக்கான ‘ICAI சிறந்த வெளிநாட்டு சாப்ட்டர்’ (மூன்றாம் பரிசு) ஆக ICAI-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புது டெல்லியின் விக்யான் பவனில் நடைப்பெற்ற ICAI-ன் 68-வது ஆண்டு விழாவில் சாப்டரின் தலைவரான விஷ் அருணாச்சலம் மற்றும் துணைத் தலைவர் கீதா ராமகிருஷ்ணன் இவ்விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சிஏ சுரேஷ் பிரபு, மத்திய ரயில்வே துறை மற்றும் நிலக்கரி துறையின் அமைச்சரான பியூஷ் கோயல், சட்டம் மற்றும் நீதித்துறை மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் பி.பி.சௌதரி ஆகியோர் இவ்விழாவிற்கு தலைமை ஏற்றனர். மேலும் மத்திய குழு உறுப்பினர்களும் உலகெங்கும் இருந்து 2,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

விஷ் அருணாச்சலம் மற்றும் கீதா விருதினை பெறுகின்றனர்
விஷ் அருணாச்சலம் மற்றும் கீதா விருதினை பெறுகின்றனர்

2,75,000-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ICAI உலகின் இரண்டாவது மிகப்பெரிய கணக்கியல் கழகமாகும். சான்ஃப்ரான்சிஸ்கோ பே ஏரியா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர்களை ஒன்றிணைக்க 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோ சாப்ட்டர் அமைக்கப்பட்டது. 

அரசியல், வணிக மற்றும் சமூக தலைவர்களாலும் சுமார் 200 உறுப்பினர்களாலும் உற்சாகமாக துவங்கப்பட்ட இந்த சாப்ட்டர் பட்டயக் கணக்காளர்களின் ஆர்வத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை சாத்தியப்படுத்த ஒருங்கிணைப்பு, தொழில்முறை வளர்ச்சி, வணிக மற்றும் அறிவுசார் தகவல்களை பரஸ்பரம் பலனளிக்கும் வகையில் பகிர்தல் போன்றவற்றிற்கு வாய்ப்பளிக்கிறது.

ICAI சான் ஃப்ரான்சிஸ்கோ துவங்கப்பட்டது முதல் பல்வேறு நிகழ்வுகளை நடத்தியுள்ளது.  AICPA உடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்திற்கான பரப்புரை, முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நிர்வாக பாடங்களை உருவாக்குதல் போன்றவை இந்த சாப்ட்டரின் இதர முக்கிய முயற்சிகளாகும். அத்துடன் பல்வேறு இந்திய அதிகாரிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழில்முறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் துறை சார்ந்த குழுக்களை இந்த சாப்ட்டர் அமைத்துள்ளது.

[24]7.ai க்ளோபல் சிஎஃப்ஓ மற்றும் ICAI-SF ஆரம்ப நாள் உறுப்பினரான மது ரங்கநாதன் குறிப்பிடுகையில், 

“இந்த சாப்ட்டரை நிறுவும் வரை சான் ஃப்ரான்சிஸ்கோ பே ஏரியாவில் எத்தனை பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர் என்பதையோ இதில் எத்தனை பேர் இந்தத் துறையில் தலைவர்களாகவும் உந்துதலளிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையோ நான் உணரவில்லை. சக உறுப்பினர்களுடன் மீண்டும் இணைவதும் முறையாக ஏற்பாடு செய்யப்படும் அறிவு சார் நிகழ்வுகள் மூலம் பலனடைவதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பட்டயக்கணக்காளர்கள் அடங்கிய இந்த வலுவான குழு ஒருங்கிணைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல விரும்புகிறேன்,” என்றார்.

சான் ஃப்ரான்சிஸ்கோ சாப்ட்டர் தலைவர் விஷ் அருணாச்சலம் குறிப்பிடுகையில்,

”இது எங்களது மிகப்பெரிய வெற்றி. குறுகிய காலத்தில் நாங்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்கான ஒரு அங்கீகாரம்தான் இந்த விருது என்பது தெளிவாகிறது. இந்த விருதினை எங்களது சாப்ட்டர் உறுப்பினர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்,” என்றார்.

சான் ஃப்ரான்சிஸ்கோ சாப்டரின் துணைத் தலைவர் கீதா ராமகிருஷ்ணன் கூறுகையில்,

”ICAI-SF-ல் நாங்கள் உயர்ந்த குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்கிறோம். ICAI எங்களுக்கு அளிக்கும் வலுவான ஆதரவினை இந்த விருது காட்டுகிறது. பட்டயக் கணக்காளர்களான நாங்கள் எங்களை இந்தியாவின் முன்னணி தொழில்முறை வல்லுநர்களாகவே கருதுகிறோம். ICAI-ஐ அமெரிக்காவில் உருவாக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்,” என்றார்.

ICAI சான் ஃப்ரான்சிஸ்கோ

இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) இந்தியாவில் கணக்கியல் மற்றம் நிதி அறிக்கைகள் துறையை கட்டுப்படுத்த 1949-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தால் நிறுவப்பட்டதாகும். இது இந்திய அரசாங்கத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. சான் ஃப்ரான்சிஸ்கோ சாப்ட்டர் இந்தியாவிற்கு வெளியில் அமைக்கப்பட்ட இதன் 29-வது பிரிவாகும். அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் பிரிவாகும். ஒருங்கிணைப்பையும் தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்பையும் வழங்குவதுடன் கலிஃபோர்னியா மற்றும் இந்தியா இடையே பரஸ்பர வணிக மற்றும் அறிவு சார் இணைப்பு ஏற்படவேண்டும் என்பதே இந்த சாப்ட்டரின் நோக்கமாகும்.