இந்திய-சீன போர் முடிந்த 56 ஆண்டுகளுக்கு பின் ரூ.38 கோடி இழப்பீடு பெற்ற அருணாச்சல பிரதேச கிராமம்! 

0

அருணாசலப்பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தினர் 1962-ம் ஆண்டு இந்திய-சீன போரின் போது தங்களது நிலங்களை இழந்தனர். இந்திய ராணுவம் ராணுவ முகாம், பாலங்கள், குடியிருப்புகள், சாலைகள் போன்றவற்றை கட்டுவதற்காக நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால் நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இது நடந்து 56 ஆண்டுகள் முடிந்துவிட்டது.

சமீபத்தில் மத்திய அரசாங்கம் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்காக 38 கோடி ரூபாயை இழப்பீடாக அறிவித்துள்ளது. போம்டிலாவில் நடைபெற்ற சிறப்பு விழா ஒன்றில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா காந்து கிராமத்தினருக்கு காசோலைகளை வழங்கினார்.

”கிராமத்தினருக்கு மொத்தம் 37.73 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அவை சமூக நிலங்களாகும். எனவே அவர்கள் பெற்றுக்கொண்ட தொகை கிராம மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்,” என ரிஜிஜூ பிடிஐ-க்கு தெரிவித்தார்.

மத்திய இணையமைச்சர் அதே பகுதியைச் சேர்ந்தவர். பாதுகாப்பு அமைச்சகம் இழப்பீட்டிற்கான அனுமதியளித்தில் இவரது பங்கும் உண்டு.

”நாட்டின் நலன் கருதியே ராணுவம் இந்த நிலத்தைக் கையகப்படுத்தியது. ஆனால் 1960-ம் ஆண்டு முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் கிராமத்தினருக்கு எந்த அரசாங்கமும் இழப்பீடு வழங்க முயற்சி எடுக்கவில்லை. இறுதியாக இதற்கான முயற்சிகள் எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மொத்தம் 37.73 கோடி ரூபாய்கான காசோலை ஒப்படைக்கப்பட்டது,” என்றார்.

இந்த இழப்பீட்டுத் தொகை 6.31 கோடி ரூபாய் முதல் 5.98 கோடி ரூபாய் வரை இருந்தது. 13.17 கோடி ரூபாய் மதிப்புடைய காசோலைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கிராமங்களில் உள்ள 152 குடும்பங்களுக்கு மத்திய அரசு 54 கோடி ரூபாய் அறிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தனியார் நிலங்களுக்காக 158 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாவங் மாவட்டத்தில் உள்ள போம்ஜா கிராமத்தைச் சேர்ந்த 31 குடும்பங்களுக்கு 40.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 29 குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் 1.09 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் ஒரு குடும்பத்திற்கு 6.73 கோடி ரூபாயும் மற்றொரு குடும்பத்திற்கு 2.45 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL