குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் சிந்தனைகள் சமூக மாற்றத்திற்கு வித்திடலாம் - கல்பனா தடவர்டியின் அனுபவப் பயணம்

0

வலுவான சிந்தனை கொண்ட அத்தைகள் மற்றும் நான்கு சகோதரிகள் உள்ள குடும்பத்தில் பிறந்த கல்பனாவுக்கு, பெண்களுடன் இணைந்து செயல்படுவது இயற்கையகாவே இருன்றது. "ஆண் பெண் சமநிலைபாடுள்ள செய்தொழிலில், பெண்களுடன் பெண்களுக்காகவே பணி புரிய நான் வழி நடத்தப்பட்டேன்" என்கிறார் கல்பனா. இவர் சமூகத்தன்மை உள்ளடக்கும் சேவையை வழங்கும் இன்டெர்வீவ் (Interweave) கன்சல்டிங் என்ற நிறுவனத்தின் பங்குதாரர்.

தன்னுடைய முதல் வேலைத் தேர்வுக்கான பேட்டியை நினைவு கூறும் அவர் "உங்கள் கனவு என்ன" என்று கேட்கப்பட்ட போது சிறிதும் தயக்கமின்றி - " வீட்டு வேலைக்கு அப்பாற்பட்டு பெண்கள் அவர்களுடைய திறன்களை வெளிக்கொண்டு வர ஏதாவது செய்ய ஆவல்" என்றாராம். இத்தனைக்கும் அவருடைய இந்த பதில் விண்ணப்பித்த வேலைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது குறிப்படத்தக்கது.


பெண்களுக்கு தலைமை பொறுப்பை வகுத்துக் கொடுத்தல், பாலியல் தொல்லைகளை தடுத்தல், பன்னாட்டு நிறுவனங்களில் பன்முகத்தன்மையை பற்றி பரவலாக்குதல் ஆகிய நோக்குடன் செயல்படுகிறார் கல்பனா. இன்டர்வீவ் நிறுவனத்திற்கு முன்பாக, மார்பிடி (Maarpidi) என்ற நிறுவனத்தின் நிறுவனராக, பல அமைப்புகளுக்கு தலைமை பொறுப்புக்கு தகுதி உடையவர்களை கண்டறிந்து உருவாக்கி கொடுத்துள்ளார்.

“சுய நம்பிக்கையால் தான் இத்தகைய சவாலான பணியை மேற்கொள்ள முடிகிறது என்று கூறும் இவர், நான்கு சகோதரிகளில் தான் ஒரு செல்லப்பிள்ளையாக வளர்ந்தது ஒன்றும் வியப்பில்லை” என்கிறார்."நாங்கள் யாவருமே எந்த வேறுபாடுகள் இல்லாமல் வளர்ந்தோம், யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றே வளர்க்கப்பட்டோம்" என்று பெருமிதத்துடன் சொல்கிறார் கல்பனா. இளம் பருவத்தில் படிப்பின் மீது ஆர்வம் கொள்ளாமல், விளையாட மட்டுமே விரும்பியதாகவும், பள்ளிகூடத்தை வெறுத்ததாகவும் கூறுகிறார்.

தளம் அமைத்துக் கொடுத்த வீட்டுச் சூழல்...

திறமையான பெண்களுக்கு மத்தியில் எப்பொழுதும் இருந்ததால், இவர்கள் அனைவரும் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபட்டால் மிக பெரிய வலு சேர்க்கும் என்ற சிந்தனை அவருக்கு உதித்தது. வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி, கல்பனா வலுவான பெண்களின் மத்தியிலேயே இருந்தார். ஒரு சமயம் அவருடைய தாயார், தான் எப்படி திருமணத்திற்கு பிறகு அவருடைய மதிப்புமிக்க வேலையை துறக்க நேரிட்டது என்று சொன்னதை நினைவு கூறும் கல்பனா "முந்தைய தலைமுறை சூழ்நிலைகள் காரணமாக விரும்பியதை செய்ய முடியாமல் போனது என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. இதுவே பெண்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தூண்டியது"

கல்பனாவின் பிற சேவைகள்

இதைத் தவிர கல்பனா, "துர்கா" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் குழுவில் இடம் பெற்றுள்ளார். இந் நிறுவனம் பொது வெளியில் பெண்களுக்கான பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கீழ்நிலையில் உள்ள பெண்களை சிறுதொழில் முனைவோர்களாக்க உதவி புரிகிறார்கள். செரி ப்ளேர் (Cherie Blair)அமைப்பின் மூலமாக வழிகாட்டுதலும் தருகிறார்.

சந்தித்த சவால்கள்..

பெண்களைப் பற்றிய சமூகத்தின் பார்வை தான் மிகப் பெரிய சவாலாக கல்பனா கருதுகிறார். பெண்கள் வீட்டை மட்டும் தான் நிர்வகிக்க வேண்டும் என்ற கூற்றே அவர்கள் உலக பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முன் வர முடியாத காரணம். இதை நான் வலுவாக எதிர்க்கிறேன். ஆண் பெண் சமநிலை பற்றி குழந்தைகளுக்கு எடுத்து சொல்லும் மிக பெரிய பங்கினை பெண்களால் ஆற்ற முடியும் என்று பெரும்பாலான குடும்பங்கள் கருதுவதில்லை.

பெண்கள் முன்னேற பாதை அமைத்து...

இன்டெர்வீவ் மூலமாக மட்டுமே ஆயிரத்து ஐநூறு பெண்களுக்கும் மற்றும் அரநூற்றுக்கும் மேற்பட்ட மேலாளர்களுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார்.

இந்த சுவாரஸ்யமான பணியில், நிறுவனங்கள் தங்களுடைய பெண் ஊழியர்களின் திறமையை தக்க வைத்து கொள்ளவும், அவர்களின் முன்னேற்றத்துக்கு வழி வகை செய்து, தக்க வாய்ப்புகளை ஏற்று கொள்ளும் பக்குவத்தையும், கல்பனா ஏற்படுத்தி கொடுக்கிறார்.

பணியிடத்தில் பெண்களை தக்க வைத்ததை பற்றி சமீபத்தில் தென் கலிபோர்னியா பல்கலைகழகத்திற்காக ஆய்வு நடத்தப்பட்டது. எங்கெல்லாம் இன்டெர்வீவ் தன்னுடைய பெண்களுக்கான "வளர்ச்சிப் பாதையை நோக்கி" என்ற திட்டத்தை செயல்படுதியதோ அங்கெல்லாம் அபார வளர்ச்சி இருந்ததாக கண்டறியப்பட்டது. நிறுவனங்களும் பெண்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளதாக கூறும் கல்பனா, சமநிலை வாய்ப்பையும் வழங்குவதாக கூறுகிறார்.

கல்பனாவின் மறு பக்கம்

தனிப்பட்ட முறையில், கீழ்நிலையில் உள்ள பெண்களை கண்டறிந்து, சிறு தொழில் செய்ய ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு, வட்டி இல்லாத கடன் மூலமாக ஊக்குவிக்கிறார். பொருளாதார வலிமை இவர்களில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கிறது. "இழிசொல்லை இனியும் ஏற்காதாவர்களாக தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்கின்றனர். பெண்கள் பொருளாதார ஏற்றத்தில் பங்கு கொள்ளவது மிகவும் அவசியம். இதனாலேயே ஐ.நா. சபை கூட பெண்கள் பணியிடத்தில் அதிகம் பங்கு பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறது"

கல்பனாவை ஊக்குவிக்கும் சக்தி

சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடிகிற பணியே அவரை ஒவ்வொரு நாளும் ஊக்குவிக்கிறது. "நாம் விதைக்கும் ஒவ்வொரு மாற்றமும், சமூகத்தை மாற்றுகிறது. இதை அடைய நாம் தனி நபர்களுடன் பணி புரிய வேண்டும். எல்லாவற்றையும் உட்கொண்டதுதான் சமூகம்" என்கிறார் கல்பனா. வேலை பளு அவரை சோர்வடைய செய்தாலும், அவருடைய பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருப்பதால் அதுவே உந்து சக்தியை தருவதாக எண்ணுகிறார். அலைபேசி வழியாக தனக்கு வரும் ஒவ்வொரு வெற்றி களிப்பே அவருடைய சாதனையாக கருதுகிறார். "இன்னும் நிறைய மக்களின் வாழ்கையை மாற்ற வேண்டும் என்ற உந்துதலை இது தருகிறது" என்று கூறுகிறார்.

குடும்பத்தின் ஆதரவு

கல்பனாவின் கணவரும், பிள்ளைகளும் அவருடைய இந்தப்பணிக்கு மிக பெரிய துணை. தான் தலைமை வகிக்கும் நிறுவனத்தில் இந்த சமநிலை திட்டங்களை கொண்டு வந்துள்ளார் கல்பனாவின் கணவர். கல்பனாவின் பதினாறு வயது மகனுக்கு பெண்கள் அரசு பள்ளியில் கணிதம் கற்று கொடுக்கும் ஆர்வம் இருக்கிறது, மேலும் "பாலியல் வன்முறை ஒழித்தல்" பற்றி ஒரு அறிக்கையும் சமர்பித்து இருக்கிறார். ஆண் பெண் சமநிலை பற்றி பள்ளிகளில் பரப்புரை செய்யும் திட்டத்தில் உள்ளார்.

அவருடைய இருபது வயது பெண், ஓஹையோவில் "ஒரு பில்லியன் எழுச்சி" இயக்கத்திற்காக நிதி திரட்டி உள்ளார். "நல்ல செயல்கள் வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் . 

"குடும்பங்கள் சமூக மாற்றத்திற்கு வித்திட முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டும். குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் போது நாம் பகிர்ந்து கொள்ளும் சிந்தனைகள் , சமூகத்தை வடிவமைக்க நிச்சயம் உதவும்."