கொரியர் நிறுவனத்தில் டெலிவரி பையனாக இருந்து, ஃப்ளிப்கார்டின் முதல் ஊழியராகி கோடீஸ்வரராக உயர்ந்த ஆம்பூர் ஐயப்பா!

14

சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஆம்பூர் ஐயப்பா என்ற டெலிவரி பாய், ஒரு கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால் இன்று அவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டின் ஆரம்பக்கட்டத்தில் இருந்த ஊழியராக கோடிகளில் வருமானம் ஈட்டுகிறார். சாதாரண பணியில் இருந்த ஐயப்பா எப்படி இந்த உயர்ந்த நிலையை அடைந்தார்?

தமிழ்நாட்டில் வேலூரை அடுத்துள்ள ஆம்பூரில் பிறந்தவர் ஐயப்பாா. தொடக்கத்தில் அஷோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிசெய்ய தொடங்கினார். டிப்ளொமா முடித்திருந்த அவர் ஆட்டோமேடிவ் தயாரிப்பு பிரிவில் ஹோசூரில் பணிபுரிந்தார். பின் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மாறினார். அதன் பின், ஃபர்ஸ்ட் ஃப்ளைட் கொரியர் நிறுவனத்தில் ஒரு டெலிவரி பாயாக இணைந்தார் ஐயப்பா. அங்கே நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் ஒரு கட்டத்தில் மெயில் கட்டமைப்பு பிரிவின் தலைவராக உயர்ந்தார். 

பன்சல் சகோதரர்களுடன் ஆம்பூர் ஐயப்பா
பன்சல் சகோதரர்களுடன் ஆம்பூர் ஐயப்பா

பெங்களூரில் தொடங்கிய ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஃபர்ஸ்ட் ஃப்ளைட் கொரியருடன் இணைந்து செயல்பட முடிவெடுத்து, இ-வணிக துறையில் பெரிய அளவில் வரத்தொடங்கினர். அப்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல், தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய ஒரு நல்ல கட்டமைப்பு மேலாளரை தேடிக் கொண்டிருந்தனர். ஐயப்பாவை சந்தித்த அவர்கள் அவரின் திறமையால் ஈர்க்கப்பட்டு உடனே தங்களுடன் இணைத்துக்கொண்டனர். அவரே ஃப்ளிப்கார்டின் முதல் ஊழியராகவும் ஆனார். ஒரு ஸ்டார்ட்-அப் ஆன ஃப்ளிப்கார்டில் மனிதவள மேம்பாடு பிரிவு என்றெல்லாம தனியாக இல்லாததால் எச்.ஆர் கடிதம் கூட ஐயப்பாவிற்கு பணியில் சேரும் போது அனுப்பப்படவில்லை. இருப்பினும் நிறுவனர்கள் மீதுள்ள நம்பிக்கையில் ஃப்ளிப்கார்டில் சேர்ந்தார். ஐயப்பா பற்றி சச்சின் பன்சல் ஃப்ளிபாகார்ட் வரலாறு பதிவில் குறிப்பிட்டபோது,

“நாங்கள் ஒரு நல்ல நபரை, ஆங்கிலம் பேசக்கூடிய கணினி பயன்படுத்தத் தெரிந்த ஒருவரை பணிக்காக தேடிக்கொண்டிருந்தோம். ஐயப்பாவை சந்தித்தோம். வெறும் 8000 ரூபாய் சம்பளத்துக்கு அவரை அப்போது பணியிலமர்த்தினோம்,” என்கிறார். 

தொடக்க காலத்தில், பல சவால்களையும், அதிக வேலை பலுவையும் சந்தித்தார் ஐயப்பா. 10-12 பெரிய பதிப்பாளர்களுடன் பெங்களூரில் ஒரு நாளைக்கு 100 ஷிப்மெண்ட் என்கின்ற அளவில் அதிக பணி இருந்தது. நாளடைவில் ஃப்ளிப்கார்ட் செயல்பாடுகளை நன்கு புரிந்து கொண்டு தன் திறமையை அதில் வளர்த்துக்கொண்டார் ஐயப்பா. முதலாளிகளிடம் சிறந்த ஊழியர் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார். ஃப்ளிப்கார்ட் வளர்ச்சி அடைந்த நிலையில் நிறுவனத்தில் பங்குகளை கொண்டிருந்தார் ஐயப்பா. பின்னர் அவர் அதை 2009-ல் விற்றுவிட்டு நல்ல தொகையை பெற்றார். 

பின்னி பல்சல் அவரை பற்றி கூறுகையில்,

“திட்டமிடலில் தொழில்நுட்பத்துக்கு இணையான மனிதர் அவர். ஒரு நாளைக்கு சுமார் 1000 ஆர்டர்களை பெறுவோம். வாடிக்கையாளர்களுக்கு எந்த புத்தகம் தேவை இருக்கிறது, எந்த புத்தகங்களை வாங்கவேண்டும் என்று துல்லியமாக அறிவார் ஐயப்பா. ஒரு வாடிக்கையாளர் அழைத்தால், அவர்களின் ஆர்டர் பற்றிய விவரங்களை கணினியில் பார்க்காமலே சரியான தகவலை அளிப்பார். தன்னிடம் இருக்கும் ஆர்டர் விவரங்களை ஜிமெயில் உதவியோடு தேடு இன்ஜின் கொண்டு ஆர்டர்களை சமாளிப்பார்.” 

இன்றைய தேதியில், ஐயப்பா ஃப்ளிப்கார்டின் வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை பிரிவின் இணை இயக்குனராவார். 6 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் அவர், இன்றும் தனது சுசூகி ஸ்கூட்டரில் பயணிக்கிறார். முன்பு வாழ்ந்த அதே வீட்டில் குடும்பத்துடன் பத்து ஆண்டுகளாக எளிமையாக வாழ்கிறார். 

தன் பயணத்தை பற்றி பதிவிட்ட ஐயப்பா,

“நான் முதன்முதலில் ஃப்ளிப்கார்டின் தற்காலிக அலுவலகத்துக்குள் 2008 ஏப்ரலில் வேலை தேடி சென்றிருந்தேன். ஒரு அன்றாட பணியை போல இருக்கும் என்றே அங்கே சென்றேன். உள்ளே இரண்டு இளைஞர்கள் சாதாரண உடைகளில் அமர்ந்திருந்தனர். சச்சின் மற்றும் பின்னி பன்சல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை வரவேற்றனர். அப்போது நான் அவர்கள் நிறுவனத்தின் முதல் ஊழியராகப் போகிறேன் என்றும் அது என் வாழ்வை மாற்றப் போகும் தருணம் என்று சிறிதும் நினைக்கவில்லை. 2017-ல் ஃப்ளிப்கார்ட் தனது 10-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் போது நானும் இருப்பேன் என்றும் யோசிக்கவில்லை. 

நேர்காணலில் பதட்டமாக இருந்தேன். எனக்கு கட்டமைப்பில் மட்டும் அனுபவம் இருந்தது. புத்தக விற்பனை பற்றி ஒன்றும் தெரியாது. மேலும் இ-காமர்ஸ் அப்போது ஒரு புதிய துறையாக இருந்தது. நான் இதற்கு தகுதியானவனா? என யோசித்தேன்.  

வாடிக்கையாளர்களே ராஜா

பல நிறுவனங்கள் இந்த வாக்கியத்தின் அடிப்படையிலே செயல்படுகிறது. ஆம் ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் சேவை மற்றும் திருப்தியை முதன்மையாக கொண்டே இயங்குகிறது. இப்போது பிரபலமாக இருக்கும் பொருட்களை திரும்ப அளித்தல் அல்லது மாற்றிக் கொள்வதற்கான பாலிசியை நானும் பன்சல் சகோதரர்களும் ஆரம்பகாலம் முதலே செய்து வருகிறோம். வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு இயங்குவதே என்றும் ஃப்ளிப்கார்டின் முக்கிய இலக்கு.   

மரியாதை கொடுத்து மரியாதை பெறு

ஆரம்பநாட்களில் சச்சின், பின்னி மற்றும் நான் மூவரும் பலமுறை விற்பனை சங்கிலி பற்றி பல விவாதங்களை செய்திருக்கிறோம். என் ஐடியா அவர்களில் இருந்து எப்போதும் வேறுபட்டிருக்கும். சிலமுறை அவர்களின் கருத்துகள் மேலோங்கியும், சிலமுறை என் முடிவுகள் ஏற்கப்பட்டும் இருக்கும். என்னால் அவர்களுடன் சுலபமாக விவாதம் செய்யமுடியும். இன்றளவும் இந்த மரியாதை, மதிப்பு, கருத்துரிமை தொடர்கிறது. இது நாம் வாழும் சமூகம், குடும்பம் மற்றும் அன்றாடம் பின்பற்றப்படவேண்டும். எல்லாரும் ஒரேமாதிரி சிந்திப்பதில்லையே.  

சிந்திப்பதைவிட செயலில் இறங்கு

ஒரு சிறந்த ஐடியாவை கொள்வதுமட்டும் வெற்றியல்ல என்பதை நான் என் அனுபவத்தில் கற்றுள்ளேன். ஒரு ஐடியாவை செயல்படுத்துவதே மிகமுக்கியம். இந்தியா போன்ற பல போட்டிகளை சந்தையில் கொண்டுள்ள நாட்டில் ஃப்ளிப்கார்ட் இயங்குகிறது. அதனால் எல்லாவற்றையும் சரியாக செய்ய வாய்ப்புகள் குறைவு. சிலமுறை தவறுகள் நடக்கத்தான் செய்யும். பலசமயம் சில பிரிவுகளில் வேகமாக காலெடுத்து வைத்துவிட்டு பின் அதை திரும்பப்பெற்றுள்ளோம். இப்படித்தான் ஒரு நிறுவனம் உலக அளவில் கால்பதிக்கவும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வரலாற்றில் இடம்பிடிக்கவும் முடியும். 

”ஆம்பூர் ஐயப்பா, வாடிக்கையாளர்களை குறிவைத்தே அனைத்தையும் செய்கிறார். வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அனுபவத்தை அளிப்பதே அவரை ஊக்குவிக்கிறது,” என்று அவரின் பெருமையை பகிர்ந்தார் பின்னி பன்சல். 

கட்டுரை: Think Change India