ட்ரைவிங் வித் செல்வி: தடைக் கற்களைப் படிக்கட்டுகள் ஆக்கிய தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்ஸி டிரைவர் செல்வி!

தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்ஸி ஓடட்டுனர் என்ற பெருமையுடன் இந்தாண்டின் பெண் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த 32 வயது செல்வி.

2

கர்நாடகாவில் மருந்துக்கும் கல்வியறிவு இல்லாத, குழந்தைத் திருமணம் சர்வ சாதாரணமாக நடைபெறும் குக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவர் தான், இன்று வெற்றியாளராக வலம் வரும் செல்வி. தன் குழந்தைப் பருவத்தில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தவர், வாழ்க்கையில் போராடி இன்று சாதனைப் பெண்ணாக மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது செல்விக்கு, அதன்பிறகு வாழ்க்கை அவரை வேறு பாதைக்கு அழைத்துச் சென்றது. ஆனால், அந்தக் கொடுமையான வாழ்க்கையில் இருந்து தப்பி வந்தவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி தான் தங்கியிருந்த மைசூர் ஒடநாடி காப்பக டைரக்டர் ஸ்டாலின் அறிவுரைப்படி வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் தனது ஹாஸ்டலில் இருந்த டாக்ஸியை அவர் ஓட்ட ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே இனி இதுவே தன் பாதை என அவர் கண்டு கொண்டார்.

பட உதவி: Slyonthewall
பட உதவி: Slyonthewall

தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்ஸி டிரைவர்:

“பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். மன தைரியம் மட்டும் இருந்தால் போதும், எந்தத் துறையாக இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும். தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்...”

என தன் ஒவ்வொரு வார்த்தையையும் நம்பிக்கையில் நனைத்தே பேசுகிறார் செல்வி.  தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்ஸி டிரைவர் என்ற பெருமையை பெறுவோம் என்பதை அறியாமல் தான், கடந்த 2004-ம் ஆண்டு இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார் செல்வி. ஆனால், அவரது வாகனத்தில் வந்த பயணி ஒருவராலேயே அவரது புகழ் உலகறிய பரவியது.

டிரைவிங் வித் செல்வி:

ஆரம்பத்தில் தனது ஹாஸ்டலில் தங்கி இருந்தவர்களுக்கு மட்டும் டாக்ஸி டிரைவராக இருந்துள்ளார் செல்வி. பின், மற்ற பொதுமக்களுக்கு ஓட்டுனராக பணியாற்றத் தொடங்கினார். அப்படி அவரது டாக்சியில் முதல் வெளிநாட்டு பயணியாக வந்தவர் தான் கனடாவைச் சேர்ந்த எலீசா பலோச்சி .

“என் முதல் கஸ்டமர் எலீசா பலோச்சி மேடம். இந்தியாவைச் சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருந்த அவரை காலம் என் டாக்சியில் ஏற வைத்தது. நட்பாக பேசியவர், என் கடந்த கால துயர வாழ்க்கையைக் கேட்டு கலங்கிப் போனார். பின் தன் சுற்றுலா முடிந்து கனடா சென்றவர், மீண்டும் அடுத்தாண்டு இந்தியா வந்தபோது ஞாபகமாக என்னை வந்து சந்தித்தார். அப்போது என் கதையை டாக்குமெண்டிரியாக எடுக்க விரும்புவதாகக் கூறினார். அப்படி 12 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உருவானது தான் ‘டிரைவிங் வித் செல்வி’ டாக்குமெண்டரி,” என்கிறார் செல்வி.

கனடா குறும்பட இயக்குனர் எலீசா பலோச்சி உடன் செல்வி
கனடா குறும்பட இயக்குனர் எலீசா பலோச்சி உடன் செல்வி

செல்வியின் ‘டிரைவிங் வித் செல்வி’ டாக்குமெண்டரி உலகளவில் மிகவும் பிரபலமானது. பல்வேறு திரை விழாக்களில் திரையிடப் பட்டுள்ள இந்த குறும்படம் பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளது. இந்த டாக்குமெண்டரியில் சாதாரணப் பெண்ணாக இருந்த செல்வி, தான் சந்தித்த சோதனைகளில் இருந்து மீண்டு எப்படி சாதனைப் பெண்ணாக உயர்ந்தார் என்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

“என்னுடைய பிலிம் நெதர்லாந்து, அமெரிக்கா, கனடா எனப் பல்வேறு நாடுகளில் சிறப்புக் காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புக் காட்சிகளில் நானும் கலந்து கொண்டு அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடியுள்ளேன். 

”என் படத்தைப் பார்த்து பலர் தங்களுக்கு தன்னம்பிக்கை பிறந்துள்ளதாக கூறும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. என்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க வேண்டும் என விரும்புகிறேன்,” எனச் செல்வி கூறுகிறார்.

2004-ம் ஆண்டு டாக்ஸி ஓட்டத் தொடங்கிய செல்வி, 2014-ம் ஆண்டு கனரக வாகன லைசென்ஸ் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் ஹாஸ்டல் டாக்ஸியை ஓட்டியவர், தன் கடின உழைப்பால் சீக்கிரமே சொந்தமாக வண்டி வாங்கியுள்ளார். பின் இரண்டு பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் அளவுக்கு முன்னேறிய, பள்ளி வாகனங்களை இயக்கத் தொடங்கினார்.

கணவர் தந்த ஊக்கம்:

அப்போது தான் தனது காதல் கணவரை 2008-ம் ஆண்டு அவர் சந்தித்துள்ளார். ஓராண்டு கால காதலுக்குப் பின் 2009-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2012-ல் தமிழகம் வந்து சேர்ந்த இந்தத் தம்பதிக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

“என் கணவர் தந்த சப்போர்ட்டினால் தான் கனரக வாகனங்களை இயக்கத் தொடங்கினேன். நிச்சயம் உன்னால் முடியும் என என்னை ஊக்கப்படுத்தி என் வெற்றியைக் கண்டு மகிழ்பவர் அவர். எந்த வாகனத்தைப் பார்த்தாலும் நீ இதை ஓட்டிப் பழகு என எனக்கு நம்பிக்கை தருபவர் அவர் தான். அந்த நம்பிக்கையில் தான் லாரி உள்ளிட்ட பெரிய வாகனங்களை இயக்கத் தொடங்கினேன்,” என்கிறார் செல்வி.

பட உதவி: http://money.cnn.com
பட உதவி: http://money.cnn.com
பெண்களை வளர விடாமல் ஆண்கள் தடுக்கிறார்கள் என்ற கருத்து தவறு என்று கூறும் செல்வி, தன் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கு பெரும்பாலும் ஆண்களே பக்கபலமாக, வழிகாட்டியாக உதவியதாக நன்றி கூறுகிறார்.

“என்னுடைய பிலிமைப் பார்த்த மும்பையைச் சேர்ந்த ஆல்பர்ட் என்ற நண்பர், 2013-ம் ஆண்டு தன்னிடமிருந்த லாரி ஒன்றை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அதில் சரக்குகளை ஏற்றி சில ஆண்டுகள் டிரைவராக இருந்தேன். பின் அதனை விற்றுவிட்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ வாங்கினோம். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குடும்பங்கள் தான் என் கஸ்டமர்கள். சவாரிக்காகச் செல்லும் போது மற்ற ஆட்டோ டிரைவர்கள் உதவுவார்கள். 

போட்டிமனப்பான்மை இல்லாமல் என்னைப் பாராட்டி எனக்கு, ‘இந்த சாலையில் செல்லாதே, மேடும் பள்ளமுமாக இருக்கும், இந்தப் பாதை அதிக தூரம், இப்படிப் போனால் பக்கம்’ என நிறைய அறிவுரை கூறுவார்கள். ஒருநாளும் என்னைப் பெண் என்று பிரித்துப் பார்த்தோ, தொழில் போட்டியாகவோ அவர்கள் நினைத்ததே இல்லை. அவர்களின் ஆதரவு தான் என்னை இந்தளவுக்கு இயக்கி வருகிறது,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் செல்வி.

பஸ் டூர்:

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தன்னைப் போலவே மற்ற பெண்களும் சமூகத்தில் முன்மாதிரியாக வரவேண்டும் என்பது தான் செல்வியின் ஆசையாம். எனவே, தன் டாக்குமெண்டரியை ஒவ்வொரு கிராமமாகக் கொண்டுச் சென்று திரையிட்டு பெண்களுக்கு குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் சுயமாக பெண்கள் தொழில் புரியவும் ஊக்குவிக்கிறார்.

“என்னுடைய பிலிமை ‘பஸ் டூர்’ என்ற பெயரில் இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் திரையிட்டுள்ளோம். தலைநகர் டெல்லியில் ஆரம்பித்த இந்தப் பயணம், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்களில் நடைபெற்றது. கல்வியறிவு இல்லாத சிறிய கிராமங்களில் தான் குழந்தைத் திருமணம் என்ற பெயரில் சிறுமிகளின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது. எனவே, நேரடியாக அங்கு சென்று குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்து விளக்கிக் கூறுகிறோம். 

”எனது வாழ்க்கை குறித்த டிரைவிங் வித் செல்வி படத்தை பார்க்கும் அப்பகுதி மக்கள் குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து நேரடியாக தெரிந்து கொள்கின்றனர். அவர்களின் நடமாடும் உதாரணமாக நான் உள்ளேன். எனவே, பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு தர வேண்டிய நம்பிக்கை, சுதந்திரம் குறித்து நான் நேரடியாகச் சென்று பேசி வருகிறேன்,” என்கிறார் செல்வி.

குறும்பட திரையிடலின் போது செல்வி
குறும்பட திரையிடலின் போது செல்வி

செல்வியின் இந்த டாக்குமெண்டரியைப் பார்த்த பெண்கள் பலர் கொடுமைக்கார கணவர்களிடமிருந்து தப்பித்து தன்னம்பிக்கையுடன் சொந்தக் காலில் நிற்பதற்குரிய நம்பிக்கையைப் பெற்றுள்ளார்களாம். இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வாழ் பெண்களும் தன்னுடைய கதையைப் பார்த்து தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளதாக செல்வி கூறுகிறார்.

“என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்து, வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்த என்னாலேயே இந்தளவிற்கு சமூகத்தில் அங்கீகாரத்துடன் வாழ முடிகிறதென்றால், நிச்சயம் மற்றவர்களாலும் இது சாத்தியமாகும். பெண்களுக்கு தேவை சரியான வழிகாட்டுதலும், சுதந்திரமும் தான். அது கிடைத்தால் நிச்சயம் எல்லாப் பெண்களும் தடைகளைத் தாண்டி சாதனையாளர்களாக மிளிரலாம்.” 

பெண்கள் தங்கள் சக்தியை சரியாக பயன்படுத்தினால், இந்தியா அமெரிக்காவைக்கூட வளர்ச்சியில் மிஞ்சி விடும், என நம்பிக்கையுடன் பேசுகிறார் செல்வி.

எதிர்காலத் திட்டம்:

முதல் பெண் டாக்ஸி டிரைவர் என்ற அங்கீகாரத்துடன் பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார் செல்வி. இந்தாண்டிற்கான மத்திய அரசின் பெண் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள அவருக்கு, விரைவில் ஓட்டுநர் பயிற்சி மையம் ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் எதிர்கால லட்சியமாம்.

“எந்த நேரம் என்றாலும் செல்வி இருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு எனது ஆட்டோவில் பெண்கள் பயணம் செய்கின்றனர். எனக்கென ரெகுலர் கஸ்டமர்கள் பலர் உள்ளனர். எங்களது குடியிருப்பு பகுதி பெண்களுக்கும் நான் தான் டிரைவர். என்னை நம்பி தைரியமாக அவர்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், என்னைப் போன்றே பல பெண் டிரைவர்கள் உருவாக வேண்டும். ஆண்களுக்கு நிகராக தைரியமாக பெண்கள் சாலையில் வண்டி ஓட்ட வேண்டும். எனவே, பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அதுதான் என் எதிர்காலத் திட்டம். அதற்கான முயற்சிகளில் தான் தற்போது ஈடுபட்டு வருகிறேன்,” என்கிறார் செல்வி.

'Driving with Selvi' குறும்பட டீசர்
'Driving with Selvi' குறும்பட டீசர்

கட்டுரையாளர்கள்: இந்துஜா ரகுநாதன் மற்றும் ஜெயசித்ரா