'டவுன் முதல் டாக் ஆஃப் தி டவுன் வரை': பிபு மொஹப்பாத்ரா உலக பிரபலங்களுக்கு ஆடை வடிமைப்பாளர் ஆன கதை!

0

அமெரிக்க அதிபர் ஒபாமின் மனைவி மிச்செல் ஓபாமா முதல் ஹாலிவுட் திரை நட்சத்திரங்கள் க்வெய்னெத் பால்ட்ரோ, ஹில்லரி ஸ்வான்க் என பல பெண் பிரபலங்களின் அழகான உடைகளுக்குப் பின் ஓர் இந்தியர் உள்ளார் என்பது பலருக்கு ஆச்சர்யமான தகவலாக இருக்கும். ஆம் ஒடிசாவில் உள்ள ரூர்கேலா எனும் சிறு நகரைச் சேர்ந்த பிபு மொஹப்பாத்ரா என்பவரே, இந்த பெண்மணிகளின் அழகையும், கம்பீரத்தையும் அவர்களது உடை அலங்காரம் மூலம் உலகிற்கு பிரதிபலிக்கச் செய்தவர். இருப்பினும் பிபு, தன்னடக்கத்துடன் உள்ள ஒரு மனிதராகவே வலம் வருகிறார். 

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திகளின்படி, பிபு எல்லாரையும் போல ஒரு சிறு நகரத்து பையனாக, மரங்கள் ஏறுவது, கில்லி விளையாடுவது என்று சேட்டைகள் நிறைந்த குழந்தைப்பருவத்தை கடந்து வந்தவர். சைக்கிள் ஓட்ட முயற்சி செய்து பலமுறை முட்டியில் காயமும், அதற்காக வீட்டில் அடியும் வாங்கிய சுட்டிப்பையன். இன்ஞ்சினியரான அவரது அப்பா பைக், கார்களை பாகங்களாக பிரித்து ஆராய்வதை பார்த்து வளர்ந்தவர். 

"அப்போதெல்லாம் வீடியோ கேம்ஸ் கிடையாது, ஏன் டிவி கூட இல்லை. 1988 இல் தான் முதல் டிவி வந்தது. பேஷன் பற்றி ஒன்றுமே தெரியாத காலம் அது. அதைப் பற்றிய செய்திகள் கூட பத்திரிகைகளில்  அப்போது வந்ததில்லை. சில காலம் கழித்து, ஞாயிறு பத்திரிகைகளில் ஒரு சில சமயம் பிரபல டிசைனர்கள் ரோஹித் பால், சுனீத் வர்மா, தருண் தஹிலானி போன்றோர் பற்றி செய்திகள் வரத்தொடங்கின. இது மட்டுமே பேஷனை பற்றி நான் அறிந்தது," என்கிறார் பிபு. 

பேஷன் பற்றிய தெளிவு பின்னர் வந்தாலும் பிபுவுக்கு சிறு வயது முதல் அதில் விருப்பம் இருந்துள்ளது. அவரது அம்மா தைத்த துணிமணிகளை ஆர்வத்தோடு பார்த்து அதைப் பற்றி தெரிந்துகொள்வாராம். அவர் 12 வயதாக இருந்தபோது முதன்முதலில் ஊசி எடுத்து நூலை போட்டு தைக்க முயற்சித்தார். பழைய புடவைகள், டேபிள் மேட் துணி, மற்றும் தன்னுடைய பாக்கெட் மணி சேமிப்பிலிருந்து மலிவான துணிகளை வாங்கி அதை விதவிதமாக அழகான உடையாக தைத்து தன் தங்கைக்கு பரிசளிப்பராம் பிபு. 

பிபு ஒடியா வழிக்கல்வி மூலம் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். பின் ரூர்கேலாவில் உள்ள முனிசிபல் கல்லூரியில் ஒரு வருட மேலாண்மை படிப்பை முடித்து மேற்படிப்பிற்கு அமெரிக்கா செல்ல விண்ணப்பித்தார். இருப்பினும் அமெரிக்கா அவரது கனவாக இருக்கவில்லை ஆனால் பேஷன் உலகில் அடியெடுத்து வைக்க அதுவே உரிய இடம் என்பதால் அந்த முயற்சியை எடுத்தார் பிபு. 

"90-களில் இந்தியாவில் பேஷன் கல்லூரிகள் என்றால் அது 'என்ஐஎஃப்டி', டெல்லி மட்டும் தான். அதில் எனக்கு இடம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அதனால் நான் அங்கு விண்ணப்பிக்கக் கூட இல்லை," என்றார் பிபு. 

பிபுவின் சகோதரர் அமெரிக்காவில் க்ராபிக் டிசைனிங் படித்துக் கொண்டிருந்தார். அவரது வழிக்காட்டுதலின் படி உட்டா ஸ்டேட் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டத்திற்கு பகுதி உதவித்தொகையுடன் அனுமதி கிடைத்தது. "அமெரிக்கா செல்ல எனக்குக் கிடைத்த முதல் டிக்கெட் அது. 1996 இல், கையில் நிறைய இந்திய சமையல் பொருட்களுடன், மனதில் பெரிய கனவுகளுடன் யுஎஸ் சென்றேன். 

ஒரு நாள் என் பேராசிரியர் என் ஓவிய புத்தகத்தைப் பார்த்துவிட்டு, "நீ நியூயார்க் போகவேண்டும்," என்றார். அங்குள்ள கலைத்துறையில் உள்ள தன் நண்பரிடம் பேசி என்னை அந்த வகுப்புகளில் (கட்டணம் ஏதுமின்றி) உட்கார அனுமதி பெற்றுத்தந்தார். ஏனென்றால் என்னிடம் அதற்குத் தேவையான நிதி இல்லை." முதுகலை பட்டம் முடிப்பதற்கு முன் ஓவியம், கலையில் சிறந்து விளங்கினார். பொருளாதாரம் தனக்கு சரியான துறை இல்லை எனவும் அறிந்து கொண்டார். பேஷன் டிசைனிங் அவரது இலக்கு என தெரிந்து கொண்டார். 

நியூயார்க் இல் உள்ள 'பேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி'யில் சேர்ந்தார். 
"அந்த நகரம் மிகவும் காஸ்ட்லியான இடம். படிக்கும் போதே வேலை செய்யவேண்டிய நிலை இருந்தது. இல்லையெனில் ரோட்டில் தான் தங்க முடியும். ஆனால் வேலைக்கு சேர அனுபவம் தேவைப்பட்டது, அதற்கு பயிற்சி பணியில் சேர வேண்டும்," என்றார் பிபு. 

பயோடேட்டாவின் 20 ஜெராக்ஸ் காப்பிகளை எடுத்துக் கொண்டு பல இடங்களில் தேடி அலைந்தேன். முக்கியமாக பேஷனின் புகலிடம் ஆன ஏழாம் அவென்யூவில் சுற்றி வந்தேன். DKNY, டாமி ஹில்ஃபிகர், கால்வில் க்ளீன் போன்ற உலக ப்ராண்ட் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் என் ரெஸ்யூமை கொடுத்தேன். 

இரண்டு இடத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில் ஒன்று ஹால்ஸ்டன் என்ற நிறுவனம்- அமெரிக்காவின் பிரபல டிசைனர் ராய் ஹால்ஸ்டன் ஃப்ரோவிக் என்பவரது நிறுவனம் அது. ஜாக்கி கென்னடிக்கு உடை வடிவமைத்தவர். அவர் டிசைன் செய்த கோட் சூட்டை தான் கென்னடி சிறப்பு விழாக்களில் அணிந்தார். ஹால்ஸ்டன் உடன் சேர்ந்து பிபு ஓயாமல் உழைத்தார். 

"பலவகை துணி மாதிரிகளை தோளில் சுமந்து இங்கும் அங்கும் ஓடுவேன். டெய்லரிங் பேக்டரி, எம்ப்ராய்டரி செய்ய, பிட்டிங் பார்க்க என்று அலைவேன். ஒரு புறம், வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகளையும் கவனிக்க வேண்டும். ஆனால், சாக்லெட் கடையில் உள்ள ஒரு குழந்தையைப் போல நான் உணர்வேன், என் கனவை வாழ்ந்து கொண்டிருந்தேன்," என்றார் பிபு.  

என் குடும்பத்தை, வீட்டை பார்க்காமல் ஏங்கினேன். அவ்வப்போது பழைய நினைவுகள் வந்து போகும்... ஆனால் உலகில் பார்க்கவேண்டிய விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன... அதனால் இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை," என்கிறார் பிபு. 

கட்டுரை: Think Change India