சவரன் தங்கப் பத்திரத் திட்டத்திற்கான விதிமுறைகளைத் திருத்த மத்திய அமைச்சரவை முடிவு!

0

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, சவரன் தங்கப் பத்திரத் திட்டம் தனது நோக்கங்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கான விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியது.

இத்திட்டத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன:

1. இத்திட்டம் மேலும் கவர்ச்சிகரமானதாக இருப்பதற்காகவும், அதன் இலக்கிற்கு இணங்க நிதியாதாரங்களை திரட்டவும், தங்கத்தை இறக்குமதி செய்வதன் விளைவாக உருவாகும் பொருளாதார சிரமங்களைக் குறைக்கவும், நடப்புக் கணக்கில் ஏற்படும் பற்றாக்குறையைக் குறைக்கவும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2. பல்வேறு வகையான முதலீட்டாளர்களுக்கு முதலீட்டிற்கான மாற்று வழிகளை வழங்கக் கூடிய, அபாயத்திற்கான பாதுகாப்பு, திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பல்வேறுபட்ட வட்டி விகிதங்களுடன் பல்வேறு வகையான சவரன் தங்கப் பத்திரத் திட்டங்களை வடிவமைத்து அறிமுகப்படுத்த நிதியமைச்சகத்திற்கு நெகிழ்வுத் தன்மை வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட பகுதிக்கான அம்சங்களை இறுதிப்படுத்துவதற்கும் அதை அறிவிப்பதற்கும் இடையே ஏற்படும் கால அளவை குறைக்க, நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் இத்திட்டத்தின் அம்சங்களில் திருத்தம் செய்வது/ கூடுதல் அம்சங்களை சேர்ப்பது போன்றவற்றுக்கான அதிகாரம் இத்திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கும் நிதி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முதலீடு செய்வதற்கான புதிய பொருட்களுடன் போட்டித் தன்மையை சமாளிப்பதற்கான அம்சங்களை திறமையுடன் கைக்கொள்ளும் வகையிலும், மிகவும் செயல் திறன் மிக்க, சில நேரங்களில் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய சந்தை, தேசிய அளவிலான பொருளாதாரம் மற்றும் தங்கத்தின் விலை போன்ற இதர நிலைமைகல் ஆகியவற்றை சமாளிப்பதாக இந்த இணக்கத்தன்மை அமைந்திருக்கும்.

இத்திட்டத்தில் கீழ்க்கண்ட குறிப்பிட்ட மாற்றங்களை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது:

அ) ஒவ்வொரு நிதியாண்டுக்கும் முதலீடு செய்வதற்கான வரம்பு தனிநபர்களுக்கு 4 கிலோவாகவும், பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்களுக்கு 4 கிலோவாகவும், அறக்கட்டளைகளுக்கும் அரசினால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அது போன்ற அமைப்புகளுக்கும் 20 கிலோவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆ) இந்த வரம்பு நிதியாண்டின் அடிப்படையில் கணக்கிடப்படும். இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகத்தின்போது வாங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழான சவரன் தங்கப் பத்திரங்களும் இதில் அடங்கும். 

இ) வங்கிகளுக்கும் நிதியுதவி வழங்கும் நிறுவனங்களுக்கும் ஈடாக வைக்கப்பட்டுள்ள தங்க பத்திரங்கள் முதலீட்டிற்கான இந்த வரம்பில் அடங்காது.’

ஈ) சவரன் தங்கப் பத்திரங்கள் ‘விரும்பும்போது கிடைக்கும்’ வகையில் விற்பனை செய்யப்படும். தேசிய பங்குச் சந்தை, பாரத பங்குச் சந்தை, வங்கிகள், அஞ்சல் துறை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து ‘விரும்பும்போது கிடைக்கும்’ பத்திர முறையை மேற்கொள்ளும் வகையில் இதன் அம்சங்கள் நிதி அமைச்சகத்தால் இறுதி செய்யப்படும்.

உ) சவரன் தங்கப் பத்திரங்களை எளிதாக விற்பனை செய்வது, வர்த்தகம் செய்வது ஆகியவற்றை மேம்படுத்த அதற்குப் பொருத்தமான சந்தைப்படுத்தும் முன்முயற்சிகள் திட்டமிடப்படும். இவ்வாறு சந்தைப்படுத்தும் அமைப்பு என்பது வர்த்தக வங்கிகளாகவோ அல்லது எம் எம் டி சி போன்ற அல்லது வேறெந்த பொதுத்துறை நிறுவனமாகவோ அல்லது இந்திய அரசால் தீர்மானிக்கப்படும் வேறெந்த அமைப்பாகவோ இருக்கக் கூடும்.

ஊ) அவசியம் என்று கருதினால், அரசு இதற்கான முகவர்களுக்கு அதிகமான கமிஷனை அனுமதிக்கலாம். 

பின்னணி:

அமைச்சரவையின் முறையான ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் தங்கப் பத்திரங்களுக்கான திட்டம் இந்திய அரசால் 2015 நவம்பர் 5 அன்று அறிவிக்கப்பட்டது. உலோகத் தங்கத்தை வாங்குவதற்கு மாற்றாக நிதிரீதியான சொத்தை உருவாக்குவது என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். முதலீடாக ஒவ்வோர் ஆண்டும் வாங்கப்படுவதாக மதிப்பிடப்படும் 300 டன் தங்கக் கட்டிகள், நாணயங்கள் ஆகியவற்றில் ஒரு பகுதியை ‘டிமாட்’ தங்கப் பத்திரங்களாக மாற்றுவது என்பதே இதன் இலக்காகும். 

இத்திட்டத்தின் கீழ் 2015-16ஆம் ஆண்டில் ரூ. 15,000 கோடியும், 2016-17ஆம் ஆண்டில் ரூ. 10,000 கோடியும் திரட்டுவது என்பதே இலக்காகும். இதுவரையில் அரசின் கணக்கில் ரூ. 4,769 கோடி இத்திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு முதலீட்டாளர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவை விடக் குறைவாகவே ஆதரவு இருந்த நிலையிலும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் அதன் தாக்கத்தையும் கணக்கில் கொண்டும், அதன் விளைவாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தின் செயல்பாட்டின் மீதான தாக்கத்தையும் கணக்கில் கொண்டும், இத்திட்டத்தை வெற்றிகரமாக ஆக்க அதில் மாற்றங்களைச் செய்வது அவசியம் எனக் கருதப்பட்டது.