இந்தியாவின் மிகப்பெரிய தங்கக்கடத்தல் கும்பலை பிடித்தது புலனாய்வு துறை! 

0

ஒரு மிகப்பெரிய தங்கக் கடத்தல் கும்பல் ஒன்றை, வருவாய்துறை இண்டெலிஜென்ஸ் டெல்லி மண்டல பிரிவு, பிடித்து நாடெங்கும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ 2000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 7000கிலோ கிராம் தங்கக்கட்டிகளை இவர்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த இறண்டரை ஆண்டுகளில், ஒரே கேசில் கைப்பற்றிய அதிக மதிப்புள்ள தங்க கடத்தல் இதுவே ஆகும். 

செப்டம்பர் 1 ஆம் தேதி, டெல்லி உள்நாட்டு விமான நிலைய கார்கோ டெர்மினலில் பிடிப்பட்ட 10கிலோ தங்க கட்டி மூலம் வெளிச்சத்துக்கு வந்தது இந்த விஷயம். 24 கேரட் தங்க பார்கள் மயான்மாரில் இருந்து இந்தியாவிற்கு இந்தோ-மயான்மார் நில எல்லை மூலம் கொண்டுவரப்பட்டு, கெளவ்ஹாத்தி அடைந்தது. அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்ட இந்த தங்க பார்களின் சந்தை மதிப்பு சுமார் 3.1கோடி ரூபாய். 

பட உதவி: India Today
பட உதவி: India Today

இதே முறையில் கெளவ்ஹாத்தியில் இருந்து டெல்லிக்கு இதற்கு முன் 617 முறைகள் தங்கம் கடத்தப்பட்டுள்ளது. கஸ்டம்சில் பிடிபடாமல் இருக்க தங்க பார்கள் அடங்கிய மூட்டைகள், விலைமதிப்புள்ள பொருட்கள் என்ற பெயரில் விமான கார்கோ மூலம் அனுப்பியுள்ளனர். கடத்தல் கும்பல் இந்தியா முழுதும் ரயில்கள், பஸ்கள் மூலமும் தங்கத்தை கடத்தல் செய்வதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

பிடிப்பட்ட கடத்தல்காரர்களில் ஒருவர், கெளவ்ஹாத்தியை சேர்ந்த தொழிலதிபர் மற்றொருவர், டெல்லியை சேர்ந்த அவரது கூட்டாளி. இதற்கு முன்பும் பல வழக்குகளில் தொடர்புள்ள அந்த தொழிலதிபர், 9கோடி மதிப்புள்ள 37கிலோ தங்கத்தை கடத்தியுள்ளார். 2015 இல் அவர் மற்றொரு முறை கைது செய்யப்பட்டு பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.

புலனாய்வுத்துறை பல கடத்தல் வழக்குகளை கடந்த காலத்தில் பிடித்துள்ளனர். கடந்த 2015இல் கொல்கத்தாவில் 58 கிலோகிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் இது சம்பந்தமாக 12 பேரை கைதும் செய்தனர். வழக்கை விசாரித்த போது இதே கும்பல், மும்பையில் 200கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான 700கிலோ தங்கத்தை கடந்த 18 மாதங்களில் கடத்தியதாக தெரியவந்துள்ளது. 

இந்தோ-மயான்மார் எல்லை வழியாக தங்கம் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அங்குள்ள நிலப்பரப்பின் சிக்கலால் கள்ளக்கடத்தல் கும்பலை தடுப்பது சிரமமாக உள்ளது. இருப்பினும் புலனாய்வு துறையின் தீவிர கண்காணிப்பால், நாட்டிற்குள் தங்கக்கடத்தல் குறைந்து வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடந்த கடத்தல் சம்பவங்கள், கடந்த ஆண்டை காட்டிலும் 274 மெட்ரிக் டன்னிலிருந்து 107 ஆக குறைந்துள்ளது. 2015-16 இல் மொத்த தங்க இறக்குமதி 855 மெட்ரிக் டன் அளவிற்கு 1,79,172 கோடி மதிப்பாக இருந்தது.

கட்டுரை: Think Change India