10 ஆயிரம் அறுவை சிகிச்சைகளை உயிரிழப்புகள் இன்றி செய்து முடித்துள்ள 90 வயது மருத்துவர்!

0

அறுவை சிகிச்சை நிபுணரான ஆலா லெவோஷ்கினா (Alla Ilyinichna Levushkina) 90 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இவர் உலகின் வயது முதிர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராவார். கடந்த 68 ஆண்டுகளாக மருத்துவப் பணியாற்றி வருகிறார். பத்தாயிரத்திற்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஆனதில்லை.

பட உதவி: டெய்லி மெயில்
பட உதவி: டெய்லி மெயில்

ரஷ்யாவின் ரைசான் பகுதியில் வசிக்கும் ஆலா, திருமணம் செய்துகொள்ளவும் இல்லை, குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் இல்லை. தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதிலேயே செலவிட்டார். அவரது இளம் வயதில் மருத்துவர்கள் குறித்த நாவல் ஒன்றை படித்தார். மருத்துவத் துறையை அவர் தேர்ந்தெடுக்க இந்தப் புத்தகம் உந்துதலாக இருந்தது. அதிக போட்டி இருப்பினும் நாட்டில் வெகு சில பெண் மருத்துவர்களே இருப்பினும் ஆலா கடினமாக உழைத்து மாஸ்கோ மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார்.

பணி வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகள் வான் வழி போக்குவரத்தைப் பயன்படுத்தி மருத்துவ சேவை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியுள்ளார். இறுதியாக அவரது சொந்த ஊரான ரைசான் பகுதியில் மருத்துவப் பணியாற்றினார். ஓய்வு பெறும் திட்டம் குறித்து ’மிரர்’ பத்திரிக்கைக்கு கூறும்போது,

”மருத்துவம் ஒரு தொழில் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. மருத்துவ பணியாற்றுவது தவிர ஒரு அறுவை சிகிச்சை நிபுணருக்கு வாழ்க்கையில் வேறு எது முக்கியமாக இருக்கமுடியும்?” என கேள்வியெழுப்பினார்.

பணியின் மீதான அவரது ஈடுபாடு, இணையற்ற அர்ப்பணிப்பிற்காக ஆலாவிற்கு ரஷ்யாவில் சிறந்த மருத்துவருக்கான விருது கிடைத்தது. 90 வயதான இந்த மருத்துவர் தினமும் தனது கிளினிக்கில் காலை எட்டு மணி முதல் 11 மணி வரையும் நோயாளிகளை சந்திக்கிறார். அதன் பிறகு அறுவை சிகிச்சைகள் செய்துவிட்டு மீதிமிருக்கும் நேரத்தில் மற்ற நோயாளிகளையும் சந்திக்கிறார். கடந்த 68 ஆண்டுகளில் 10,000 அறுவை சிகிச்சைகளை உயிரிழப்புகள் ஏதுமின்றி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் என ’டெய்லி மெயில்’ தெரிவிக்கிறது.

ஆலா வீட்டிலிருக்கும் சமயத்தில் மாற்றுத்திறனாளியான அவரது உறவினரையும் எட்டு பூனைகளையும் பராமரித்து வருகிறார். வாழ்க்கையை முழுமையான விதத்தில் வாழவேண்டும் என்பது அவரது விருப்பம். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ரகசியம் குறித்து ’மிரர்’ பத்திரிக்கைக்கு தெரிவிக்கையில்,

“நான் அனைத்தையும் சாப்பிடுவேன். அதிகம் சிரிப்பேன், அதிகம் அழுவேன்,” என்றார்.

கட்டுரை : Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL