உங்கள் டிவி ரிமோட்டைக் கொண்டு விளக்குகள், ஃபேனை கட்டுப்படுத்த முடியும் தெரியுமா?

0

”உங்களது டிவி ரிமோட்தான் உங்களுடைய புதிய ஸ்விட்ச் போர்டு” என உரக்கச் சொல்கிறது GoQick வலைதளம்.

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். மும்பையைச் சேர்ந்த ஹார்ட்வேர் ஸ்டார்ட் அப் GoQick இதை சாத்தியப்படுத்தும் வகையில் ஒரு சிக்கலில்லாத தயாரிப்பை உருவாக்கியுள்ளது.

GoQick நுண்கட்டுப்படுத்தி (microcontroller) சார்ந்த சிறியளவிலான சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதனை சீலிங் ஃபேன், எல்ஈடி விளக்குகள், ட்யூப்லைட்கள், அலங்கார விளக்குகள் போன்றவற்றுடன் இணைத்துக்கொண்டு வழக்கமான டிவி ரிமோட்டைக் கொண்டு நீங்கள் கட்டுப்படுத்தலாம். நுண்கட்டுப்படுத்திகள் அடிப்படையில் ஒருங்கிணைந்த நுண்செயலிகளைக் கொண்ட சர்க்யூட்களாகும். இவை ஆட்டோமொபைல்ஸ், மின்சார உபகரணங்கள், கம்ப்யூட்டர் உபகரணங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தயாரிப்பு ஃபேன்கள், எல்ஈடி விளக்குகள், ஸ்விட்ச் ப்ளாக்குகள் என மூன்று முன்வடிவங்களைக் கொண்டுள்ளது. GoQick ஏற்கெனவே இரண்டு வடிவமைப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. ஒரு வடிவமைப்பிற்கான காப்புரிமை மட்டும் நிலுவையில் உள்ளது.

”தற்சமயம் ஃபேனை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். Fantrol தயாரிப்பை எந்த ப்ராண்ட் சீலிங் ஃபேனுடன் தனியாக பொருத்திவிடலாம்,” என்று யுவர் ஸ்டோரியிடம் தெரிவித்தார் GoQick நிறுவனர் கௌஸ்துப் தப்கே. 

”கூகுள் ஹோம் அல்லது அலெக்ஸா போன்ற விலையுயர்வான தானியங்கி பொருட்களுக்கு மாற்றாக விலை மலிவான தயாரிப்பை நாங்கள் வழங்குகிறோம்,” என விவரித்தார்.

அலெக்ஸா மற்றும் கூகுள் ஹோம் போன்றவை சாதனங்களை கட்டுப்படுத்தும் பணியை மட்டுமே மேற்கொள்வதில்லை என்பதால் அத்துடன் ஒப்பிடுவது முறையல்ல. வீட்டிற்கான தானியங்கல் தீர்வுகளை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற GoQick நிறுவனத்தின் நோக்கமே அதன் உந்துசக்தியாகவும் தனித்துவமான அம்சமாகவும் விளங்குகிறது.

”இந்தத் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சீலிங் ஃபேன்கள் விற்பனையாகிறது. மற்ற மின் பொருட்களையும் சேர்த்துக்கொண்டால் கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் வீட்டு பயன்பாடுகளுக்கான தானியங்கி சாதனங்கள் சிக்கல் நிறைந்ததாக இருப்பதுடன் விலையுயர்ந்தாகவும் உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கும் கீழேயுள்ள வாடிக்கையாளர்களுக்கு இவை ஏற்றதாக இல்லை,” என்றார்.

GoQick சாதனங்களின் விலை 500 முதல் 700 ரூபாய் வரை ஆகும். இது சந்தையில் கிடைக்கக்கூடிய வீட்டு பயன்பாடுகளுக்கான தானியங்கி சாதனங்களைக் காட்டிலும் கிட்டத்தட்ட 10 மடங்கு குறைவானதாகும்.

சர்க்யூட் முதல் ஹார்ட்வேர் ஸ்டார்ட் அப் வரை

எலக்ட்ரானிக்ஸ் பொறியாளரான 33 வயது கௌஸ்துப் 12 வயது முதலே சர்க்யூட் மற்றும் சாதனங்கள் உருவாக்கி வருகிறார். 2014-ம் ஆண்டிலேயே ஹார்ட்வேர் ஸ்டார்ட் அப்பிற்கான பணியைத் துவங்கினார். eBay-யில் 100 யூனிட் வரை விற்பனையும் செய்துள்ளார். சில புதிய வெர்ஷன்களை வடிவமைத்த பிறகு 2016-ம் ஆண்டு பரோடாவில் நடைபெற்ற ’ஸ்விட்ச் எக்ஸ்போ’வில் தயாரிப்பை காட்சிப்படுத்தினார். ”தற்போதுள்ள தயாரிப்புடன் ஒப்பிடுகையில் அது மிகவும் மாறுபட்ட வெர்ஷனாகும்,” என்றார்.

”ஸ்விட்ச் எக்ஸ்போவில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. பல டீலர்கள் ஆர்வம் காட்டினர். அதிக எண்ணிக்கையில் மொத்தமாக வாங்க விரும்பினர். ஒரே நாளில் 400-க்கும் அதிகமாக சைன் அப் செய்யப்பட்டது. அப்போதுதான் இந்த தயாரிப்பை வணிக ரீதியாக எடுத்துச்செல்லலாம் என்பதை உணர்ந்தேன்,” என்றார்.

எனினும் ஸ்விட்ச் எக்ஸ்போவில் பங்கேற்றத்தில் இருந்து GoQick பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தது. வருந்தத்தக்க வகையில் ஏற்றங்களைக் காட்டிலும் இறக்கம் அதிகமாகவே இருந்தது. 

“ஒரு சில பிரபல எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் எங்களை அணுகினார்கள். ஆரம்பத்தில் அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அவர்கள் அதற்குப் பிறகு தொடர்பு கொள்ளவில்லை,” என்றார் கௌஸ்துப்.

நிதி, உதவித்தொகை போன்றவை கிடைப்பதும் கடினமாகவே உள்ளது. இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ப்ரீ-இன்குபேஷன் முயற்சியான NIDHI-PRAYAS-ல் உதவித்தொகைக்கு விண்ணப்பித்ததும் நிலுவையில் உள்ளது. ”பெரும்பாலானோர் ஹார்ட்வேர் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. மென்பொருளில் முதலீடு செய்தால் வளர்ச்சியடைவது எளிதாக இருக்கும்,” என்று அவர் கவனித்த நுணுக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அடுத்தகட்ட திட்டம்

இத்தனை சவால்கள் இருந்தும் கௌஸ்துப் தனி ஒருவராக தயாரிப்பை மேம்படுத்துதல், வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவருதல் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு உபகரணங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப வடிவமைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார்.

”கோடிங், பேக்கேஜிங் உருவாக்குதல், வலைதளத்தை உருவாக்குதல், நிதி திரட்டுவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல் என நாமாகவே அனைத்திலும் ஈடுபடுவது சில சமயம் கடினமான செயலாக இருக்கும். ஆனால் இது போன்ற தயாரிப்பிற்கு நிச்சயம் தேவை உள்ளது. இதுவே என்னை தொடர்ந்து செயல்பட உந்துதலளிக்கிறது,” என்றார்.

இந்த ஹார்ட்வேர் ஸ்டார்ட் அப் முதல் கட்டமாக தயாரிப்பை அறிமுகப்படுத்த கூட்டுநிதி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன் வலைதளத்தில் முன்பதிவுகளையும் ஏற்றுக்கொள்ள திட்டமிட்டு வருகிறது. அடுத்த 4-5 மாதங்களில் சாதனங்களின் முதல் பேட்ச் விநியோகம் மேற்கொள்ளபடும் என எதிர்பார்க்கிறது. ஆரம்ப முதலீடு 10 லட்ச ரூபாய் தேவைப்படும் என்கிறார் கௌஸ்துப்.

இந்த ஸ்டார்ட் அப் ஆரம்ப கட்டத்தில் சிறப்பாக செயல்படுவதைக் கண்டால் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டலாம் என நம்பிக்கை தெரிவித்தார். குறைந்தது நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவை உருவாக்க விரும்புகிறார். இந்தக் குழு அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவி அதிகளவிலான நகரங்களுக்கும் ஹார்ட்வேர் ஸ்டோர்களுக்கும் தயாரிப்பை எடுத்துச் செல்லும் என்றார். 

”அதுவரையிலும் GoQick சுயநிதியில் இயங்கி வரும். இந்த புதுமையான முயற்சிக்கு ஆதரவளிக்க நான் ஃப்ரீலான்ஸ் ப்ராஜெடுகளை ஏற்றுக்கொள்கிறேன்,” என்றார் கௌஸ்துப்.

ஆங்கில கட்டுரையாளர் : சோஹினி மிட்டர் | தமிழில் : ஸ்ரீவித்யா