மக்கள் பாரம்பரிய இசையை கற்க உதவும் சுழலும் இசைச் சக்கரத்தை உருவாக்கிய சென்னை தொழில்நுட்ப வல்லுனர்! 

சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணரான லெல்லபள்ளி சேஷசாலா ரமேஷ் கர்நாடக இசை அல்லது ஹிந்துஸ்தானி இசை பயில விரும்புவோருக்கு இந்த இசைச் சக்கரத்தை வடிவமைத்துள்ளார்...

0

இசை பயில்வதற்கு முதலில் விதிகளின்படி வாசிக்கவேண்டும். அதன்பிறகு அதை நினைவில் கொண்டு வாசிக்கவேண்டும். இரண்டாவது வகையைப் பின்பற்ற முதலில் விதிகளைக் கற்கவேண்டும். இசையைக் கற்பது, குறிப்பாக கர்நாடக இசை அல்லது ஹிந்துஸ்தானி இசை கற்பது சற்று சோர்வளிக்கும் செயல்முறைதான். சக்கர வடிவில் இருக்கும் ஒரு வரைபடத்தை தொடர்புப்படுத்தி கிடார், பியானோ அல்லது வீணை வாசிக்க கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?

48 வயதான லெல்லபள்ளி சேஷசாலா ரமேஷ் சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர். இவர் ஒரு இசைச் சக்கரத்தை வடிவமைத்துள்ளார். கர்நாடக இசை அல்லது ஹிந்துஸ்தானி இசை பயில விரும்புவோர் இதன் மூலம் கற்றுக்கொள்ளலாம். சுயமாக இசை கற்றுக்கொண்ட ரமேஷ் இசை குறித்த புரிதல் இல்லாதவர்கள் எளிதாக அவர்களாகவே ராகங்களை கற்றுக்கொள்ள உதவும் விதத்தில் சக்கரத்தை உருவாக்கியுள்ளார்.

”நான் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையின் அடிப்படையை புரிந்துகொள்ள முயற்சித்தபோது இசை சக்கரத்தை வடிவமைக்கவேண்டும் என்கிற யோசனை தோன்றியது. எனக்கு குரு என்று யாரும் இல்லை. இசை குறித்த பல்வேறு புத்தகங்களை வாசித்தேன். சிறந்த இசை மேதைகளின் ரெக்கார்டிங்களை கேட்டேன்.”

”அனைத்து இசை வகைகளுக்கும் தாய் என்றழைக்கப்படும் கர்நாடக இசையில் 72 மேளகர்த்தா (முக்கிய ராகங்கள்) உள்ளன. இந்த 72 ராகங்களை அனைவரும் கற்கும் விதத்தில் எப்படி காட்சி வடிவத்தில் வழங்கலாம் என யோசித்தேன்,” என்றார் ரமேஷ்.

ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான ரமேஷ் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பகல் நேரத்தில் பயிற்சி பிரிவின் தலைவராக உள்ளார். இரவு நேரத்தில் இசை குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். பத்தாண்டுகள் செலவிட்டு இசைச் சக்கரத்தை வடிவமைத்துள்ளார்.

கர்நாடக இசையின் பல்வேறு ராகங்கள் 72 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுள்ளன. இந்தப் பிரிவுகள் வெவ்வேறு சக்கரங்களாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன்.

சக்கரம் குறித்து அவர் விவரிக்கையில்,

இசைச் சக்கரத்தை கீபோர்ட், பியானோ போன்றவற்றிகும் கிடார், வீணை போன்ற இசைக் கருவிகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த இசைக்கருவிகளுக்கான ஸ்வரங்கள் புள்ளிகளுடன் சக்கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன். அனைத்து ஸ்வரஸ்தானங்களும் சக்கரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே சக்கரத்தை பார்ப்பதன் மூலமாகவே ராகங்களை நினைவில் கொள்ளமுடியும். பிரின்ஸ் ராமவர்மா, பாலமுரளிகிருஷ்ணா, நடிகர் கமல்ஹாசன் போன்ற கலைஞர்களும், பிரபல இசைக்கலைஞர்களும் இந்தக் கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளனர்.

1,000 ரூபாய் செலவில் இசைச் சக்கரத்தை Faces108 என்கிற ரமேஷின் வலைதளத்தில் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம். இந்த விற்பனையின் மூலம் ஈட்டப்படும் வருவாய் நன்கொடை வழங்கப் பயன்படுத்தப்படுகிறது. ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி இருவரும் FACES (உணவு, உதவி, உடை, கல்வி, இருப்பிடம்) என்கிற முயற்சி மூலம் 1,000 அனாதைகளுக்கு உதவுகின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 5,000 குழந்தைகள் தெருக்களில் வீசப்படுவதாகவும் இந்தக் குழந்தைகள் பல்வேறு குற்றச்செயல்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் யூனிசெஃப் தெரிவிக்கிறது. அதிர்ஷ்டவசமாக இவர்களை ஏற்றுக்கொள்ளவும் தேவையான ஆதரவளிக்கவும் அனாதை இல்லங்கள் உள்ளது.

”நான் நான்கு வெவ்வேறு அனாதை இல்லங்களிலுள்ள 1,000 அனாதைகளுக்கு ஆதரவளிக்கிறேன். இதில் இரண்டு இல்லங்கள் வாரங்கல் பகுதியிலும், ஒன்று சென்னையிலும் மற்றொன்று பெங்களூருவிலும் உள்ளது. இசை சக்கரத்தின் விற்பனை வாயிலாக கிடைக்கும் வருவாய், பல்வேறு பட்டறைகள், விரிவுரைகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் செய்முறைகள் போன்றவற்றிற்கான கட்டணம் என சேகரிக்கப்படும் தொகையில் ஒரு பகுதியை ஒவ்வொரு மாதமும் அனாதைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வழங்கிவருகிறேன்,” என்றார் ரமேஷ்.

ஆங்கில கட்டுரையாளர் : கல்யாணி பாண்டே