ஜி.எஸ்.டி. அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளை போக்க 18 வகை பணிக்குழுக்கள் அமைப்பு!

0

சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை 1ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் போது ஏற்படக்கூடிய குறைபாடுகளை போக்கும் வகையில் 18 வகையான துறை ரீதியான பணிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கலால்துறையின் சேலம் மண்டல ஆணையர் எஸ். கண்ணன் குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை முன்னிட்டு செய்தியாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிலரங்கை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய சேலம் மண்டல மத்திய கலால் வரித்துறை ஆணையர் திரு. எஸ். கண்ணன் மேலும் கூறுகையில்,

"ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு நாடு தயாராக உள்ளது என்றும் இதில் உள்ள பிரச்சினைகள் எளிமையாகும் வரையில் ரிட்டர்ன் தாக்கல் செய்தல், மின்- ஊர்தி வழி பில் நடைமுறைகள், டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ். நடைமுறைகள் போன்றவற்றை அரசு இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது," என்றார்.

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ஜி.எஸ்.டி. சேவை மையங்களும் உதவி மையங்களும் நாட்டின் பல்வேறு கோட்ட அளவிலான ஆணையரக அளவிலும் மண்டல அளவிலும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி. அமலாக்கத்தில் தகவல் தொழில்நுட்பம் முதுகெலும்பாக திகழ்கிறது என்று கூறினார். 

ஜி.எஸ்.டி. அமலாக்கத்தில் அதிகாரிகளுக்கு உதவும் வகையில் நாடெங்கும் 60 ஆயிரம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. தொடர்பாக வரிசெலுத்துவோரை சென்றடையும் வகையில் கோவை மண்டலத்தில் கடந்த மாதம் சிறப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இந்திய காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியாவின் தென் பிராந்திய தலைவரும், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவருமான சி.எம்.ஏ. முரளி கூறுகையில்,

"இந்த முக்கியமான வரி சீர்திருத்தம் சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப் பட்ட முக்கியமான சீர்திருத்தம். இந்த சீர்திருத்தம் வர்த்தகத்தை எளிமையாக்கும் என்றும்,  ஊழலை ஒழிக்க பெரிதும் உதவும்," என்றும் குறிப்பிட்டார்.

தடையற்ற வரி வரவிற்கு உதவும் காரணத்தால் நாளடைவில் இந்த ஜி.எஸ்.டி. மூலம் விலைவாசியில் நேர்மறை விளைவு ஏற்படும் என்றார். ஜி.எஸ்.டி. மூலம் பணவீக்க நெருக்கடி குறைவதுடன் வாடிக்கையாளர்கள் பலன் அடைவார்கள்.

வணிக வரிகள் இணை ஆணையர் ராஷ்மி ஜகாடே கூறுகையில்,

"ஜி.எஸ்.டி.யை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. திறன்மேம்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் 45 வட்டங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தரவு மாற்றத்திற்கான பயிற்சி சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது," என்றும் குறிப்பிட்டார்.

பதிவு செய்துள்ள ஒரு லட்சத்து 10 ஆயிரம் வணிகர்களில் 96801 வணிகர்கள் ஏற்கனவே ஜி.எஸ்.டி.க்கு பதிவு செய்து மாறிவிட்டனர் என்றும் தெரிவித்தார். மத்திய கலால்துறையின் கோயம்புத்தூர் துணை ஆணையர் கோவிந்தராஜ், இந்த ஜி.எஸ்.டி. தொடர்பாக உள்ள தவறான தகவல்களையும் புரிதல்களையும் போக்குவதற்கு வசதியாக ஜி.எஸ்.டி. பற்றி தெளிவாக விளக்கினார். 

ஜி.எஸ்.டி. என்பது ஒற்றை வரி முறை என்றும், மத்திய மாநில அரசுகள் இந்த ஒற்றை வரியை விதிக்கும் என்றார். நீண்ட கால அடிப்படையில் நாடு ஒற்றை வரி விதிப்பு முறைக்கு கொண்டு வரப்படும் என்றார். பணவீக்கம் பற்றி ஜி.எஸ்.டி. அமலாக்கத்தில் சொல்ல முடியாது என்றும் நாளடைவில் தான் அதன் தாக்கத்தை உணரமுடியும் என்றும் குறிப்பிட்டார். 

50 சதவீத பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி மூலம் எவ்வித மாற்றமும் இல்லையென்றும், 30 சதவீத பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

ஜி.எஸ்.டி. யின் வரலாற்று பின்னணி குறித்து விவரித்த அவர் உலகெங்கும் 140 நாடுகளில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.