கழிவு நிர்வாகத்தில் மாற்றத்தை நோக்கி முன்னோடி இளைஞர்கள்!

0

இந்தியாவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்படும் முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு அந்த மூன்று இளைஞர்களும் துடிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்த முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது- அவர்களின் சம்பூரன்(எ)ர்த் (Sampurn (e)arth) இன்று நகர்புற கழிவு அகற்றலில் முன்னுதாரணமாக இருக்கிறது. மும்பையை மையமாக கொண்டு செயல்படும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பின்னே உள்ள கதை சுவாரஸ்யமானது மட்டும் அல்ல; ஊக்கம் அளிக்க கூடியது.

தேபர்த்தா பானர்ஜி, ஜெயந்த நடராஜு மற்றும் ரித்விக் ஆகிய மூன்று இளைஞர்கள் தான் இந்த வெற்றிகரமான முயற்சிக்கு பின்னே இருக்கின்றனர். மூவருமே பொறியியல் பட்டதாரிகள். அதோடு சமூக தொழில்முனைவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள். அடிப்படையில் சமூக அக்கறை கொண்ட மூவரும் முதுகலை பட்டப்படிப்பின் போது தான் நண்பர்களானார்கள். அங்கு தான் அவர்கள் மனதில் குப்பை அகற்றும் சேவையை முழுமையாக வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் உதவுவதற்கான நிறுவனத்தை துவக்கும் எண்ணம் பிறந்தது.

” கண்ணுக்கு தெரியாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை மற்றும் என் வீட்டு கொல்லையில் இல்லையே ஆகிய அணுகுமுறைகளை குறி வைத்து செயல்படுகிறோம். இதனால் தான் எங்கள் சேவைகள் எல்லாமே மையத்தில் குவியாமல் பகிர்ந்தளிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. குப்பைகளை உருவாக்குபவர்கள் தங்கள் குப்பை அகற்றும் முறையை சீராக வைத்திருக்க குப்பைகளை தரம் பிரிக்கும் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. குப்பைகளில் இருந்து மதிப்பை உருவாக்கி மக்களுக்கு பொருளவிலான பலனை அளிக்க முடிவது தான் எங்களால் வேகமாக ஊடுருவ முடிந்ததற்கு காரணம்” என்கிறார் இணைய நிறுவனரும், இயக்குனருமான தேபர்த்தா பானர்ஜி.


இவர் பூனாவில் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றிக்கொண்டிருதார். ஓய்வு நேரங்களில் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து செயல்படுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இது சமூக நோக்கில் உதவும் திருப்தியை கொடுத்தாலும் , பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற போதுமானதல்ல என உணர்ந்தார். எனவே டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயன்சஸ் -ல் சமுக தொழில்முனை பாடப்பிரிவில் முதுகலை வகுப்பில் சேர்ந்தார்.

இங்கு தான் நண்பர்கள் ரித்விக் மற்றும் ஜெய்ந்தை சந்தித்தார். சம்பூரன்(எ)ர்த் நிறுவனத்திற்கு விதையும் இங்கு தான் உண்டானது.

பொறியியல் பட்டதாரிகளான அவர்கள் தொழில்முனைவை நேசித்ததால் தொழில்நுட்பம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என நம்பினர். சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் மற்றும் நீடித்த வளர்ச்சி மீதான நம்பிக்கை குப்பைகளை அகற்றும் பிரச்சனைக்கான தீர்வு பற்றி யோசிக்க வைத்தது.

இதனிடையே மூவரும் தங்கள் இயல்பு படி ஓய்வு நேரத்தில் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து சேவை செய்தனர். குப்பைகளை சேகரிப்பவர்களின் நலன் மற்றும் கழிவு நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டிரி முக்தி சங்கதனா எனும் என்.ஜி.ஓவுடனும் இணைந்து செயல்பட்டனர்.


அப்போது தான் குப்பைகள் சேகரிப்பதில் உள்ள குறைகளையும், போதாமைகளையும் உணர்ந்தனர்.“ தற்போதைய கழிவு நிர்வாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் அதற்கான அணுகுமுறை சுற்றுச்சூழல் நோக்கில் நீடித்ததாக இருக்க வேண்டும் என்பதோடு ,சமூக நோக்கில் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பொருளாதார நோக்கில் லாபம் அளிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். கழிவு நிர்வாகம் என்பது ஒரு சிலரால் மேற்கொள்ளப்படும் நல்ல உதாரணமாக பார்க்கப்படுகிறதே தவிர பெரிய அளவில் விரிவு படுத்தப்படுவதில்லை. பயோ-கேஸ், கம்பொஸ்டிங் பற்றி எல்லாம் கேள்விபட்டிருந்தாலும் இவற்றை எல்லாம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் அதிகம் இல்லை. குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படவில்லை” என்கிறார் தேபர்த்தா.

இந்த குறைகளை போக்கும் வகையில் முழுமையான கழிவு அகற்றல் நிர்வாக சேவையை அளிக்க தீர்மானித்தனர். லாபம் அளிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும் என விரும்பினர். கழிவு நிர்வாகத்திற்கான சரியான தொழில்நுட்பங்களை கையாளவதுடன் சரியான வர்த்தக முறையும் தேவை என நினைத்தனர். முதலில் தன்னார்வ நிறுவனங்கள் கைகொடுத்தன. தங்கள் திட்டத்தை சோதனையாக மேற்கொண்டு பார்த்து சம்பூரன்( எ)ர்த் நிறுவனத்தை துவக்கினர்.


2012 ல் துவக்கப்பட்ட இந்நிறுவனம் செயல்திறன் வாய்ந்த மற்றும் நீடித்த வளர்ச்சி கொண்ட நிறுவனமாக உருவாகி இருப்பதுடன் ,கழிவு நிர்வாகத்தை லாபகரமானதாகவும் ஆக்கியிருக்கிறது. நிறுவனம் சூழலுக்கு பொருத்தமான கழிவு நிர்வாக தீர்வுகளை அளிக்கிறது. இவை சுற்றுசூழலுக்கு இணக்கமாக இருப்பதோடு , குப்பை சேகரிப்பவர்களையும் ஈடுபடுத்துவதாக இருக்கிறது.

இந்த நிறுவனம் மும்பை பெரு நகராட்சி, கல்வி அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கையாள்கிறது.

குப்பை அகற்றும் சேவையை நாடுபவர்களிடம் முதலில் அவர்கள் பகுதிக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பொருத்தமான முறை பரிந்துரைக்கப்படுகிறது. பின்னர் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மக்கும் குப்பைகள் கம்போஸ்ட்டாக மாற்றப்படுகின்றன. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

குடியிருப்புகளில் இரண்டு வகையான குப்பைகளுக்கு தனியே பைகளை வைத்து அவற்றை தரம் பிரிக்க வைக்கின்றனர். துவக்கத்தில் இதை குடியிருப்புவாசிகள் கஷ்டமாக உணர்ந்தாலும் பின்னர் ஏற்றுக்கொண்டனர் என்கிறார் வாடிக்கையாளர்களில் ஒருவரான விஜயா ஸ்ரீனிவாசன்.

குப்பைகள் தொடர்பான மக்களின் அணுகுமுறையை மாற்ற முயல்வது போல, குப்பை சேகரிப்பாளர்களின் நிலையையும் நிறுவனம் மாற்றி இருக்கிறது. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கழிவு மேலாளர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். மேலும் அவர்கள் பணி புரிய உகந்த சூழலில் பணியாற்றுகின்றனர். மறுசுழற்சி முறைகள் மூலம் நன்றாக சம்பாதிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் குப்பைகளை சேகரிக்கும் முக்கியமான பணியை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு கவுரமான சூழலை ஏற்படுத்தி தந்துள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவதுடன் மும்பை மாநகராட்சி மற்றும் குப்பை சேகரிப்பவர்கள் கூட்டமைப்பான பரிசார் விகாஸ் சங்கா அமைப்புடன் இணைந்து குப்பை சேகரிப்பு வாகனங்கள் மற்றும் உலர் கழிவு விற்பனை மைங்களையும் நிர்வகிக்கின்றனர்.

டி.பி.எஸ் வங்கி முக்கிய ஆதரவாளராக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் தேவையான நிதி அளித்து உதவியது.” டி.பி.எஸ் வங்கி எங்கள் நஷ்டத்தை ஈடு செய்ய உதவினர். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீட் அப் கூட்டங்கள் நடத்தி குறைகளை சரி செய்ய உதவினர்” என்கிறார் தேபர்த்தா.

எதிர்கால திட்டம் பற்றியும் அவர் உற்சாகமாக பேசுகிறார். “ மும்பை மட்டும் 10,000 மெடிரிக் டன் குப்பைகளை தினமும் உற்பத்தி செய்கிறது. இதிலேலே ஆயிரம் மடங்கு வாய்ப்பு இருக்கிறது. பல மாநகராட்சிகளுடன் இணைந்து இந்தியா முழுவதும் பயோ- கேஸ் ஆலை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் கவனம் செலுத்துகிறோம்” என்கிறார் அவர் பிரான்சைஸ் முறையில் விரிவாக்கம் செய்யும் திட்டமிருப்பதாகவும் அவர் சொல்கிறார்.

நிறுவனத்தின் வளர்ச்சிப்பாதை பற்றியும் அவர் விரிவாக பேசுகிறார்.” லாபம் மூலம் சொந்த காலில் நிற்க முயற்சி செய்து வந்தாலும் டிபிஎஸ்-டிஐஎஸ்எஸ் இன்குபேஷன் திட்டம் மற்றும் அன்லிமிடெட் இந்தியா ஆகியவற்றின் ஆதரவு கிடைத்துள்ளது. வர்த்தக திட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று வருகிறோம். முதல் கட்ட சமபங்கு மூலதனமும் கிடைத்திருக்கிறது” என்கிறார் .

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 -ஐ தொட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்துள்ளனர். தி கேபிடல் மற்றும் ஆட்லேப்ஸ் இமேஜிகா போன்ற கார்பரேட் பூங்காக்களுக்கு முழுமையான கழிவு நிர்வாக சேவைகளை அளிக்கின்றனர்.

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயன்சஸ், டாடா பவர் தெர்மல் பவர் ஸ்டேஷன் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வளாகத்தில் பயோ கேஸ் ஆலையை அமைத்துள்ளனர். பல கல்லூரிகள் மற்றும் குடியிருப்புகளில் கம்போஸ்ட் மையங்களை அமைத்துள்ளனர். ரிலையன்ஸ் கார்பரேட் பார்க், ஆக்சிஸ் பாங்க், மகிந்திரா , பஜாஜ் எலக்டிரிகல் போன்ற நிறுவனங்களுக்கு மறுசுழற்சி நிர்வாகத்தை அளிக்கின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றுகின்றனர்.


மகாராஷ்டிராவின் மற்ற நகரங்களுக்கும் விரிவு படுத்தியுள்ளனர். இவர்கள் முயற்சிக்கு அரசின் "தூய்மை இந்தியா" திட்டமும் தேவையான கவனத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் ஸ்வச் பார்த் என்பது தெருக்களை தூமையாக்குவது மட்டும் அல்ல, நீர் மற்றும் காற்றையும் மாசில்லாமல் ஆக்குவது தான், இது முறையான கழிவு நிர்வாகம் மூலம் சாத்தியம் என்கிறார் தேபர்த்தா.

புதிய நிறுவனத்தை துவங்க விரும்புகிறவர்கள், தங்கள் திட்டம் தொடர்பாக தினசரி சிறிய அளவில் ஏதேனும் செய்த படி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் கூட அந்த திட்டத்திற்கான செயல்கள் தானாக கூடிவரும் என்று தனது அனுபவ பாடத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தங்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பது தான் முக்கியமானது என்கின்றனர் தேபர்த்தாவும் அவரது நண்பர்களும்.

” ஒவ்வொருவரும் தங்கள் பணியை சரியாக செய்தால் ,நிச்சயம் ஏதாவது வழி பிறக்கும். பிரச்சனைகளை அடையாளம் கண்டு புரிந்து கொள்பவர்கள் என்ற முறையில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது எங்கள் கடமை. இதற்காக முடிந்த வரை சிறப்பாக செயல்பட வேண்டும்” என்கின்றனர் அவர்கள்.

” நாங்கள் பார்க்க விரும்பிய ஒன்றை உருவாக்கி, மக்களின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றை செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இது எங்களை மாற்றும் அனுபவமாக இருக்கிறது” என்கின்றனர் அவர்கள் புன்னகையுடன்.

கழிவு நிர்வாகத்தில் மாற்றத்தை கொண்டுவந்தவர்களாக அறியப்பட வேண்டும் என விரும்பும் இந்த முன்னோடி இளைஞர்கள் , தோல்வி பயம் தான் பலருக்கு தங்கள் கனவுகளை அடைய தடையாக இருக்கிறது என்கின்றனர். “ முயற்சி செய்வது நல்லது. தோல்வியில் முடிந்தாலும் அதிகம் இழக்க மாட்டோம். சில ஆண்டுகள் வீணாகலாம். ஆனால் அந்த அனுபவமே நம்மை வெற்றியாளராக்கும். இந்த தொழில்முனைவு அணுகுமுறையே முக்கியம்” என்கின்றனர் ஊக்கம் தரும் குரலில்.

மேலும் விவரங்ளுக்கு - http://www.sampurnearth.com