'ஜல்லிக்கட்டு நடத்த தனி ஸ்டேடியம் கட்ட வேண்டும்'- புகைப்படக் கலைஞர் சுரேஷின் ஆசை!

0

கருப்பு வெள்ளை தொடங்கி, பிலிம் ரோல் காலகட்டத்தில் பயணித்து, தற்போது டிஜிட்டல் யுகத்திலும் இருக்கும் பல புகைப்படக் கலைஞர்கள் ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை படமாக்கி வருகிறார்கள். அதிலும் ஜல்லிக்கட்டை படம்பிடிப்பதில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜே.சுரேஷ் எனும் புகைப்படக் கலைஞருக்கு தனி ஆர்வம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் படம்பிடித்து பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

அண்மையில் புகைப்படக் கலைஞர் சுரேஷ், சென்னையில் நடத்திய ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி நடிகர் கமல்ஹாசன் உள்பட 4000 பேரை கவர்ந்து இழுத்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்களில் இருந்த ஜல்லிக்கட்டு காளைகளின் வேகம், வீரர்களின் துடிப்பு, மக்களின் பரவசம், எல்லாம் தாண்டி தமிழர்களின் கலாச்சாரம் என்று அத்தனையும் அந்த புகைப்படங்களில் பிரதிபலித்தது. விதிமுறைகள் வகுப்பதற்கு முன்பு புழுதிபறக்க எடுக்கப்பட்டப் படங்கள் இன்றைய இளைஞர்களுக்கு புதிதாகவும் கண்களுக்கு விருந்தாகவும் இருந்தது.

மலையாளக்கரையான திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த சுரேஷ், தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு மீது தனி மோகம் கொண்டிருப்பதாலோ என்னவோ பலரும் அவரை 'ஜல்லிக்கட்டு' சுரேஷ் என்றே அடையாளம் கொள்கின்றனர். பல விருதுகளும், பரிசுகளும் பெற்று பாராட்டுகளை பெற்றுள்ள சுரேஷிடம் அவரது இந்த மோகம் பற்றியும் புகைப்படத் தொழிலுக்கு வரக்காரணங்கள் பற்றியும் தமிழ் யுவர்ஸ்டோரி சார்பில் கேட்டபோது, 

"தந்தை ஸ்டுடியோ வைத்திருந்ததால் புகைப்படங்கள் மீது சிறுவயது முதலே காதல் இருந்தது. 1992 கால கட்டத்தில் கேரளாவில் நடைப்பெற்ற பல புகைப்படப் போட்டிகளில் வெறியுடன் கலந்து கொள்வேன்" என்கிறார்.

அப்படித்தான், போட்டிக்காக படங்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக முதல் முதலாக 1998-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை படம் பிடிக்கச் சென்றேன். பத்துமணிக்கு போட்டி நடக்கும் பகுதிக்கு போனால் காலரியில் இடம் பிடிப்பதே திண்டாட்டம் ஆகிவிட்டது. அப்போது 500, 1000 ரூபாய் என்று டிக்கெட் இருந்தது. ஒருவழியாக இடம் பிடித்து படம் எடுத்து டெவலப் செய்து பார்த்தால் பெரிய திருப்தி ஏற்படவில்லை.

அதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் அலங்காநல்லூர் பயணம். 

ஆறரை மணிக்கே ஜல்லிக்கட்டு காலரியில் ஏறி இடம் பிடித்தேன். விரும்பிய கோணங்களில் எல்லாம் படம் பிடித்தேன். ஐந்து, ஆறு அடுக்குகள் கொண்ட காலரிகளில் ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் நிரம்பி வழிந்து ஆர்ப்பரிக்க, கீழே ஐந்தாயிரம் பேர் துள்ளி வரும் காளைகளை அடக்க முயல... புழுதி பறக்கும் சூழலில் அத்தனை ஆவேசங்களையும் படமாக்கினேன்.

போட்டிகள் முடிந்தபோது திருச்சூர் பூரத்தில் வெடிக்கப்படும் வெடிகளின் போது மனதில் எழும் ஒரு இனம் புரியாத ஆனந்தம், துள்ளல் உணர்வு தனக்கு ஜல்லிகட்டின் போது ஏற்பட்டதாக சுரேஷ் பூரிப்படைகிறார். புகைப்படங்களைத் தாண்டி அந்த உணர்வுகளுக்காகவே தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு பயணித்தேன். 2013 -ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள், சிறிதும் பெரிதுமாக மஞ்சு விரட்டு, வாடி மஞ்சு விரட்டு, வட மஞ்சு விரட்டு என்று விதவிதமான ஜல்லிகட்டுகளை படமாக்க, எண்பதுக்கும் மேலான ஊர்களுக்கு சென்று அவற்றை எல்லாம் காமிராவில் பதிவு செய்ததாக கூறுகிறார், சுரேஷ்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் என்று பல ஊர் ஜல்லிக்கட்டுகளை படம் பிடித்திருந்தாலும் சுரேஷை கவர்ந்தது என்னவோ அரளிப்பாறை ஜல்லிகட்டுதானாம். 

"இயற்கை காலரியாக அமைந்துள்ள அந்த மலைப்பாறையில் பொதுமக்கள் உட்கார்ந்து ரசிக்க, வீரர்கள் கீழே காளைகளுடன் மல்லுக் கட்டுவதை பார்ப்பதே தனி அழகு. அதுபோல் 2009க்குப் பிறகு தேங்காய் நார் பரப்பிய தரையில் யூனிபார்ம் போட்டு வீர்கள் களம் இறங்கியதை படம் பிடிப்பதை விட, முன்பு புழுதி பறக்கும் மண்ணில் கிராமத்து உடைகளில் இளைஞர்களும், காளைகளும் துள்ளிக் குதித்ததை அந்த கூட்டத்தோடு கூட்டமாக நின்று படம் பிடித்ததுதான் உச்சகட்ட திருப்தி. அந்தப் படங்களில் தான் உணர்ச்சியும், வீரமும் அதிகம் இருக்கிறது" என்கிறார்.

பத்தாண்டுகளுக்கு மேல் மலையாள மனோரமா பத்திரிகையில் சென்னை புகைப்படக்காரராக பணி ஆற்றியிருந்தாலும் ஒருமுறை கூட பத்திரிக்கைக்காக இவர் ஜல்லிக்கட்டு போட்டிகளை படம் எடுக்கச் சென்றதில்லை. விடுப்பு எடுத்துவிட்டு சொந்த ஆத்ம திருப்திக்காக ஜல்லிகட்டை படம் எடுக்கவே சென்றிருப்பதாக சொல்கிறார். ஆனால் அவர் எடுத்தப் படங்கள் சுரேஷுக்கு 'யுனஸ்கோ' உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்றுத்தந்துள்ளது.

2015 முதல் ஜல்லிக்கட்டு நடைபெறாதது சுரேஷையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது அவரது பேச்சில் தெரிகிறது. கடந்த ஒராண்டில் மட்டும் சுமார் 80 ஆயிரம் காளைகளை விவசாயிகள் விற்றிருக்கிறார்கள். மாதம் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை அவற்றிற்கு உணவுக்கும், பராமரிப்புக்கும் செலவிடுகின்றனர் என்றும் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் செலவாகிறது என்ற பல தகவல்களையும் அறிந்து வைத்திருக்கிறார்.

பராமரிப்புச் செலவை தாக்கு பிடிக்க முடியாத விவசாயிகள் இப்படி காளைகளை விற்பது இன்னும் அதிகமாகலாம். இதனால் காங்கேயம், செவலை உள்ளிட்ட பல நாட்டு மாடுகள் அழிந்துவிடும் ஆபத்தும் இந்த தடை மூலம் ஏற்படும் என்று மனம் வருந்துகிறார்.

"குதிரை வண்டி போட்டிகளில் அதன் மர்ம உறுப்பில் ஆணியால் குத்தி அதனை வேகமாக ஓடச் செய்கிறார்கள். அதை எல்லாம் ஒப்பிடும் பொது ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு எந்த கொடுமையும் நடப்பதில்லை. கபடி போட்டிகளிலும், குத்துச் சண்டையிலும் கூடத்தான் காயங்கள் ஏற்படுகிறது. அதற்காக அந்த விளையாட்டுகளை தடுத்துவிட முடியுமா..?" 

என்பது சுரேஷின் கோபக் கேள்விகள்.

ஜல்லிக்கட்டு நடைபெறாவிட்டால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும், வரட்சி ஏற்படும், விளைச்சல் பாதிக்கும், நோய்நொடிகள் வரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. அதற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பது சுரேஷின் வாதம்.  

மதுரை அல்லது காரைக்குடி பகுதியில் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்துவதற்கு என்று தனி விளையாட்டு மைதானம் ஒன்றை அரசு கட்ட வேண்டும் என்பது இந்த ரசிகரின் வேண்டுகோள். 

அதன் மூலம் மேலும் வரையறைகளை உருவாக்கி ஒவ்வொரு குழுக்களாக போட்டிகளை நடத்த முடியும். இன்னும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்தலாம். அதற்கான நாள் கண்டிப்பாக வரும் என்பது சுரேஷின் நம்பிக்கை.

இவரது நம்பிக்கை நனவாகட்டும்.!

கட்டுரையாளர்: ஜெனிட்டா