குடிநீர் வசதி, 650 கழிவறைகள் கொண்டு வந்து தன் கிராமத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவி மலர்கொடி!

1

650 கழிவறைகள் கட்டி, தனது கிராமத்தை ஒரு சிறந்த முன்மாதிரியாக்கி காட்டியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மலர்கொடி தனசேகர். இவரின் செயல்பாடும், புகழும் மற்ற மாவட்டங்களுக்கு பரவி அவரின் பணிகளை பின்பற்ற ஊக்கமளித்துள்ளது. 

பல அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட கிராமத்தை, பஞ்சாயத்து கிராம தலைவராகி 2011-ல் பொறுப்பேற்ற மலர்கொடி, பணிகளை தன் கையில் எடுத்துக்கொண்டு கிராம நலனுக்காக தீவிரமாக உழைக்கத் தொடங்கினார்.

பட உதவி: IndiaSpend
பட உதவி: IndiaSpend

49 வயதாகும் மலர்கொடி பெண் பஞ்சாயத்து தலைவியாக தனிச்சையாக செயல்படும் ஒரு பெண்மணி. பல பிரச்சனைகள், சவால்களை தாண்டி, ஆணாதிக்க சமுதாயத்தில் இத்தகைய பணிகளை கிராமத்தில் செய்துள்ளார். அரசியல் தலையீடு, நிதி உதவிகள் மறுப்பு, என்று பல தடைகளை தாண்டி, தன் கிராமத்தில் சாலை வசதி, சுத்தமான குடிநீர் வசதி, கழிவறை வசதி என அனைத்தையும் செய்து காட்டியுள்ளார்.

மேலமருங்கூர் என்ற அந்த கிராமத்தில் போதிய குடிநீர் வசதி கிடையாது. நான்கு நாளுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் கிடைக்கும்.

“ப்ளாக் மற்றும் மாவட்ட அதிகாரிகள் எங்கள் பஞ்சாயத்தை பார்க்க வருவதில்லை. எங்களை போன்ற ஊர் கோடியில் உள்ள சிறு கிராமங்கள் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை,” என்கிறார் மலர்கொடி. 
“எங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதியை அளிப்பதில்லை. நாங்கள் இருப்பதாகவே அவர்கள் நினைப்பதில்லை. எங்களுக்கு ஒதுக்கிய நிதி வேறு டவுன்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டது.” 

இவர்கள் கிராமத்தில், பெண்களும், பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளும் கையில் பிளாஸ்டிக் குடங்களுடன் குடிநீர் பிடிக்க அலையவேண்டி இருக்கிறது. தண்ணீர் எப்போது வருகிறதோ அப்போது அதை பிடிக்க இவர்கள் ஓடவேண்டும், என்கிறார் மலர்கொடி.

”நான் இதையெல்லாம் மாற்ற நினைத்தேன். மாவட்ட நிர்வாகம் எங்கள் பஞ்சாயத்தை பற்றி அறியவேண்டும் என்றால், அதற்கு எங்கள் கிராமத்தை முழுவதும் மாற்றவேண்டும் என்று முடிவெடுத்தேன். எங்களால் சுயமாக வளர்ச்சியை கொண்டுவரமுடியும் என்று காண்பித்தோம்,” என்றார் மலர்கொடி தன்னம்பிக்கையுடன். 

2005-ல் ராமனதபுரம் மாவட்டத்தில் உள்ள எட்டு கிராமங்கள் மேல்மருங்கூர் பஞ்சாயத்துடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், மாவட்ட நிதி கமிஷன் 8 ராமனாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு ஒதுக்கிய நிதி மேல்மருங்கூர் பஞ்சாயத்துக்கு வரவில்லை. மாநில அரசு அளிக்கும் இந்த பெரிய நிதி தொகை வைத்துதான் பஞ்சாயத்துகள் கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தமுடியும். 

மலர்கொடி இதை தன் கையில் எடுத்துக்கொண்டு, தொடர் பெட்டிசன்கள் கொடுத்து, மாவட்ட அதிகாரிகள், கலெக்டர் என்று அனைத்து அரசு படிகளிலும் ஏறி, இறங்கி மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை என்று ஆறு மாதங்கள் போராடினார். குறிப்பாக அவர் குடிநீர் பிரச்சனைக்காக தொடர்ந்து மனு அளித்தார்.

பல சாதனைகளில், முக்கியமாக தனது பஞ்சாயத்து அளவில் 650 கழிவறைகளை மற்றவர்களை விட குறைந்த செலவில் கட்டி முடித்தார். 13,500 ரூபாய் செலவு ஆகும் ஒரு கழிவறையை 12 ஆயிரம் ரூபாயில் மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின்’ கீழ் கட்டி முடித்தார். 

கழிவறைகள் மட்டுமின்றி, கிராமப்புற கட்டமைப்பு வசதிகளுக்காகவும் போராடி அதையும் பெற்றுள்ளார் மலர்கொடி. கழிவறைகள் கட்ட ஆன செலவில், கிராமவாசிகள் கொடுக்க இயலாதவர்களுக்காக தன்னிடம் இருந்து 1 லட்ச ரூபாய் கொடுத்து செலவிட்டுள்ளார். 15 ஏக்கர் நிலம் சொந்தமாக கொண்டுள்ள மலர்கொடியின் குடும்பத்தார் அவருடைய செலவுக்கு உதவியுள்ளனர். 

மேல்மருங்கூர் மாவட்டத்தை மற்ற மாவட்டங்களை விட சிறப்பானதாக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்ய தீவிரமாக உள்ளார் மலர்கொடி. 

கட்டுரை: Think Change India


Related Stories

Stories by YS TEAM TAMIL