காவல் நிலைய வளாகத்தில் உள்ள தரிசுநிலத்தில் ஆர்கானிக் விவசாயம் மேற்கொண்ட கேரள காவலர்கள்!

0

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இருக்கும் அம்பலவாயல் காவல் நிலையத்தில் இருக்கும் நிலத்தில் நான்கு வகையான மிளகாய், பூசணி, வெண்டைக்காய், தக்காளி என சுமார் 40 காய்கறிகள் விளைகின்றன. தரிசு நிலம் ஒன்றை இத்தகைய விளைநிலமாக மாற்றியுள்ளனர் காக்கி சீருடையில் இருக்கும் காவலர்கள். 

காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள 40 செண்ட் நிலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாஸ் அலி இந்த முயற்சியை மேற்கொள்ள விரும்பினார். சக காவலர்களிடம் இது குறித்து தெரிவித்தார். இந்த முயற்சியில் இணைய அவர்களது விருப்பத்தைக் கேட்டார். அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் 34 காவலர்கள் முன்வந்தனர்.

”காவல் நிலையத்தைச் சுற்றியுள்ள நிலத்தை முதலில் சீரமைக்கவேண்டும் என்பதை நாங்கள் நன்கறிவோம். முற்றத்தில் இருந்து குவியல் குவியலாக மண்ணை கொண்டு வந்து நிலத்தில் பரப்பினோம். தொட்டியில் வளர்க்கும் காய்கறிகளுக்கு பிரத்யேகமான செடி வளர்க்கும் பைகளை வாங்கினோம். அதை சாணப்பொடி மற்றும் கோகோபித் கொண்டு நிரப்பி விதைகளை விதைத்தோம்,”

என்று ’தி நியூஸ் மினிட்’ நேர்காணலில் அம்பலவாயல் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏஎஸ்ஐ சாமி தெரிவித்தார்.

விவசாய கருவிகள், விதைகள் போன்றவற்றை வாங்கினர். இரண்டு முதல் நான்கு காவலர்கள் நிலத்தில் நேரம் செலவிட்டனர். இன்று 40 வகையான செடிகளுடன் இந்த நிலம் வளமாக காணப்படுகிறது. 

”நாங்கள் இந்தப் பகுதியில் இருந்து மாற்றலாகி சென்றுவிடலாம். இருப்பினும் விவசாயத்தை மேற்கொண்ட திருப்தி எங்களுக்குக் கிடைக்கும். எங்களது பணி வாழ்க்கையானது எப்போதும் பரபரப்பாக இயங்கவேண்டிய அமைப்பு கொண்டது. மன அழுத்தம் நிறைந்தது. இவை அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கு விவசாயம் வழிவகுத்தது,” என்று Quint நேர்காணலில் காவலர்கள் தெரிவித்தார்.

ஆர்கானிக் விவசாயத்தை படிநிலை வேறுபாடுகள் இன்றி ஒருங்கிணைந்து மேற்கொண்டனர். உண்மையான நோக்கம் எத்தகைய பலனளிக்கும் என்பதற்கு இது சான்றாகும். தற்போது விளைச்சல்கள் சந்தை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் தொகை காவல் நிலையத்தின் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA