'இரவலர்கள் இல்லா சென்னை'யை உருவாக்கும் முனைப்பில் 'டேக் கேர் இந்தியா'

0

பெயரில் இருக்கும் அக்கறை செயலிலும் இருக்க வேண்டும் என விரும்பும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்!

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் - என்றார் வள்ளுவர்"

பிச்சையெடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலையில் ஒருவனை படைத்திருந்தால், இந்த உலகைப் படைத்தவனே அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக- என்று வள்ளுர் கடவுளுக்கே சாபம் கொடுத்ததாக இக்குறளுக்கு விளக்கம் சொல்லப்படுகிறது.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட முகமத் இப்ராஹிம், இரவலர் ஒருவர் கூட இல்லாத சென்னையை மாற்றுவது தான் தன் லட்சியம் என்கிறார்.

எப்படி முடியும் என்று கேட்டால், முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று நம்பிக்கையோடு பேசுகிறார், கணிப்பொறியியல் இளங்கலை பட்டம் பெற்ற இந்த முப்பது வயது இளைஞர்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்ய முடியாது. பிச்சைக்காரர்கள் இல்லா சென்னை என்பது எவ்வளவு கடினமான பணி என்பதை உணர்ந்திருப்பதால், அதற்காக நிதானமான திட்டமிடுதல்களைச் செய்து வருகிறது "டேக் கேர் இந்தியா" (Take Care India) என்கிறார் இப்ராஹிம்.

பிச்சை எடுப்பவர்களில் பலர் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும், இதன் காரணமாக அவர்கள் மாநகராட்சியின் இரவு தங்குமிடங்களைக்கூட பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகிறார். அவர்களை போதையடிமைத் தன்மையிலிருந்து விடுவிப்பது, அவர்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு, என நீண்ட பணிக்கான திட்டமிடுதல்களைச் செய்து வருவதாகவும், எண்ணியது விரைவில் நிறைவேறும் என்றும் நம்பிக்கையோடு பேசுகிறார் அவர்.

இரவலர்கள் மனிதர்கள் அல்ல என்ற மனப்போக்கை போக்கி, அவர்களை நெருங்கி சக மனிதனாக அவர்களை மாற்றும் தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கி வருவகிறோம். அன்பு நிறைந்த அந்த அணுகுமுறைதான் பிச்சை எடுப்போர்கள் இல்லா சென்னைக்கு அடிப்படைத் தேவை என்கிறார் இப்ராஹிம்.

செயலே சிறந்த சொல் என்பதால் பேசுவதைவிட திட்டமிடுதலில் அதிக கவனம் செலுத்துவதாகச் சொல்லும் டேக் கேர் இந்தியா நிறுவனர், தற்போது பல்வேறு விதமான பொது நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவை தன் நடிப்பால் ஆட்சி செய்த ஆச்சி மனோரமாவிற்காக கடந்த ஆண்டு நடத்திய பெண் சாதனையாளர் நிகழ்ச்சி, கலாம் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய சிறந்த செயலாக்கமுள்ள 100 இளைஞர்களை கெளரவித்து சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி, விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு என்று பல தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது இந்த அமைப்பு.

வரும் மார்ச் 8 ஆம் தேதி, 'உலக மகளிர் தினத்தை' முன்னிட்டு சிறந்த பெண்களை அடையாளப்படுத்தும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளது டேக் கேர் இந்தியா.

இவை தவிர தனிப்பட்ட நிலையில் நடைபெறும் பெரும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்துவரும் இப்ராஹிம், அந்த தனிப்பட்ட நிகழ்வுகளின் வழியாக வரும் வருவாய், தொடர்புகள் அனைத்தும், பொது நிகழ்வுகளுக்கான தேவைகளைப் பெருமளவு நிறைவு செய்கிறது என்கிறார்.

நிகழ்வுகள் மட்டும் தானா என்றால், "இல்லை… அண்மையில் சென்னையை உலுக்கிய வெள்ளத்தின் போது, டேக் கேர் இந்தியா களத்தில் தன் பணியைச் செய்தது என்கிறார் அவர். 

"முடிச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20 படகுகள் மூலமாக தத்தளித்த மக்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மீட்டோம். வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களிடையே தகவல் தொடர்பு சிக்கலானபோது, எந்த பகுதியில் எந்த சிம்கார்டு எடுக்கிறது என்பதை அறிந்து, அதனைப் பெற்று தன்னார்வலர்களிடம் விநியோகித்து, தகவல் தொடர்பை மேம்படுத்தினோம்,"

என தனித்தும் சில நிறுவனங்களோடு இணைந்து களத்தில் நின்றதை நினைவுகூர்கிறார். வெள்ள காலத்தில் இரண்டு நாட்கள் பட்டினி கிடந்தவர்கள் இருந்த இடம் நோக்கி தாங்கள் உணவோடு சென்றபோது அந்த மக்களிடம் ஏற்பட்ட உணர்வை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் கண்கலங்கினார் இப்ராஹிம்.

________________________________________________________________________

படிக்க வேண்டிய தொடர்பு கட்டுரை:

'பாலம்' கல்யாண சுந்தரம்: கலாம் முதல் ரஜினி வரை வியக்கவைத்த உன்னத ஆளுமை!

________________________________________________________________________

எங்கிருந்து வந்தது இந்த சமூகப் பொறுப்புணர்வு என்றால், கல்விக்காக நடிகர் சூர்யா நடத்திவரும் அகரம் அறக்கட்டளைதான் பல்வேறு விதமான மனிதர்களையும், வாழ்வையும், தனக்குக் கற்றுக்கொடுத்ததாகக் கூறுகிறார்.

"ஊழல்தான் அனைவரும் நல்ல கல்வி பெறமுடியாததற்கு காரணம் என்று உணர்ந்து அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இணைந்து செயல்புரிந்தேன், காலப்போக்கில் அது அரசியல் கட்சியாக உருமாற்றம் பெற்றதால் விலகி வந்து 'டேக் கேர் இந்தியா' என்ற அமைப்பை நிறுவி இயக்குகிறேன்," என விளக்குகிறார்.

கல்வி மற்றும் இளைஞர்களின் செயலூக்கம் ஆகியவற்றில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த அப்துல் கலாமின் வாழ்க்கை தனக்கு மிகவும் உத்வேகமளிப்பதாகவும். இரவலர்கள் இல்லாத சென்னை என்ற மிகப்பெரிய லட்சியத்திற்கான தொடக்க அடியை எடுத்து வைத்திருப்பதாகவும் நம்பிக்கையோடு முடித்த இப்ராஹிமிடம் நீங்கள் படித்ததில் பிடித்தது எது என்றோம்….

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து புதிது புதிதாய் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. சாமான்யர்களின் அன்பும், சாதனையாளர்களின் செயலூக்கமுமே என்னை ஊக்கபடுத்துகிறது என்கிறார் இந்த உத்வேக இளைஞர்.

இணையதள முகவரி: Take Care India

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற சமூக பொறுப்புடன் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள மனிதர்கள் தொடர்பு கட்டுரை:

நாம் தட்டிக்கழிப்பது மற்றவர் தட்டிற்கு: 'நோ ஃபூட் வேஸ்ட்' பத்மநாபன்

'மறக்கவே முடியாது'- போபாலில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் ஒரு பெண்ணின் இலக்கு!