அரசியல் உரையாடல் தரம் தாழ்ந்து போக என்ன காரணம்?

0

அருண் ஜெட்லி ஃபேஸ்புக் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா தொடர்பான சிக்கலுடன் அந்த பதிவு துவங்குகிறது. ஆனால் அதன் பிரதான உள்ளடக்கம் தற்போது அரசியல் உரையாடல் என்பது எந்த அளவுக்கு தரம் தாழ்ந்திருக்கிறது என்பது தொடர்பான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. முதலில் இதை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்மைக் காலங்களில் அரசியல் உரையாடலின் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதையும், விவாதத்தின் தரம் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதற்கு பதிலாக பரஸ்பரம் தாக்கிக் கொள்வதாக அமைந்திருப்பதையும் மறுக்க முடியாது. நாகரீகமான வார்த்தைகள் எவை நாகரீகமில்லாத வார்த்தைகள் எவை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு நாகரீகமற்ற சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இதை அரசியலின் ஆதிக்கமயமாக்கல் என சொல்லத்தோன்றலாம். கிரிமினல்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறத்துவங்கி, பல்வேறு கட்சி மற்றும் அரசுகளில் முக்கிய பதவி வகிக்கத் துவங்கியிருக்கும் நிலையில் இது எதிர்பார்க்க கூடியது தான். இதற்கான உயரடுக்கு பிரிவினரின் விளக்கமானது நமது அரசியலில், ஏற்பட்டு வரும் மாற்றத்தின் விளைவு இது அல்லது பிரதான அரசியல் நீரோட்டமானது பிராந்தியதன்மைக்கு உள்ளாகி வருவதான் விளைவு என்பதாக இருக்கலாம்.

ஆனால் இது இன்னமும் ஆழமான அலசல் மற்றும் ஆய்வுக்கு உரியது. சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிகள் முழுவதிலும் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டம் பெற்ற சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தைச்சேர்ந்தவர்களால் அலங்கரிக்கப்பட்டது. அவர்கள் இங்கிலாந்தின் சிறந்த நாடாளுமன்ற முறைக்கு அறிமுகமாகி இருந்தனர். அவர்கள் ஆங்கில மொழி மற்றும் ஆங்கில கலாச்சாரத்தை நன்கறிந்திருந்ததோடு ஆங்கிலேய நுட்பங்களையும் அரவணைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த ஆடை மற்றும் மொழி இந்திய சூழலுக்கு அந்நியமாக இருந்தாலும் நாட்டில் தலைமைக்கான மிகச்சிறந்த அடையாளமாக அமைந்தன. கதரை ஒரு போக்காக மாற்றிய மகாத்மா காந்தியால் இந்த மரபு உடைக்கப்பட்டது. அவரை அரை 'நிர்வாண பக்கிரி' என அழைக்கும் அளவுக்கு வின்ஸ்டன் சர்ச்சில் காந்தியின் உடையால் கடும் அதிருப்தி அடைந்திருந்தார். சர்ச்சில் பணக்காரர் இல்லை என்றாலும், பாரம்பரிய ஆங்கிலேய குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தவர் தனது சுருட்டு மற்றும் மாலை நேர மதுவை விரும்பியவராக இருந்தார். ஆனால் காந்தி மாறுபட்டிருந்தார். மக்களுடன் தொடர்பு கொள்ள அந்நிய மொழி மற்றும் அந்நிய உடை மூலம் சாத்தியம் இல்லை என உணர்ந்திருந்தார். அவரது கதர் ஆடை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது.

இன்னொரு பக்கத்தில் நேரு ஆங்கிலேய வழக்கங்களை கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கில மொழியில் நல்ல ஆளுமை இருந்தது. இந்தச் சூழலில் தன்னுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் அனைவரையும் அவர் வளர்த்துவிட்டார். அவரது ஆதரவாளர்களில் லால் பகதூர் சாஸ்திரி மட்டும் தான் மாறுபட்ட பின்னணியை கொண்டிருந்தார். ஆனால் இந்திய அரசியலில் மொழித்தடை மற்றும் உயரடுக்கு தன்மையை முதலில் உடைத்தது ராம் மனோகர் லோகியா தான். இவர் தான் காங்கிரசுக்கு எதிரான தன்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அரசியலை முதலில் உருவாக்கியவர். அவரது வருகை மற்றும் பேச்சு தான் இந்திய அரசியலில் முதல் முறையாக மாற்றத்தை கொண்டு வந்தது. அது வரை காங்கிரஸ் தான் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருந்தது. பிராமண வகுப்பினரே அதற்கு தலைமை வகித்தனர். சமூகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களே ஆள வேண்டும் என்று லோகியா கூறினார். அப்போது ஆட்சியில் இருந்து உயரடுக்கு பிரிவினரின் விருப்பங்களுக்கு எதிரான சரியான ஜனநாயக ப்ரியராக அவர் விளங்கினார். ஆனால் அவரது ஆசையான பிற்படுத்தப்பட்டோர் அரசியலின் வெற்றியைக்காண அவர் உயிருடன் இல்லை என்றாலும் கூட 90 களில் மண்டல் கமிஷனுக்கு பிறகு எல்லா விதங்களிலும் வேறுபட்டிருந்த புதிய தலைமை உண்டானது.

லாலு, முலாயம், கன்சிராம், கல்யாண் சிங், உமா பாரதி ஆகியோர் செல்வச் செழிப்புடன் பிறக்கவும் இல்லை, உயரடுக்கு தன்மையை பெறவும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் தெருக்களின் புழுதியில் இருந்து எழுந்து வந்தவர்கள். அவர்கள் இந்திய அரசியலுக்கு புதிய மொழியை அறிமுகம் செய்தனர். இதை ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த அரசியல் சக்திகளுக்கு விரும்பவில்லை என்பது வேறு விஷயம். அவர்கள் மொழி இகழப்பட்டது. இந்த தலைவர்கள் நேர்த்தியாக பேசவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலம் பேசத் தடுமாறினர். சாதிய பாகுபாடும் இருந்தது. மேல் சாதி மற்றும் மேல் தட்டு பிரிவினரால் அவர்கள் விரோதமாக பார்க்கப்பட்டனர். ஊழல் மற்றும் செயல்திறன் இல்லாத தன்மை இந்த கூற்றுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. ஆனால் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய சக்திகள் இவர்களின் எண்ணிக்கை ஆதிக்கத்தை ஏற்பதை தவிர வேறுவழியில்லை. இந்தப் பிரிவினரின் அணுகுமுறையானது, அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது நிகழந்த, பின்னர் திட்டவட்டமாக நிராகரிக்கப்பட்ட கருத்தான வாக்களிப்பதற்கு கல்வி தகுதியாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான விவாதத்திற்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது.

அரசியலில் ஏற்பட்ட சமூக அடுக்கிலான மாற்றம் தான், உரையால் தரம் தாழ்வதற்கான ஒரே காரணம் என்று மொழியியல் நோக்கில் நான் கூறவரவில்லை. இது உரையாடலுக்கு வேறுவிதமான மொழியை கொண்டு வந்தது உண்மை தான். ஆங்கிலத்திற்கு பதில் பிராந்திய மொழி பயன்படுத்தப்பட்டது. இந்த புதிய மொழி ஆங்கிலம் பேசும் வர்க்கத்திற்கு கலாச்சார அதிர்ச்சியாக அமைந்தது. இந்த இரண்டு குழுக்கள் இடையிலான மோதல் தான் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. ஆதிக்கம் செலுத்திய பிரிவு தாங்கள் கேள்வி கேட்கப்பட்டு புதிய அரசியல் பிரிவு மாற்றாக எழுவதை வலியுடன் எதிர்கொண்டது. இது இந்திய அரசியலில் பிளவு கோடுகளை ஆழமாக்கியது. இந்த பிளவு அடிப்படையில் இருந்தது. இதனால் விரோதம் தீவிரமாக இருந்தது. இரண்டு குழுக்களும் ஒரே அரசியல் வெளிக்காக போட்டியிடுகின்றன. யாரும் சரணடையத்தயராக இல்லை. ஆனால் இரண்டாம் பிரிவுக்கு ஆதரவாக எண்ணிக்கை இருக்கிறது. இதற்கு முதலில் பலியானது பரஸ்பர மதிப்பு மற்றும் அபிமானம் ஆகும். அரசியல் வேறுபாடு அரசியில் விரோதமாக மாறியது. விவாதங்களுக்கு பதில் தாக்குதல்கள் நிகழ்கின்றன.

ஆம் ஆத்மி கட்சி இதில் புதிய பரிமானத்தை கொண்டு வந்துள்ளது. அது வழக்கமான அரசியலை எதிர்க்கிறது. இந்த புதிய நிதர்சனத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள பழைய கட்சிகள் தடுமாறுகின்றன. ஏற்கனவே உள்ள முரணை ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக்கியுள்ளது. அதன் வருகை மேலும் துவேஷத்தை உண்டாக்கியுள்ளது. எல்லா நிலைப்பெற்ற கட்சிகளும் ஆம் ஆத்மி கட்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறுகின்றன. கட்சி துவங்கப்படுவதற்கு முன்னரே கூட இதன் தலைமை மோசமான தாக்குதலுக்கு இலக்கானது. நாங்கள் சாக்கடை எலிகள் என இகழப்பட்டோம். தில்லி சட்டமன்ற தேர்தலின் போது பிரதமர் கூட எங்களை விட்டுவைக்காமல், காட்டில் வசிக்க வேண்டும் நக்சல்கள் என்று தாக்கிப்பேசினார். துரதிர்ஷ்டசாலிகள் என்றும் சாடினார். ஒரு பிரதமர் இந்த அளவு இறங்கியதில்லை. பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஒரு தலைவர் பேசக்கூடிய வார்த்தைகள் அல்ல இவை. மற்றொரு மூத்த பா.ஜ.க தலைவர் கிரிராஜ் சிங் எங்களை ராட்சதர்கள் என்றார். சாத்வி ஜோதி நிரஞ்சன் இன்னும் ஒரு படி மேலே சென்று விட்டார். அவர் எங்களை இன்னும் தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கினார். பா.ஜ.க தலைமை அவர்களை தடுக்கவும் இல்லை, எச்சரிக்கவும் இல்லை. இந்த பட்டியல் நீள்கிறது.

2007 குஜராத் சட்ட மன்ற தேர்தலின் போது சோனியா காந்தி மற்றும் அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோவை மோடி எப்படி குறிப்பிட்டார் என எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அதை நான் மீண்டும் கூற விரும்பவில்லை. ஆனால் அது சரியான விதத்தில் அமைந்திருக்கவில்லை. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை யஷ்வந்த் சின்ஹா, சிகண்டி என அழைத்ததும் நினைவுக்கு வருகிறது. வாஜ்பாயி அரசில் யஷ்வந்த செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்தார். இப்போது அருண் ஜெட்லி மற்றும் பா.ஜ.க தலைமைக்கு பிரதமரை குறிக்க அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்திய வார்த்தை பிரச்சனையாகி விட்டது. தனது தரப்பு தவற்றை பார்க்காமல் அடுத்தவரை குறை சொல்லும் போக்கை மட்டுமே நான் சுட்டிக்காட்டுகிறேன். உபதேசம் செய்யப்படுவது நடைமுறையிலும் பின்பற்றப்பட வேண்டும். இந்த பிரச்சனையை ஆம் ஆத்மி கட்சி உணர்ந்துள்ளது. ஆனால் நாம் எல்லோருமே சுய பரிசோதனையில் ஈடுபட்டு இதை சரி செய்ய வேண்டும். ஆம் ஆத்மி கட்சி உண்டான போது, எம்பிக்களுக்கான நட்த்தை நெறிமுறைகளை வகுக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்கான காரணம் எளிமையானது. இந்திய அரசியல் மாறிவிட்டது. வரலாற்று காரணங்கள் தவிர, பழைய கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களுக்கு எதிரான அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனால் யாரும் விலகிக்கொள்ள தயாராக இல்லை. வரலாறு மற்றும் சமகாலம் இரண்டு சந்திக்கும் இந்த புள்ளியில், உண்டாகும் மொழி கண்டனத்திற்கு இலக்காகிறது. ஆனால் எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது, அதுவும் நல்லதுக்கு தான் என்று நான் கூற விரும்புகிறேன்.

ஆக்கம்: அசுடோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)