பள்ளிப்படிப்பை 13 வயதில் விட்ட ஆஷா கெம்கா, இந்த ஆண்டின் சிறந்த ஆசிய பிசினஸ்வுமனாக தேர்வு!

0

இந்தியாவில் வாழும் பல பெண்களுக்கு அடிப்படை கல்வி மறுக்கப்படுவது நாம் அறிந்தது. இருப்பினும் ஒரு சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கமுடியும் என்பது உண்மை. அஷா கெம்கா என்ற யூகே வாழ் இந்தியரின் கதையும் கல்வி சம்மந்தப்பட்டது ஆகும். அவர் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிய பிசினஸ்வுமன் விருதை பெற்றுள்ளார். ஆஹா, மேற்கு நாட்டிங்கம்ஷையர் கல்லூரியின் முதல்வர் மற்றும் சிஇஒ ஆக உள்ளார்.

கல்வியாளராக, யூகேவில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஆஷா இங்கிலாந்துக்கு தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்தபோது அவருக்கு ஆங்கிலம் பேச வராது, பள்ளிப்படிப்பை கூட அவர் முடித்திருக்கவில்லை. 

பிஹார் மாநிலத்தில் சிதாமர்ஹி மாவட்டத்தை சேர்ந்த ஆஷா, 13 வயது வரை மட்டுமே பள்ளிக்கு சென்றார். பொதுவாகவே பெண்கள் வயதுக்கு வந்தபின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுவது அவர் ஊரில் வழக்கமாக இருந்தது. 25 வயதாகும் முன்பே, ஆஷா திருமணம் ஆகி மூன்று குழந்தைகளுக்கு தாயாகி இருந்தார். 

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் யூகே வந்த ஆஷா, புது இடத்தை பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்தார். ஆனால் அவர் கடின உழைப்பாளி மற்றும் கற்றுக்கொள்வதில் ஆர்வமானவர். தொடக்கத்தில், டிவி பார்த்து ஆங்கிலம் கற்றுக்கொண்டு, அங்குள்ள மற்ற அம்மாக்களுடன் உரையாடி தன் ஆங்கிலப்புலமையை வளர்த்துக்கொண்டார். கல்வி மீதான தீராக்காதலால், கார்டிஃப் பல்கலைகழகத்தில் பிசினஸ் டிகிரி பெற்றார். இது வெறும் ஆரம்பம் மட்டுமே. 

2006-ல் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக தன் பணியை தொடங்கி, பின்னர் மேற்கு நாட்டிங்கம்ஷையர் கல்லூரியின் தலைவர் மற்றும் சிஇஒ-ஆக பொறுப்பேற்றார். இந்த கல்லூரி லண்டனின் மிகப்பெரிய கல்லூரிகளில் ஒன்றாகும். 2013-ல் யூகே-வின் உயரிய விருதான Dame Commander என்ற பெருமையை பெற்றார். ஆஷா, இந்த விருதை பெறும் இரண்டாவது இந்திய பெண்மணி ஆவார்.

விருதை பெற்றபின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் பேசிய ஆஷா,

”இந்த உயரிய விருதை பெறுவதில் மகிழ்வடைகிறேன். இது எல்லாருக்கு சேர்ந்து கிடைத்த அங்கீகாரம், இத்தனை ஆண்டுகள் என்னுடன் பணி செய்த எல்லாருடன் இதை பகிர்ந்து கொள்கிறேன். கல்வி மீதான எனது காதல் தினம் தினம் இன்னமும் வளர்ந்துகொண்டே போகிறது. இத்துறையில் இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்,” என்றார். 

பிரிட்டிஷ் குடியுரிமையை ஆஷா தற்போது பெற்றிருந்தாலும், தன் சேவைகளை இந்தியாவிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்திய கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டுவந்து, இங்குள்ள கல்வியின் தரத்தை உயர்த்தி, திறன் மேம்பாடில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார். 

கட்டுரை: Think Change India