பெப்சி நிறுவனத்தை வழி நடத்திய இந்திரா நூயி அளிக்கும் தலைமைப் பதவி பாடங்கள்! 

0

இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓவாக 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்த பிறகு அந்த பதவியில் இருந்து விலகியிருக்கிறார். அவரது இடத்தில் ரமோன் லகுவார்ட்டா அக்டோபர் 3 ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். பெப்சி நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அவர் 2019 வரை இருப்பார். 

இந்திரா நூயி பெப்சி நிறுவனத்தில் 1994 ல் பணிக்கு சேர்ந்தார் 2006 ல் அவட் சி.இ.ஓவாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் பெப்சி நிறுவனம், 2006 ல் 35 பில்லியன் டாலரில் இருந்து 2017 ல் 63.5 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது.

இந்திரா நூயி நிறுவனத்தின் தலைவராக 2019 வரை பதவியை தொடர்வார். 61 வயதான நூயி, பதவி விலகல் முடிவை அறிவித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

"பெப்சி நிறுவனத்தை தலமையேற்று நடத்தியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமையாகும். கடந்த 12 ஆண்டுகளில், எங்கள் செயல்பாடுகள் குறித்து, பங்குதாரர்கள் மட்டும் அல்லாமல் நாங்கள் செயல்படும் சமூகங்களில் உள்ள அனைத்து தொடர்புடையவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டிருப்பது குறித்து பெருமிதம் கொள்கிறேன். இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான், இத்தகைய அசாதரனமான நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துவேன் என கனவிலும் நினைக்கவில்லை.”

அவரது இடத்தில் பொறுப்பேற்க உள்ள ரெமோன், பெப்சி நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். 2017 முதல் பெப்சி தலைவராக அவர் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளை கவனித்து வந்தார்.

இந்திரா நூயி டிவிட்டரில் ரமோன் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

"@PepsiCo நிறுவனத்தின் வெற்றி மற்றும் வலுவான நிலையை மேம்படுத்த ரெமோன் லகுவார்ட்ட பொருத்தமானவர். அவர் முக்கிய பங்குதாரராக மற்றும் நண்பராக இருந்திருக்கிறார். வரும் ஆண்டுகளில் நிறுவனத்தை அவர் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகிறேன்.”

இதனிடையே, நிறுவனத்தின் இயக்குனரான ஐயான் குக், நிறுவன வளர்ச்சியில் இந்திரா நூயியின் பங்களிப்பை பாராட்டினார். குறுகிய கால நோக்கில் அல்லாமல் நீண்ட கால நோக்கிலான பார்வையுடன் நிர்வகித்து, வலுவான மற்றும் சீரான நிதி செயல்பாடுகளை அளித்தார்,” என அவர் பாராட்டியிருந்தார்.

’இன்றைய தினம் எனக்கு கலைவையான உணர்வுகளை கொண்டது. @PepsiCo24 ஆண்டுகளாக என் வாழ்க்கையாக இருந்தது. என் இதயத்தின் ஒரு பகுதி இங்கு தான் இருக்கும். நான் என்ன செய்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொண்டுள்ளேன். பெப்சி நிறுவனத்தின் சிறந்த காலம் வர இருப்பதாக நம்புகிறேன்” என்றும் அவர் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு பெண்ணாக தலைமை வகித்தது பற்றி இந்திரா நூயியின் ஊக்கம் தரும் மேற்கோள்கள் இவை:

”நான் செய்யாத எதையும் மற்ற எவரையும் செய்யுமாறு கூற மாட்டேன்.”

“சி.இ.ஓ’வாக நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் தலைமை பதவி என்பது ஒவ்வொரு கட்டத்திலும் வேறுபட்டதாக இருக்கும். நிறுவனத்தில் உயர் பதவி பெறும் போது, பொறுப்புகள் அதற்கேற்ப அதிகரிக்காமல், பன்மடங்கு உயர்கின்றன.”

”நான் நேர்மையாக, மிக நேர்மையாக இருக்கிறேன். நான் எப்போதுமே, எல்லாவற்றையும் அவர்கள் கோணத்திலும், என் கோணத்திலும் பார்த்திருக்கிறேன். எப்போது விலகிக் கொள்ள வேண்டும் என எனக்குத்தெரியும்.”
”தலைமைப் பண்பை வரையறை செய்வது கடினம். நல்ல தலைமைப் பண்பை வரையறுப்பது இன்னும் கடினம். ஆனால் மற்றவர்களை பூமியின் விளிம்பை நோக்கி உங்களை பின் தொடர்ந்து வரச்செய்ய முடியும் என்றால் நீங்கள் நல்ல தலைவர்.”
”நீங்கள் நீங்களாக இருப்பது தான் வெற்றிக்கான முக்கிய அம்சங்களில் ஒன்று. உங்களை உருவாக்கும் அம்சங்களை ஒரு போதும் மறைக்க வேண்டாம்.”
”எல்லாவற்றையும் மீறி, நீங்கள் ஒரு மனிதர் என்பதை, நீங்கள் ஒரு அம்மா என்பதை, நீங்கள் ஒரு மனைவி என்பதை, நீங்கள் ஒரு மகள் என்பதை மறக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு வெற்றி பெற்றாலும் கடைசியில் குடும்பம், நண்பர்கள் மற்றும் நம்பிக்கை மட்டும் தான் உங்களுடன் இருக்கும்.

ஆங்கில கட்டுரையாளர்: தேவிகா சிட்னிஸ் | தமிழில்; சைபர்சிம்மன்