அரசு சின்னங்கள், பெயர்களைப் விதிமுறைகள் படி முறையாகப் பின்பற்ற மத்திய அரசு எச்சரிக்கை!

0

1950ஆம் ஆண்டின் அரசு சின்னங்கள் (இலச்சினைகள்), பெயர்களுக்கான (தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும்) சட்டத்தின் விதிமுறைகளுக்கு, அதிலும் குறிப்பாக அந்தச் சட்டத்தின் 3வது பிரிவிற்கு முற்றிலும் விரோதமான வகையில், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் பெயர்கள் அல்லது சித்திர வகைப்பட்ட பயன்பாடு அல்லது சின்னங்கள் ஆகியவற்றை தங்களின் உற்பத்திப் பொருட்கள் அல்லது வியாபாரக் குறியீடு ஆகியவற்றை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு சில வணிக நிறுவனங்கள் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் விளம்பரங்களை வெளியிட்டு வரும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளன.

1950ஆம் ஆண்டின் அரசு சின்னங்கள், பெயர்களுக்கான (தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும்) சட்டத்தின் மூன்றாவது பிரிவு “மத்திய அரசின் அல்லது மத்திய அரசின் சார்பாக இதற்கென அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அலுவலரின் முன்கூட்டிய அனுமதி இல்லாமல், மத்திய அரசினால் தெளிவாகச் சுட்டப்பட்டுள்ள சில குறிப்பிட்ட சூழ்நிலைமைகளின் கீழ் அல்லாமல் யாரும், எந்தவொரு வர்த்தக, வியாபார, செயல்பாடு அல்லது தொழில் அல்லது எந்தவொரு காப்புரிமையின் பெயரிலும் அல்லது எந்தவொரு வியாபாரக் குறியீட்டிலும் அல்லது வடிவமைப்பிலும் அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பெயரையோ அல்லது சின்னங்களையோ அல்லது வண்ணமூட்டப்பட்ட அவற்றின் போலியான தோற்றத்தையோ பயன்படுத்தக் கூடாது” என மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.

அங்கீகாரமற்ற வகையில் பெயர்களையோ அல்லது சின்னங்களையோ பயன்படுத்துவது என்பது அதற்கான எதிர்ப்புகளையும் அதனோடு கூடவே அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளையும் வரவழைப்பதாக அமையும். எனவே இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உள்ளிட்டு சின்னங்கள், பெயர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்ட விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பாக இதற்குரிய அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து அனுமதியையோ/ உரிய அதிகாரத்தையோ பெற வேண்டும் என்றும் இந்தச் சட்டத்தின் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு அறிவுறுத்தப்படுகின்றன.