வீட்டிலிருந்து தொழில் செய்யும் பெண்களை அங்கீகரிக்கும் ‘சுயசக்தி விருதுகள்’ விண்ணப்பங்கள் வரவேற்பு!  

1

‘சுயசக்தி 2017’ விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வீட்டிலிருந்தே தொழில் செய்யும் / பகுதி நேரமாக தொழில் செய்யும் பெண் தொழில் முனைவோர் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! www.homepreneurawards.com / www.suyasakthi.com என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 11, 2017க்குள் விண்ணப்பிக்கலாம்

நடிகை சுஹாசினி மற்றும் நடிகர் கார்த்தி மற்றும் பிரபல நடுவர் குழு உறுப்பினர்கள் ‘சுயசக்தி விருதை’ இன்று அறிமுகப்படுத்தி, அதற்கான விண்ணப்பங்கள் பெறும் தளத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய சுஹாசினி,

“பெண்கள் சிறுவயது முதலே பல திறமைகள் கொண்டவர்கள். அவர்களுக்கு இந்த விருதுகள் போல அங்கீகாரமும், சரியான வழிகாட்டுதலும் கிடைத்தால் பல வெற்றியாளார்களை தொழில்துறையிலும் காணமுடியும்.,” என்றார்.

சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் கார்த்தி பேசுகையில்,

“இது போன்ற நிகழ்ச்சிகள் வெளி உலகில் வராத பெண்களின் வெற்றிக் கதைகளை, நிஜ கதைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும். அதுவே மற்ற பெண்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்,” என்றார்.

14 தொழில் பிரிவுகளின் கீழ் 50க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோருக்கு விருதுகள் விருது வழங்கும் விழா, சென்னையில் ஆகஸ்ட் 6, 2017 அன்று கவிப்பேரரசு வைரமுத்துவின் உரை, இசை, ஃபேஷன் ஷோ மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெறும் என்று ’சுயசக்தி விருதுகள்’ நடத்தும் ப்ராண்ட் அவதார் நிறுவனத்தின் நிறுவனர் ஹேமசந்திரன் தெரிவித்தார். 

மகளிரின் தொழில் திறமைகளை அங்கீகரிப்பதற்கான தனித்துவமிக்க வாய்ப்பு:

இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டிலிருந்து தொழில் செய்யும் பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை ஊக்குவித்து பாராட்டும் நோக்கத்துடன், வணிக நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதார் (Brand Avatar - branding and event management company), ‘சுயசக்தி விருதுகளை’ உருவாக்கி உள்ளது. வீட்டிலிருந்தபடியே கேக் தயாரித்தல், அழகு பொருள் விற்பனை, பயிற்சி அளித்தல், பகுதி நேர தொழில் போன்ற பல்வேறு தொழில்களில் சிறந்து விளங்குவோருக்கு இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. தங்கள் தொழில் முயற்சிகளில் தனித்துவமிக்க சாதனை புரிந்தோர் ‘சுயசக்தி விருதுகளுக்கு’ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர்வதற்கான கடைசி தேதி ஜூலை 11, 2017 ஆகும்.

மேலும் விவரம் அறிய www.homepreneurawards.com அல்லது www.suyasakthi.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்; 99400 11417 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

வீட்டிலிருந்து சிறுதொழில் மேற்கொள்ளும் பெண்களை தொழில்முனைவோராக உயர்த்துவதற்கான ஆலோசனை மற்றும் நிதியுதவி:

வீட்டிலிருந்து தொழில் செய்யும் பெண்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவ, ஏஞ்சல் தொழில் முதலீட்டு நிறுவனமான `நேட்டிவ் லீட் ஃபவுண்டேஷன்’ (Native Lead Foundation) என்ற அமைப்பு தகுதியுள்ளோரை தெரிவு செய்து அவர்களுக்குரிய தொழில் பெருக்கத்திற்கான வழிகாட்டலையும் முதலீட்டுக்கான நிதி உதவியையும் அளிக்கிறது. 

“உரிய மகளிர் தொழில்முனைவோரின் தலைமைப் பண்புகள், செயல்வேகம் ஆகியவற்றைப் பொறுத்தும் அவர்களுடைய தொழில்களின் வளர்ச்சி வாய்ப்புகளைப் பொறுத்தும் முதலீட்டு உதவிகள் செய்யப்படும்,” என்று அதன் நிறுவனர் சிவராஜா ராமநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சென்னையை தாண்டி இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களான மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, தஞ்சை என்று பல ஊர்களில் வீட்டிலிருந்து தொழில் செய்யும் பெண்களை இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

“தகுந்த தொழில்துறை நிபுணத்துவத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்தே தொழில் செய்யும் பெண் தொழில்முனைவோருக்கு நாங்கள், முதலீடு மற்றும் வழிகாட்டலை வழங்கி அவர்கள் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவுள்ளோம்” என்றார்.

பிரபலமான மற்றும் அனுபவமிக்க நடுவர்கள் குழு:

ஒவ்வொரு தொழில் பிரிவின் கீழ் விருதுகளுக்குத் தகுதி பெறுவோரை ஆளுமையும், அனுபவமும் மிகுந்த நடுவர்களைக் கொண்ட குழு தெரிவு செய்யும். இக்குழுவில் டாக்டர். மரியசினா ஜான்சன் - இணைவேந்தர், சத்யபாமா பல்கலைக்கழகம்; திருமதி. வீணா குமாரவேல் - நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் நிறுவனர்; திருமதி. பூர்ணிமா ராமசாமி – ஆடை வடிவமைப்பில் தேசிய விருது பெற்ற வல்லுநர் மற்றும் தொழில்முனைவர்; திருமதி. ரோகிணி மணியன் – குளோபல் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் சர்வீசஸ் முதன்மை நிர்வாக அலுவலர் மற்றும் கல்சுராமா லிவிங் (Culturama Living) இதழின் தலைமை பதிப்பாசிரியர்; திருமதி. திவ்யதர்ஷினி - நிகழ்ச்சி தொகுப்பாளர்; திருமதி. அருணா சுப்ரமணியன் – பூமிகா அறக்கட்டளையின் நிறுவனர்; டாக்டர். செளந்தர்யா ராஜேஷ் – தலைவர், அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ் & பிளக்ஸி கேரியர்ஸ் இந்தியா (AVTAR Career Creators & FLEXI Careers India), திருமதி. ஹேமா ருக்மணி – தேனாண்டாள் எண்டர்டைன்மென்ட்ஸ், முதன்மை செயல் அலுவலர்; திருமதி. நளினா ராமலஷ்மி – பேரன்ட் சர்க்கிள் இதழ் (Parent Circle Magazine) நிர்வாகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வணிக நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதாரின் நிறுவனர்-முதன்மை செயல் அலுவலர் ஹேமச்சந்திரன் இது பற்றிக் கூறுகையில், 

“வீட்டிலிருந்தே தொழில் செய்யும் பெண்களிடையே உள்ள புதிய சிந்தனைகள், செயல்முறைகள் போன்ற திறமைகள் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. அதனை வெளிக்கொணர்வதும், அங்கீகரிப்பதும் இந்த விருதின் நோக்கம். இத்தகைய பெண் தொழில்முனைவோருக்கு அவர்கள் தொழிலை மேலும் வளர்த்தெடுக்கத் தேவையான வழிகாட்டல் மற்றும் முதலீட்டு உதவிகளை பெறுவதே இவ்விருதின் முயற்சி,” என்று தெரிவித்தார்.

நேச்சுரல்ஸ் இணை நிறுவனரான சி.கே. குமாரவேல் தமது கருத்துகளை தெரிவிக்கையில், 

“தொழில்முனைவோராக செயல்படும் பெண்களை அங்கீகரித்து ஊக்கப்படுத்தவும் அவர்கள் தொழில் முயற்சிகளில் மேன்மேலும் ஈடுபடவும், பொருளாதார சுதந்திரத்தை அவர்கள் அடையவும் இந்த ஊக்கம் மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். ஆனால் தொழிலில் ஈடுபடும் பெண்களின் வெற்றிக் கனவுகள் நனவாகாமல் போவதற்கு பல காரணங்களில் ஒன்றாக அவர்களின் திருமணம் அமைந்து விடுவது வருத்தமளிக்கிறது. அவர்களின் கனவுகள் காற்றில் கரைந்துவிடாமல் இருக்கவும் அவர்கள் தொடர்ந்து தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஊக்கத்தை அவர்களுக்கு அளிப்பதற்கும் இந்த விருதுகள் பெரிதும் துணைபுரியும்” என்று தெரிவித்தார்.

ஆதரவு அளிப்போர்:

‘சுயசக்தி விருதுகள்’ நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளராக (Title Sponsor) நேச்சுரல்ஸ் சலூன், முதன்மை ஊக்கமளிப்பவராக (Powered By) சத்யபாமா பல்கலைக்கழகம், கோ-ஸ்பான்சரராக (Co-Sponsor) ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மற்றும் தைரோகேர், சக்தி மசாலா, லட்சுமி விலாஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் இந்நிகழ்ச்சிக்கு இணை ஆதரவாளர்களாக (Associate Sponsor) பொறுப்பேற்றுள்ளன. யுவர்ஸ்டோரி தமிழ் இவ்விருது விழாவின் டிஜிட்டல் மீடியா பார்ட்னராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

Stories by YS TEAM TAMIL