நிறுவனங்கள் தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் சேர மூன்று மாதம் அவகாசம்!

0

வருங்கால வைப்புநிதி திட்டத்தில் சேராத நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் சேர 3 மாத சிறப்பு முகாம் நடைபெற்று வருவதாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதியின் சென்னை மண்டல ஆணையர் சலீல் சங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்திட்டத்தில் சேர “தொழிலாளர் சேர்க்கை முகாம் – 2017” இம்மாதம் 1 – ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 31 – ம் தேதி வரை நடைபெறும் என்று கூறினார்.

20 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் சேராத பட்சத்தில் அந்த நிறுவனங்களுக்கு இத்திட்டத்தில் சேர இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2009 – ம் ஆண்டு ஏப்ரல் முதல் 31.12.2016 – ம் ஆண்டு வரை வருங்கால வைப்புநிதியில் சேரத் தகுதியான ஆனால் சேராத தொழிலாளர்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய படிவத்தின் மூலம் அத்தொழிலாளர்களை வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக தகுதியாகும் தேதியைக் குறிப்பிட்டு தகுந்த படிவத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக சேர்க்கலாம் என்று அவர் கூறினார்.

ஒரு தொழிலாளரை உறுப்பினராகச் சேர்த்தபின், அந்த நிறுவனதாரர் அவர் பங்கையும் தொழிலாளர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பங்கையும் வட்டி மற்றும் சேதத் தொகையையும் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தொழிலாளர் பங்கை அவரது சம்பளத்திலிருந்து நிறுவனதாரர் பிடிக்கவில்லை என்றால் அப் பங்கை அவர் கட்டத் தேவையில்லை என்று சலீல் சங்கர் தெரிவித்தார். சிறப்பு முகாம் வாயிலாக சேர்க்கப்பட்ட தொழிலாளர்களின் பங்கிற்கான அபராத தொகையாக நிறுவனத்திடமிருந்து ஏற்கனவே கட்டாத வருடத்திற்காக ரூ.1 மட்டும் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் உள்ள மூன்று மண்டல அலுவலகங்களில் மொத்தம் 22,000 நிறுவனங்கள் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் இணைந்துள்ளது என்றும் கூறிய அவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து தொழிலாளர் வைப்புநிதி மற்றும் ஓய்வு ஊதியப் பயன்களை பெறுவதற்காகவே தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக ஆணையர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியல் துப்புறவுத் தொழிலிலும் பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் சேராத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ள பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் ஊழியர்களை இத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சிறப்புத் திட்டத்தின் வாய்ப்பை பயன்படுத்த தவறிய நிறுவனதாரர்கள் பின்னர் வரும் நாட்களில் வருங்கால வைப்புநிதிப் பிரிவுகளுக்கு மாறாகச் செயல்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வைப்புநிதிச் சட்டப்பிரிவின் கீழ் சிறைவாசம் மற்றும் அபராதங்களுக்கு உட்படுத்தப்படுவர் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் மந்திரி வேலைவாய்ப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தை (பி.எம்.ஆர்.பி.ஒய்) விவரித்த ஆணையர், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் பதிவு செய்த நிறுவனதாரர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பான தகவல்களையும் தெரிவித்தார். இத்திட்டம் 09.08.2016 முதல் 2019-20 ஆண்டு அமலில் இருக்கும் என்றும் நிறுவனதாரர் பங்கான 8.33 சதவீதத்தை மத்திய அரசே ஏற்கும் என்று அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களும் தங்களது பயன்களை துரிதமாகப் பெற்றுக்கொள்ள ஏதுவாக ஆதார் எண்ணைக் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.