140 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய வறட்சி- தமிழ்நாட்டில் இந்த நிலைக்குக் காரணம் என்ன?

0

இயற்கையின் கோபத்தால் தாக்கப்பட்டு பட்டினியாக கிடக்கும் கால்நடைகள், மனிதர்களால் ஏற்பட்ட அவலநிலை, அதிகமாக சுரண்டப்படும் வளங்கள், நிதி பற்றாக்குறை, வறண்ட நிலங்கள் என வறட்சியால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களை தற்காத்துக்கொள்ள விவசாயிகள் போராடுகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கதறும் தமிழக விவசாயி
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கதறும் தமிழக விவசாயி

ஐம்பது வருட பணி வாழ்க்கை அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் அளித்ததெல்லாம் ஒரு வீடு, போதுமான உணவு, ஐந்து ஏக்கர் விளைநிலம். இன்று 70 வயதான ஜோசப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஆர்கானிக் வேளாண்மையைத் தொடர போராடிக் கொண்டிருக்கிறார். 

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் குறைவான மழையினாலும் மேகதாது அணை கட்டுமானத்தாலும், பைப்லைனின் குறைவான நீரினாலும் அவரது நிலம் வறண்டுள்ளது. ஒரு காலத்தில் அவர் தனது பகுதியில் அரிசி, சீரகம் ஆகியவற்றின் முன்னனி விற்பனையாளராக இருந்தார். இன்று உயிர் வாழ அற்பமான ஓய்வூதியத் தொகையையே சார்ந்துள்ளார்.

ஜோசப்பிற்கு அருகில் வசிப்பவர் குமார். இவர் 85 வயதான நோய்வாய்ப்பட்ட அம்மாவை பராமரிக்கவும் கூட்டுக்குடும்பத்தை நிர்வகிக்கவும் போராடி வருகிறார். 

”கிணறு அல்லது போர்வெல் தோண்டினால் 16 அடிக்கு பிறகு உப்புத்தண்ணீர் தான் கிடைக்கிறது.” என்று புலம்புகிறார். 

விவசாயக் குடும்பத்தில் வளர்ந்து பல்வேறு பயிர் நுட்பங்களைத் தெரிந்துவைத்திருப்பதால் சந்தையில் இவரது மாம்பழத்தை வாங்க கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் நீண்ட வரிசையில் நிற்பார்கள். தற்போது தொடர்ந்து பருவமழை இல்லாத காரணத்தால் அவரது மாட்டிற்கே போதுமான தண்ணீர் மிஞ்சுவதில்லை. அரசாங்கத்தின் வாக்குறுதி குறித்து கூறுகையில், “சில நாட்களுக்கு முன் காப்பீடும் நிவாரணமும் அளிப்பதாக உறுதியளித்தனர். ஆனால் அவை இன்று வரை கானல் நீராகவே இருந்து வருகிறது.” என்றார்.

140 வருடங்களில் இல்லாத மோசமான வறட்சியால் தமிழ்நாட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரை முறையாக நிர்வகிக்காததும் குறைவான மழையும்தான் விவசாயிகளின் நெருக்கடிக்கு முக்கியக் காரணம்

கடந்த நான்காண்டுகளில் தமிழகம் இயற்கையின் கோபத்தை வெவ்வேறு வடிவங்களில் கண்டுள்ளது. 2015-ம் ஆண்டின் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது. 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான கனமழை என்று குறிப்பிடப்பட்டது. அதன் பிறகு புயல். இந்த வருடம் மழையில்லாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தண்ணீர் எப்போதுமே சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது. பெரும்பாலான தண்ணீர் தேவைக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழையையே தமிழகம் நம்பியுள்ளது. பத்து நாட்கள் காலதாமதத்திற்கு பிறகு 2016-ம் ஆண்டின் பருவமழை தற்காலிக மழையாகவே பொழிந்து 62 சதவீத பற்றாக்குறையை ஏற்பட்டது.

எனவே நீர்த்தேக்கங்கள் அதன் கொள்ளளவில் வெறும் 20 சதவீதத்துடன் மட்டுமே காணப்படுகிறது. மிகப்பெரிய பாசன அணையான மேட்டூரில் 93,470 M.cft எதிராக 120 அடியும் பூண்டியில் அதிகபட்ச குடிநீர் அளவு 3,231 M.Cft எதிராக 35 அடியும் உள்ளது. இதனால் பயிர்கள் நாசமாகி விவசாயிகளின் கடன் அதிகரித்ததால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

எனினும் தற்போதைய நெருக்கடிகளுக்கு மழைப்பொழிவு இல்லாததை மட்டுமே குற்றம் சாட்ட முடியாது.

2015-ம் ஆண்டில் 67 செ.மீட்டருடன் மிகுதியான மழை தமிழ்நாட்டில் பொழிந்தது. இது எதிர்பார்த்த அளவை விட 53 சதவீதம் அதிகமாகும். மேலும் 2004 முதல் 2012 வரையிலான ஒன்பதாண்டுகளில் தமிழ்நாட்டில் தொடர்ந்து சராசரியான மழைப்பொழிவு காணப்பட்டது. இருந்தும் நீர் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளாத காரணத்தினாலும் ஏரிகள் பராமரித்து மீட்கப்படாததாலும் தீவிர தண்ணீர் பிரச்சனை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. நிலத்தடிநீர் ரீசார்ஜ் செய்வதற்கு மழை மட்டும் போதாது.

விழுப்புரம் மாவட்ட விவசாயி முத்துலட்சுமி. பட உதவி: MSSRF
விழுப்புரம் மாவட்ட விவசாயி முத்துலட்சுமி. பட உதவி: MSSRF

எம் எஸ் சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் மற்றும் விஏ டெக் WABAG ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன் 2015-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழைக்கு சற்று முன்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கிணறுகள் சீரமைக்கும் பணி நடைபெற்றது. சரியான நேரத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சீரமைக்கப்பட்ட கிணறுகளில் சேமிப்புத் திறன் அதிகரித்தது. இதன் காரணமாக 45 திறந்த கிணறுகள் சீரமைக்கப்பட்டு ஆறு கிராமங்களைச் சேர்ந்த 71 சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பயனடைந்தனர். பயிரிடப்படும் நிலப்பகுதியும் மும்மடங்காக அதிகரித்தது.

”கடந்த இரண்டாண்டுகளாக குறைவான மழையிருந்தபோதும் அவர்களால் அந்தக் கிணற்றின் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. நீர் மேலாண்மையாகட்டும் புதிய பயிரிடும் முறையாகட்டும் விவசாயிகள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர். அறிவியல் சமூகத்துடன் இணையவேண்டும்,” 

என்கிறார் எம் எஸ் சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஊடக மையத்தின் தலைவரான ஜெயஸ்ரீ.

 சீரமைக்கப்பட்ட கிணறுகள் மூலம் பயனடைந்த விவசாயிகள். பட உதவி: MSSRF
 சீரமைக்கப்பட்ட கிணறுகள் மூலம் பயனடைந்த விவசாயிகள். பட உதவி: MSSRF

தொழில்நுட்ப பாதுகாப்பு வலை அவசியம்

விவசாயிகளின் துயரங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஒவ்வொரு வருடமும் பயிர்கள் விளைச்சலில்லாமல் போவதற்கு மாநிலம் மோசமான பருவநிலையை மட்டுமே காரணம் காட்டுவது முறையல்ல. முறையான பாசன முறையில்லாததும் மாற்று நீர் ஆதாரங்களுக்கான வழியில்லாததும் மிகப்பெரிய சவாலாக இருந்துவருகிறது. மேலும் பருவநிலை மாற்றம் மற்றும் வளங்கள் அதிகமாக சுரண்டப்படுதல் ஆகியவற்றின் காரணமாக கடலின் நீரோட்டங்களிலும் காற்று அமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் பருவமழை தாமதிப்பதுடன் குறைவான மழைப்பொழிவிற்கும் காரணமாகிறது.

”விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்ளவதற்கான தேவை உள்ளது. போர் வீரர்களுக்கு தற்காப்பு சாதனங்களை அளிக்கும் நரேந்திர மோடி விவசாயிகளுக்கும் விவசாய சாதனங்களை வழங்கலாம்,”

என்கிறார் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி செங்கல் ரெட்டி.

பட உதவி: படிக்காசு நாகராஜ்
பட உதவி: படிக்காசு நாகராஜ்

தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் ஆய்வுகளைக் கொண்டு வறட்சியை கணிப்பதுடன் பயிர் அழுத்த நிலையையும் கண்டறிய முடியும். இதனால் விவசாயிகளின் வளங்கள் மற்றும் நிலப்பரப்புகளுக்கேற்ப ஒவ்வொருவருக்கான தனிப்பட்ட தீர்வுகளை வழங்கமுடியும்.

”செயற்கைக்கோள் தரவுகள் வாயிலாக செடிகளில் காணப்படும் உண்மையான நீரின் அளவை கண்டறியலாம். பயிரின் வலிமையை தீர்மானிக்கலாம். அழுத்தப்படும் மற்றும் அழுத்தப்படாத பகுதிகளை கண்டறியலாம். இந்தத் தகவல்களுக்கு ஏற்றவாறு பாசனத்தை திட்டமிடலாம்,” 

என்கிறார் சேட்டிலைட் டேட்டா அனாலிடிக்ஸ் நிறுவனமான Satsure நிறுவனத்தின் நிறுவனர் அபிஷேக் ராஜு. பிக் டேட்டா வாயிலாக ஒரு முழுமையான தேவை மற்றும் விநியோக சங்கிலியை அமைக்கலாம். இதனால் அரசாங்கமும் விவசாய சமூகத்தினரும் வறட்சியை எதிர்கொள்ள முன்னரே தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளலாம்.

கடன்களை தள்ளுபடி செய்வது வறட்சிக்கான தீர்வு அல்ல

2015-ம் ஆண்டில் 606 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமான அறிக்கையில், அவர்கள் குடும்ப பிரச்சனைகளாலும், திவாலானது/ கடன்பட்ட காரணங்களால் தான் என்று தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. அக்டோபர் 2016 முதல் 144 விவசாயிகளின் உயிர்களை பறித்துள்ளது தற்போதைய நெருக்கடி. எனினும் மாநில அரசாங்கம் விவசாயிகளின் உயிரிழப்பிற்கு கடன்தான் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உச்ச நீதிமனறத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்திலும் விவசாயிகள் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இறந்துள்ளதாக கூறப்பட்டது.

அஇஅதிமுக அரசு மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்வு, மாரடைப்பு, நாள்பட்ட நோய் போன்ற பல்வேறு காரணங்களால் உயிரிழந்த விவசாயிகளுக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு அளித்துள்ளது. 2016-17 ஆண்டிற்கு சொட்டுநீர் பாசனத்தை அறிமுகம் செய்வதற்காக 2,000 கோடி ரூபாயும் பயிர் கடன்களை 4,000 கோடி ரூபாய் வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளித்தது. எனினும் தேசிய பேரிடர் மீட்பு நிவாரண நிதிலிருந்து (NDRF) 39,565 கோடி ரூபாயை கோரியபோதும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. மத்திய அரசாங்கம் வெறும் நான்கு சதவீத தொகையான 1,710.10 கோடி ரூபாயை மட்டுமே விவசாய துயரங்களை குறைக்க அளித்தது.

மத்திய அரசாங்கத்தின் பாராமுகத்தை அடுத்து நூறு விவசாயிகள் புது டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் 41 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உணர்ச்சிப்பூர்வமான போராட்ட வடிவங்களைக் கையாண்டனர்.

”பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எம் எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும்,” 

என்கிறார் புதுடெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு தலைமையேற்ற அய்யாக்கண்ணு. மொத்த உற்பத்தி விலையுடன் குறைந்தபட்ச ஆதரவு விலையை 50 சதவீதம் அளிக்கவேண்டும் என்கிற பரிந்துரையை ஏற்று அமல்படுத்துவதே வறட்சிக்கான நீண்ட நாள் தீர்வாகும் என்று எம் எஸ் சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகள் சவமாக கிடப்பது போல் போராட்டம். பட உதவி: @protest_street
விவசாயிகள் சவமாக கிடப்பது போல் போராட்டம். பட உதவி: @protest_street

வரவிருக்கும் நெருக்கடிகளுக்கு கடன் தள்ளுபடி மட்டுமே தீர்வாகாது. “வாழ்வாதாரத்திற்கு போதுமான அளவான 1-2 ஹெக்டர் நிலம் கொண்ட விவசாயிகளில் 60 சதவீதம் பேர் மையப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கு வெளியே அதிகமான விகிதத்தில் கடன் வாங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் விளைச்சல் மோசமாக இருப்பதால் கடன் வழங்கியவர் அந்த விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துவிடுவார்கள் என எப்படி எதிர்பார்க்கமுடியும்?” என்றார் ஜெயஸ்ரீ. மாறாக அரசாங்கம் நிதி சேர்க்கும் முறையில் கவனம் செலுத்தவேண்டும். 

“காப்பீடு நமது பாதுகாப்பு வலை. சரியான நேரத்தில் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தேவையான ஆதரவு கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் மோசமான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.” என்றார் அபிஷேக். 

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் இருப்பினும் இந்தியாவில் பயிர் காப்பீடு செய்வதில் 23 சதவீதமே காணப்படுகிறது. 260 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் உள்ள நாட்டில் இந்த மிகப்பெரிய இடைவெளி கவலையளிப்பதாகவே உள்ளது.

பயிர் நிலை குறித்த அனாலிடிக்ஸ்
பயிர் நிலை குறித்த அனாலிடிக்ஸ்

முறையான இடர் மதிப்பீட்டு முறையினால் காப்பீட்டு நிறுவனங்கள், விவசாயிகள் என இருவருக்குமே நன்மை பயக்கும். செயற்கைக்கோள், பிக் டேட்டா, க்ளௌட் கம்ப்யூட்டிங், IoT தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகள் பயிரின் அழுத்த நிலையை மதிப்பிட்டு வளத்தின் இருப்பைப் பொருத்து பயிரிட உதவும். இதனால் தனிப்பட்ட விவசாயியின் ஆபத்துகளுக்கு ஏற்றவாறு காப்பீட்டு நிறுவனங்கள் சிறப்பாக ஒப்பந்தங்களை வடிவமைக்க உதவும்.

”இப்படிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்க தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை பின்பற்றி நுண்ணறிவை ஏற்படுத்தவேண்டும். அதே சமயம் அரசியல் தரப்பிலிருந்து இதை செயல்படுத்த அங்கீகாரமும் வழங்கப்படவேண்டும். தொழில்நுட்பத்துடன் கொள்கை மற்றும் அரசியல் விருப்பமும் இணைந்தால் மட்டுமே தீர்வு காண முடியும்.” என்றார் அபிஷேக்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா

Related Stories

Stories by YS TEAM TAMIL