உலக புற்றுநோய் தினம்: எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வு முடிவுகள்.. 

பரிதாப நிலையில் இந்தியப் பெண்கள்!

0

புற்றுநோய் பாதித்த பெண்கள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இந்தியா... காரணம் என்ன தெரியுமா?

உலகிலேயே கொடிய உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருந்து வருகிறது. மாறி வரும் உணவுப் பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு போன்றவை புற்றுநோய்க்கு முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும் ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே தான், ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி உலக புற்றுநோய் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.

இந்தியர்களின் நிலை :

1984-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4 லட்சமாக இருந்தது. இது கடந்த 2010ம் ஆண்டு 9 லட்சமாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2020ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 13 லட்சமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உலகளவில் புற்றுநோய் பாதித்த பெண்கள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது வேதனையளிக்கும் விசயமாகும். ஆண்டுதோறும் இந்தியாவில் புற்றுநோய்ப் பாதிப்புக்கு பெண்கள் ஆளாகும் அளவு 4.5 முதல் 5 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இது ஒருபுறம் இருக்க மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிகளவில் பெண்கள் உயிரிழக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகம், கேரளா, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில்தான், மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகளவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

விழிப்புணர்வு தேவை:

கடந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 7 லட்சம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது குறைவு என்கிறார்கள் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள். இன்னும் போதிய மருத்துவ வசதி பெறாமல், பரிசோதனைகள் செய்து கொள்ளாமல், தாங்கள் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதுகூட தெரியாமல் வாழும் பெண்களைக் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை 14 லட்சத்தைத் தொடும் என அதிர்ச்சியளிக்கிறார்கள் அவர்கள்.

இ&ஒய் மற்றும் ஃபிக்கி எப்.எல்.ஓ இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் மொத்த எண்ணிக்கையில், மார்பகப் புற்றுநோயால் 19 சதவீதத்தினரும், கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் 14 சதவீதத்தினரும், கருப்பை புற்றுநோயால் 7 சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி நமது நாட்டில் சுமார் 2000 பெண்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இதில் 1200க்கும் அதிகமான பெண்கள் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்காக செல்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு அவர்களிடம் இல்லாதது தான்.

உரிய சிகிச்சை அவசியம்:

சிலப்பல அறிகுறிகள் தோன்றியவுடனேயே மருத்துவப் பரிசோதனைகள் மூலம், ஆரம்பநிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்தால் உரிய சிகிச்சைப் பெற்று உயிரிழப்பை தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

போதிய விழிப்புணர்வு இல்லாதது, உரிய பரிசோதனைகள், மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமை, மருத்துவர், நோயாளி விகிதாச்சாரம் குறைவு போன்றவை பெண்கள் அதிகளவில் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாவதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

பெண்களின் பரிதாபநிலை:

நம் உடலில் புற்றுநோய் 4 நிலைகளில் பரவுவதாக கூறப்படுகிறது. இதில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற வருபவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். இறுதி நிலைகளில் சிகிச்சைக்காக வருபவர்கள் தான் உயிர்பிழைப்பது கடினமாகி விடுகிறது. ஆனால், நமது நாட்டில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான புற்றுநோய்ப் பாதிப்புக்குள்ளான பெண்கள், நோய் பாதிக்கப்பட்டு 3 அல்லது 4-ம் நிலையிலேயே சிகிச்சைப் பெற வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலேயே அவர்களைக் காப்பாற்றுவது கேள்விக்குறியாகி விடுகிறது.

மற்றநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய்க்கு பெண்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைப் பார்க்கும்போது இந்தியாவில் புற்றுநோய் குறித்த முழுமையான அணுகுமுறை குறித்த விழிப்புணர்வு தேவை என்பது தெரிய வருகிறது. நோயின் ஆரம்ப அறிகுறிகள் எவை என்பது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடைய வேண்டும். அதனைத் தொடர்ந்து நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் தங்கள் பாதிப்புக்குத் தகுந்த சிகிச்சைப் பெறுவதற்கான தெளிவைப் பெற வேண்டும். இவ்வாறெல்லாம் செய்வதன்மூலம், இந்தியாவில் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இயலும்.

உடல் பருமனும் காரணம்:

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டோர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது இந்தநிலை மாறி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உடல் உழைப்பு குறைந்து விட்ட சூழலில் பெரும்பாலானோர் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுவும் புற்றுநோய் ஏற்பட ஒரு முக்கியக் காரணமாகிறது.

இந்தியாவில் புற்றுநோயை கட்டுப்படுத்த, தற்காத்தல் நடவடிக்கையே மிக முக்கியமானது. புற்றுநோய்க்கு மட்டுமல்ல, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கு முக்கியக் காரணியாக உள்ள உடல்பருமன் எனும் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம்.

முறையான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வே புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவதை முன்னரே கண்டறிய வழிவகுக்கும். கடைசியாக ஆனால் முக்கியமாக அதிக செலவாகக்கூடிய புற்றுநோய்க்கான சிகிச்சைக்கான மையங்களை பல இடங்களுக்கு விரிபடுத்துவதே இந்நோயில் இருந்து நம் தேசத்தை மீட்டெடுக்க உதவும். 

ஆங்கில கட்டுரையாளர்: டாக்டர்.நமிதா பாண்டே. இவர் மார்பக புற்றுநோய் சர்ஜன். மேற்கூறிய கருத்துக்கள் இவரது சொந்தக் கருத்துக்கள். யுவர்ஸ்டோரி இதற்கு பொறுப்பேற்காது.