சூப்பர் ஹீரோக்களிடம் இருந்து தொழில்முனைவர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

2

சூப்பர் ஹீரோக்களின் கதைகளை கேட்டோ, பார்த்தோ நாம் அனைவரும் வளர்ர்ந்திருப்போம். நமது பலவீனமான தருணங்களில் அவர்களை போன்ற சக்தி இருந்திருக்கலாமே என்ற ஆசை நிச்சயம் தோன்றியிருக்கும். அவ்வாறு ஒரு வேளை தோன்றியிருக்க விட்டால், நீங்கள் ஒரு விதிவிலக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

நமது ஆர்வத்தினை தூண்டும் இவர்களது கதைகளை நுட்பமாக அலசினால், கற்றுக்கொள்ள ஏராளமாக இருப்பது புரியும்.

இதோ சில உங்களின் கவனித்திற்கு

தொடக்க கதையை சுவாரஸ்யமாக்குதல்...

அநேகமாக எல்லா சூப்பர் ஹீரோக்களின் தொடக்கமும் அசாதரணமாகவே இருக்கும். வேற்று உலகத்திலிருந்து உயிர் பிழைத்து நமது பூமிக்கு வந்தவர் சூப்பர்மேன். தனது பெற்றோர்கள் கொலையுண்டதற்கு சாட்சியாக பேட்மேன். கதிரியக்க சிலந்தியால் கடிக்கப்பட்டவர் ஸ்பைடர்மேன். இதெல்லாம் நமக்கு உணர்த்துவது என்ன? - அசாதாரண நிகழ்வுகள் நம்மை பெரிய சாதனை நோக்கி இட்டுச்செல்லும் என்பதே! சுவாரஸ்யமான ஸ்தாபக கதைகளே மாபெரும் சாதனைக்கு வழிவகுக்கும்.

இதனாலோ என்னவோ பல தொழில்முனைவர்கள் தங்களின் தொடக்கத்தை இதய பூர்வமாக அணுகுகிறார்கள். கராஜில் தொடங்கிய சிலிகான் வேலியின் தொழில்முனை நிறுவனங்கள் முதல் நம்மூரில் காபி ஷாப்பில் வித்திட்ட தொழில்முனை யோசனை வரை எல்லாவற்றிற்குமே ஒரு அசாத்திய விவரிப்பு தேவைப்படுகிறது. இந்த தொடக்கத்திற்கு நிச்சயம் ஏதோவொரு சம்பவம் காரணமாக இருந்திருக்கும்.

அந்த இழையை சுவாரஸ்யமான கதையாக்குவதன் மூலம், மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல் நிறுவனத்திற்கு தேவையான திறமையான ஆட்களுக்கும் வலை விரிக்க முடியும். (சிலந்தியை போன்று)

ஸ்திரமான முன்னோக்கு பார்வை

சூப்பர் ஹீரோக்கள் தங்களின் இலக்கை என்றுமே சுலபமாக அடையக் கூடியதாக அமைத்துக் கொண்டதில்லை. கோதம் மாநகரத்தை காக்க முயற்சிக்கும் பேட்மேன், கிரகங்கள் அனைத்தையும் காக்க நினைக்கும் சூப்பர்மேன், தன்னை எந்த ஒரு சக்தியும் அண்ட முடியாத அயர்ன்மேன் என சூப்பர் ஹீரோக்கள் அனைவருமே கடினமான சவால்களை சந்தித்து வெற்றி பெரும் சக்தியாகவே முன்னிறுத்தப்படுகிறார்கள்.

பெரிய இலக்குகளை வைத்துக் கொள்வதே தொழில்முனை நிறுவனங்களுக்கு மிக அவசியமானதாகும். இதற்கு சிறந்த இலக்கணம் ஆப்பிள் நிறுவனம். தனது பொருட்களை சமீபத்திய தொழில்நுட்பத்துடன் வடிவமைத்து வெகுஜன பயன்பாட்டிற்கு ஏற்ப கொண்டு சென்றதே அவர்களின் வெற்றிக்கு வித்திட்டது. நான்கு சுவற்றிக்குள் பாடம் பயில்வதை விடுத்து இயற்கையான சூழலில் கற்பதை சாத்தியமாக்கியதே சாந்திநிகேதன் நிறுவனத்தின் வெற்றி.

எழுச்சியூட்டும் நோக்கம் அமைத்துக் கொண்டாலே காலத்திற்கும் நிற்கும் வெற்றி சாத்தியப்பட்டு விடும்.

யார் உங்களின் எதிராளி?

வல்லமைமிக்க எதிரி இல்லையென்றால் சூப்பர் ஹீரோக்களுக்கு வேலையேது. ஃபன்டாஸ்டிக் ஃபோர் மற்றும் டாக்டர் டூம், பாட்மேன் மற்றும் ஜோக்கர், ஸ்பைடர்மேன் மற்றும் கிரீன் காப்லின், சூப்பர்மேன் மற்றும் லெக்ஸ் லுதார் - இந்த வலிமை மிக்க எதிர் சமநிலையே சூப்பர் ஹீரோக்களின் வீரத்தை மற்றும் சாகசத்தை போற்றுதலாக்கியுள்ளது .

இதே தத்துவத்தை தொழில்முன்முயற்ச்சி நிறுவனங்களுக்கு பொருத்திப் பார்த்தால், இந்நிறுவனங்கள் யாருடன் தான் போட்டி போட வேண்டும் அல்லது ஈடாக இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முறையை சரியாக கையாண்டு வெற்றி கண்ட நிறுவனம் விர்ஜின் (Virgin)நிறுவனமாகும். இந்நிறுவனம் என்றுமே தன்னை விட மிக உயரிய நிலையில் உள்ள நிறுவனத்துக்கு இணையாகவே தன்னை முன்னிறுத்தியது. எந்த தொழிலில் கால் பதித்தாலும் , தனது விர்ஜின் நோக்குடன் புதியதையும் புகுத்தியதால், வாடிக்கையாளர்களின் பேராதரவு கிட்டியது.

நம்முடைய எதிராளி யார் அல்லது யாருக்கு இணையாக நாம் இருக்க வேண்டும் என்ற தெளிவு மிக முக்கியம்.

தோள் கொடுக்கும் நண்பர்கள் முக்கியம்

சூப்பர் ஹீரோவாக இருப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. பாட்மேனுக்கு ஒரு கமிஷனர் கார்டான், சூப்பர்மேனுக்கு லாயிஸ் லேன் மற்றும் ஜிம்மி ஆல்சன் இப்படி சக்தி மிகுந்த இவர்களுக்கே அவ்வப்போது சவால்களை சந்திக்க உதவிக்கரம் தேவைப்பட்டது.

இந்த கதைகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் எத்தகைய சக்தி பெற்றிருந்தாலும், தேவைப்படும் பொழுது உதவி கேட்பதே சாலச்சிறந்தது.

நெருக்கமான சூழலில் ஆலோசனையாகட்டும், நிறுவனத்திற்கு தேவையான தகுதி நிறைந்த ஆட்களின் தெரிவாகட்டும் அல்லது நிதி சார்ந்த ஆலோசனையாகட்டும், தொழில் முனைவர்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தங்களுக்கு இது போன்ற வழிகாட்டுதல் தேவைப்படும் என்று உணர வேண்டும். தொழில்முனைதல் என்பது கடினம் தான், ஆனால் மற்றவர்களின் பங்களிப்பும் பெற்றுக் கொள்ள முடிந்து விட்டால், பாதை சுலபமானதாகிவிடும்.

பீட்டில் அவர்களின் பாடல் வரி "என் நண்பர்களின் சிறு உதவியால் நான் கடந்து செல்ல இயலும்" (I'll get by with the little help from my friends) ஒவ்வொரு தொழில்முனைவரின் நிறுவனங்களில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றால் அது மிகையல்ல.

புத்துணர்ச்சி பெறுதல்...

சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் அழுத்தமிகு சூழலில் இருந்து அவ்வப்போது தங்களை விடுவித்து கொள்வது அவசியம். சவால்கள் மிகுந்த பயணத்தில் புத்துணர்ச்சியூட்டும் செயல்களை மேற்கொள்வது அவசியம்.

பிடித்தமான விளையாட்டில் அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவதோ, பிடித்தமான இசையை பயில்வது அல்லது குறுகிய கால மலையேறுதல் போன்ற பயணங்களை மேற்கொள்வதோ தொழில்முனைவர்களை உற்சாகத்துடன் செயல்பட வைக்கும். ஹீமேன் போன்ற சக்தியை பெற்றது போன்று உணர்வீர்கள்.

தொழில் முனைவு என்பது சாகசம் மிகுந்தது. புதிதாக முயற்சி மேற்கொள்வதன் மூலம் தங்களுக்கான வெற்றிப்பாதையை அமைத்துக் கொள்ளும் அரிய சந்தர்ப்பத்தை இது ஏற்படுத்திக்கொடுக்கும்.

( சமீபத்தில் வெளியான "Lessons from the Playground" மற்றும் "The Madness starts at 9" புத்தகத்தின் எழுத்தாளர் வினய் கன்சன் அவர்களின் ஆங்கில கட்டுரையிலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டள்ளது)